|
மாக்கள்
- ஆணவமாகிய அக இருளில் மூடப்பட்டார் நன்மை தீமை
நாடி யறியும் அறிவு இல்லாதவராதலின் மாக்களே ஆவர் என்பார்
ஐயறிவுடையவற்றின் பெயராகிய மாக்கள் என்ற பெயரால் கூறினார். “மாவு
மாக்களு மையறிவினவே” என்பதிலக்கணம். மாக்களை மக்களாக்குந்
தன்மையுடையது இப் புராணமென்க.
சார்ந்து
- நின்ற - பொங்கிய - சார்தல் - நிற்றல் - பொங்குதல் என
மூன்றும் இருள்மலம் என்னும் ஆணவமாகிய மூலமலத்தின் செய்கை.
சார்தல் - அநாதியே பந்தித்தல் - சார்ந்ததன்
வண்ணமாகிய
உயிர்களைத் தன்வயமாக்குவது.“ஆணவத்தோ டத்துவித
மானபடி” என்ற
திருவாக்கும் காண்க.
நிற்றல்
- திருவருள் வெளிப்படும் வரையில் உயிர்களுடன் சேர்ந்து
நிற்றலாம்.
பொங்குதல்
- தன் செயலைப் பல சத்திகளாலும் செய்துகொண்டு
உயிர்களைப் பிறவிகளில் மேன்மேலும் செலுத்துதல்.
நீக்கும்
- உயிரறிவை மறைக்க மாட்டாமற் செய்யும்.
பாயிரமாகிய
இப்பகுதியில் முதற்பாட்டு இறைவன் திருமொழியும்
இரண்டாவது பாட்டு அவன் துதியுமாம். மூன்றாவது பாட்டு காப்புக் கடவுள்
வணக்கமாம். நான்காவது பாட்டு நூல் நுதலிய பொருளைக் கூறிற்று. 5, 6,
7ஆவது திருப்பாட்டுக்கள் அவையடக்கம் கூறுவன. 8ஆவது பாட்டு நூல்
செய்வித்தார் பெயரும் அவைக் களமுங் காலமுங்கூறிற்று. 9ஆவது பாட்டு
நூல் வந்த வழியையும், 10ஆவது பாட்டு நூற்பெயரையும்,
சிந்தையிருளைப்போக்குதல் என்ற நூற்பயனையும் அறிவிப்பனவாம்.
இன்றமிழ்ச் செய்யுளாய் என்றதால் மூன்றாவது பாட்டில் நூல்வழங்கும்
எல்லை தமிழ் உலகத்தின் எல்லையே என்றுங் கூறியபடியாம். என்பாம் -
புகல்வாம் - என்ற வினைகளுக்குத் தோன்றா எழுவாய் “சேக்கிழார்”
ஆசிரியர் என நூல் செய்தாரையும் குறித்தவாறாம்.
“ஆக்கியோன்
பெயரே வழியே எல்லை, நூற்பெயர் யாப்பே நுதலிய
பொருளே கேட்போர் பயனோ டாயெண் பொருளும், வாய்ப்பக் காட்டல்
பாயிரத் தியல்பே”என்பது இலக்கணம். 10
பாயிரம்
முற்றிற்று
குறிப்பு :- பெரிய
புராணம், பரமசிவனருட்பத்தி ஞானநெறிச் சென்ற
வித்தகரான வுண்மை நாயன்மார் கருமஞான வருளொழுக்கஞ் சரித்திரத்தில்
வைத்துணர்த்துந் திருவருட் காவியமாம். இதன்கண்
அகம்புறமென்
றிருதிறத்துப் பதினாற்றிணை வழக்கும், மனு முதலிய வான்றோர் வகுத்த
வருண வாச்சிரம வழக்கும், புறநெறிச் சமயப் பூர்வ பக்க வழக்கும்,
அகநெறிச் சமயவாசார வழக்கும், வைதிக சைவ மெய்ந்நெறி வழக்கும்,
உண்மைச் சரியை வழக்கும், உண்மைக் கிரியை வழக்கும், உண்மை யோக
வழக்கும், உண்மை ஞான வழக்கும், குருலிங்க சங்கம வழிபாட்டு வழக்கும்,
ஒட்பமுந் திட்பமு நுட்பமும் பொருந்தி யுவமனின்றாமா றோதப்பட்டன.
இஃதிப் பெருமை யெல்லாமொருங் குடைத்தாய்ச் சிறப்புறுதலி னன்றே,
இதனைத் திருச்சிற்றம்பல மகா சந்நிதி யரங்கிருந்து கேட்ட வளவர்
பிரானாகிய அநபாய வேந்தன் இஃதருண்மொழி யென்று கொண்டு,
இஃதியற்றியருளிய சேக்கிழாருக்குத் தொண்டர் சீர் பரவுவா ரென்னுஞ்
சிறப்புப்பெயர் வழங்கி, யிதனைப் பதினொரு திருமுறைகளோ டொன்றென
வைத்துப் பன்னிரண்டாந் திருமுறை யென்று போற்றினானென்பது -
திராவிடப் பிரகாசிகை.
|