பக்கம் எண் :


திருக்கூட்டச் சிறப்பு137

Periya Puranam
வைக்கப்பட்ட என்றது செயப்படு பொருள் செய்ததுபோலக் கூறப்பட்டது.
தூக்கிய எனும் சொல் எதுகைநோக்கித் தூங்கிய என மாறித் தன்வினையாக
வந்தது என்றுங் கூறுவர். மேற்பாட்டின் உரையிற் குறித்த அரசுகள்
தேவாரத்திலும் “கடை தூங்கு மணியை“ என்றது காண்க.

     மணியைக் கோட்டால் துளக்கியது
- தனது துயரத்தை அரசனுக்கு
அறிவித்து அதற்குத் தீர்வு தேடிக்கொள்ளும் பொருட்டுச் “சென்று மணியைக்
கோட்டினாற் புடைத்தது“ என்று (112) கூறிய ஆசிரியர் இங்கு
முன்னிகழ்ச்சியையும் அதுபற்றிய பசுவின் செய்கையையும் அறியாத வாயிற்
காவலாளர் வாக்கில் வைத்துக் கூறினாராதலின் புடைத்து என்னாது
துளக்கியது என்றார். புடைத்தல் - அடித்தல்; துளக்குதல் - அசைத்தல்.

     காவலர் - அரச அரண்மனை வாயிற்காவல் செய்வோர். இவர்கள்
முன்னிகழ்ச்சியை அறியாராதலாலும், கண்டது கொண்டு காணாதவற்றை
அறியும் ஆற்றல் இல்லாதவராதலாலும், ஓசை கேட்டு அரசன் நண்ணியபோது,
மணி ஓசைக்குத் தாம் கண்டதே காரணமாக் கொண்டு இவ்வாறு உரைத்துக்,
கவலை கொள்ளத்தக்க பொருள் வேறொன்றுமில்லை என்று குறித்தனர். இது
கேட்டும், பசுவைக் கண்டும், மணி ஓசைக்குக் காரணம் பசுத் துளக்கியது
ஆயினும், அது துளக்கியதற்குக் காரணம் யாது? என்றறிய அரசன் மனத்தே
கவலை கொண்டவனாய், அதனை உணர்த்தவல்லார் மதிநூல்வல்ல
அமைச்சரே யாதலின், மேலும் காவலரை நோக்காது, அமைச்சரை
நோக்கினான்.

     மனவுணர்வில்லாத பசு மணியை எப்படி அடிக்கக்கூடும்? எனின்,

     1. மனிதர் தன் வரவு காணாவண்ணம் கன்றைச் செலுத்தியும், மனிதர்
காட்சிப் புலனை மறைத்தும், செய்வித்தது இறைவனது திரோதான சத்தியாகிய
மறைப்புச் சத்தியேயாகும். அதுவே பசுவையும் இப்படி அடிக்கச் செய்தது.

     2. இறைவனுடைய நீதி என்கிற அறக்கடவுளே இவ்வாறு பசுவாய்
வந்தது - என்ற வரலாறும் காணப்பெறும். “தனிபெருந் தருமம்“ (22)
என்றதுங் காண்க.

     3. புண்ணிய பாவங்களுக்கு ஈடாக ஒரு ஆன்மா பலபல உடலெடுக்கும்.
“இயக்கர் கின்னரர்“ என்னும் சுந்தரமூர்த்திகள் தேவாரத்தாலும்,
மாபுராணங்களாலும், புலி, வானரம், நாகம், ஈ, எறும்பு முதலிய
அஃறிணைகளும் பூர்வ சென்மத்தில் எஞ்சிநின்ற கருமங்காரணமாக இழிந்த
பிறவியடைந்தாலும், புண்ணியச் சிறப்பினால் ஈசனை அறிந்து பூசை செய்தன
என்று அறிகின்றோம். இவ்வாறு அறிவு விசேடித்த அஃறிணை உயிர்களும்
உண்டு என்பது அறியப்படுகின்றபடியால் அதுபோலவே இப்பசுவும் ஆம்.

     அஃறிணையாய் நில்லாமல் இப்பசு அறிவு விசேடத்தினாற் சிறந்த
உயிரென்று அரசன் முடித்துக் காட்டியதை 125-வது பாட்டிற் காண்க. 29

115. மன்னவ னதனைக் கேளா வருந்திய பசுவை
                                 நோக்கி
 
  என்னிதற் குற்ற தென்பா னமைச்சரை யிகழ்ந்து
                                 நோக்க
முன்னுற நிகழ்ந்த வெல்லா மறிந்துளான் முதிர்ந்த
                                கேள்வித்
தொன்னெறி யமைச்சன் மன்னன் றாளிணை
                        தொழுதுசொல்வான்.
30

     (இ-ள்.) மன்னவன்...நோக்க - அரசன் காவலாளர் சொன்னதைக்
கேட்டும், தன்முன்னர் வருந்தி நின்ற பசுவை நோக்கியும், அதன் பின்னர்
இதற்கு என்ன நேர்ந்தது என்று கேட்டு அறியும் விருப்பத்தாலே அங்கு
நின்ற அமைச்சர்களை இகழ்ச்சியோடு நோக்கினான். அவ்வாறு நோக்க;
முன்னுற.....சொல்வான் - முன்னமே இந்நிகழ்ச்சி முழுவதும் அறிந்தவனாகிய
தொன்னெறி அமைச்சன் அரசனை வணங்கிப் பின்வருமாறு
சொல்வானாயினன்.