பக்கம் எண் :


154 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

Periya Puranam
     (இ-ள்.) தண் அளி...பொழிந்தார் - மிகுந்த கருணைபொருந்திய
வெண்கொற்றக் குடையினையுடைய மனு அரசனது செயற்கரிய செயலைக்
கண்டு ஆற்றமாட்டதவர்களாய் மண்ணுலகத்தவர்களாகிய மக்கள் கண்ணீரை
மழையாகப் பொழிந்தார்கள்; விண்ணுலகத்தவர்களாகிய தேவர்கள் புதிய
கற்பகப்பூமழை சொரிந்தார்கள்; அண்ணல்...வீதிவிடங்கப் பெருமான் - மிகப்
பெருமையுடையானாகிய அவ்வரசன் கண்முன்னே காட்சி கொடுத்துத்
தேவர்கள் தொழும்படியாக எழுந்தருளி நின்றார் வீதிவிடங்கப்
பெருமானாகிய தியாகேசர்.

     (வி-ரை.) தண்ணளி - தடைபடாது எல்லா உயிர்களிடத்தும் செல்லும்
குளிர்ந்து கருணை. “எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகலான்“
என்றார் நாயனார். இங்கு அரசன் கருணை காரணமாக அது நிகழ்ந்ததால்
“தண் அளிவேந்தன்“ என்றார். என்னை? இச்செயல் அரச குமாரனிடத்தும்
கருணையால் நிகழ்ந்ததோ? எனின், அதுவும் அவன்மேல் வைத்த,
அவனுயிர்க்கு உறுதிதரும் அளியினாலேதான் என்பது மேற்பாட்டின்
உரையில் காட்டப்பெற்றது. இஃது அரச தண்டனையினோடு அடியார் விதித்த
தண்டனையுமாம். இவ்வரசர் பேரடியார் என்பது அவர் சிவாலயங்களுக்கு
ஆகமவிதிவழி நிபந்தமாராய்ந்து, அவற்றின் வழியே தானும் பூசித்து
வந்தமையாலும், தியாகேசர் எழுந்தருளிய திருவாரூரிலே பிறந்த உயிரைக்
கொன்றது பெரும்பாவம் என்று உணர்ந்தமையாலும் துணிக. இதனாலன்றோ
இவர் சரிதம் அடியார் சரிதங் கூறும் இப்புராணத்தின் தலைப்பிலே
கூறப்பெற்றது. இவர், இறைவனை நீதிவடிவுடையவராகக்கொண்டு அவனது
நீதியினையே வணங்கி உறுதியை யடைந்தவர். இறைவனுக்குரிய
திருவடிவங்களிலே மிகச் சிறந்தது நீதியின் வடிவமே என்பது,

“இன்னவுரு வின்னநிற மென்றறிவ தேலரிது நீதிபலவும்
தன்னதுரு வாமென மிகுத்ததவ நீதியொடு தானமர்விடம் ...“
 - திருஞானசம்பந்தர் தேவாரம் - சாதாரி - திருவைகா - 4.

என்பதனாற் காண்க. அடியார்கள் விதிக்கும் தண்டனையும் பெரும்
பிராயச்சித்தமாகி உயிரைச் சுத்தமாக்குமென்பது சண்டேசுர நாயனார் விதித்த
தண்டனையினால், அவர் பிதா எச்சதத்தன், கழுவாயில்லாத சிவாபராதமாகிய
பெரும் பாதகத்தினின்றும் நீங்கிக் சிவலோக மடைந்ததனாற் காண்க.

“ஞால மறியப் பிழைபுரிந்து நம்ப ரருளா னான்மறையின்
சீலந் திகழுஞ் சேய்ஞலூர்ப் பிள்ளை யார்தந் திருக்கையிற்
கோல மழுவா லேறுண்டு குற்ற நீங்கிச் சுற்றமுடன்
மூல முதல்வர் சிவலோக மெய்தப் பெற்றான் முதுமறையோன்“
                                   - சண்டீசர் புரா - 58

     இயற்கை நாயனார் விதித்த தண்டனையினால் அவருடன் பொருத
சுற்றத்தார்களும் நற்கதி யடைந்தார்கள் என்றும் காண்கிறோம். “ஏனைய
சுற்றத்தாரும் வானிடை யின்பம் பெற்றார்“ - (இயற்பகை - புரா - 35).
இப்பெருமை கருதியே இதற்கு முன்னும் இங்கும் வேந்தன் என்றவா,
அரசனைப் பின்னர் “அண்ணல்“ என்று கூறுதல் காண்க.

     வெண்குடை - இது அரச அடையாளங்களில் ஒன்று என்பதும், இதன்
இயல்பும் முன்னரே குறிக்கப்பட்டன. இதன்கீழ் உலகம் துன்பத்தினின்றும்
ஒதுங்கிக் குளிர்ந்து தங்கும் - என்பது வழக்கு. “அநபாயன் பொற்குடைநிழற்
குளிர்வது“ என்று முன்னர்க் கூறியது காண்க.