பக்கம் எண் :


திருக்கூட்டச் சிறப்பு115

Periya Puranam
     வேணியர் - சைவர் - ஆதிசைவர் எனவும், வீழ்ந்த இன்பத்துறை -
சிவபெருமானிடத்திலே பதிந்து விழுந்த பேரின்பத்துறை எனவும், இவ்வாறு
பிறவும் உரைப்பாருமுளர். சைவராகிய தபோதனர் - என்றும் விரவுவாராகியும்
முனிவராயுமுள்ள மறையோர் என்றும் கூட்டி உரைப்பாருமுண்டு.
பல்வேறிடத்தது என்று கூறுவதால் இங்குக் கூறும் பலரும் பற்பல வகையினர்
என்றும், அவர் பலபல வெவ்வேறு இடங்களில் வாழத்தக்கவர் என்றும்
அறிகின்றோமாதலின் வெவ்வேறு பெயராற்கூறிய இவ்வகையினரை,
எவ்வாற்றானும் சேர்த்துக் கூறாது, வெவ்வேறு வகுப்பினராக உரைத்தலே
ஆசிரியர் கருத்தாகக் கொள்க.

     சூழ்ந்த - மொய்த்து நெருங்கிய. இடம் பலவேறாயினும் இறைவனது
பூங்கோயிலாகிய அகமலர் ஒன்றினையே இவை எல்லாம் சுற்றிச்
சூழ்ந்திருந்தன என்பதும், இங்கு வாழும் இவ்வெல்லா வகையினரும்
பூங்கோயிலுள்ளாரையே மனத்தாற் சூழ்ந்து கொண்டு வாழ்வார் என்பதும்
பெறப்படும். “அனையதனுக்கு அகமலராம் அறவனார் பூங்கோயில்“ என்று
பின்னர்க் கூறுதலும் காண்க.

     பல்வேறிடத்தது - என்றமையால் நகர அமைப்பிலே, ஒழுக்கம் -
தொழில் - குலம் - முதலிய எவ்வித வேறுபாட்டையும் பாராட்டாமல்
யாவரேனும் யாண்டாயினும் இருத்தற்குரியார் என்ற இக்காலத்துப்
புதுக்கொள்கை, முன்னாள் நகரங்கள் அமைத்த அறிவாளிகளுக்குக்
கருத்தன்று என்பதுணரப்பெறும்.

     தொன்னகர் - நகரின் தொன்மை முன்னர் முதற் பாட்டின்கீழ்
உரைக்கப்பெற்றது. வேணியர் - சைவர் முதலிய அவ்வவர்களது இருப்பிடம்
இறைவனது பூங்கோயிலுக்கு அணிமை கருதிய வரிசையிலே
அமைக்கப்பெற்றன என்க.

     இவ்வகையினராகிய பல வேறுவகைச் சைவர்களும் திருவாரூரில்
வாழ்ந்து பெருமானை வழிபட்டு வருகின்றார்கள் என்பதாம். இஃது,

“அரும ணித்தடம் பூண்முலை யரம்பையரொ டருளிப்பாடியர்
உரிமையிற் றொழுவார் உருத்திர பல்கணத்தார்
விரிசடை விரதிக ளந்தணர் சைவர்பாசு பதர்கபாலிகள்
தெருவினிற் பொலியும் திருவாரூ ரம்மானே“
                                    - சீகாமரம் - 3

எனும் அரசுகள் தேவாரத்தால் அறியலாம். இதிலே “தெருவினிற் பொலியும்“
என்று கூறிய அகநகர் வீதியையே இப்பாட்டில் ஆசிரியர் “சூழ்ந்த
பல்வேறிடத்தது“ எனக் குறித்தனர். இங்குக் குறித்த தாழ்ந்த வேணியர்,
சைவர் என்பவர்கள் சைவத்தின் உட்சமயத்தவர்களாம்.

“... சைவர் பாசுபதர்கள் வணங்கும் சண்பை நகராரே“

என்ற திருஞானசம்பந்த நாயனார் தக்கேசிப் பண் தேவாரமும் காண்க. 11

97. நிலம கட்கழ கார்தரு நீணுதற்  
  றிலக மொப்பது செம்பியர் வாழ்பதி
மலர்ம கட்குவண் டாமரை போன்மலர்ந்
தலகில் சீர்த்திரு வாரூர் விளங்குமால்.
12

     (இ-ள்.) நிலமகட்கு ... பதி - நிலமாகிய மகளுக்கு அழகு நிறைந்த
நீண்ட நெற்றியிலே திலகம் போல்வது சோழர்கள் அரசுபுரிந்து வாழும்
இந்நகரம்; மலர் மகட்கு ... விளங்குமால் - (அதனோடு) மலர்மகளுக்கு
(உறையுளாகிய) வளமுடைய தாமரைபோல மலர்ந்து அளவில்லாத சிறப்புடைய
இத்திருவாரூர் விளங்கும்.

     இதுமேலே கூறிய புறநகர் - இடைநகர் - உண்ணகர்ச் சிறப்புக்களை
எல்லாம் தொகுத் துரைப்பது.