பக்கம் எண் :


தடுத்தாட்கொண்ட புராணம் 177

Periya Puranam
“அஞ்சுவ தியாதொன்று மில்லை அஞ்ச வருவதும் இல்லை“

என்பதும் அப்பர் சுவாமிகள் ஆணை. “....நாணிலமண் பதகருடன், ஒன்றிய
மன் னவனசூட்சி திருத்தொண்டின் உறைப்பாலே, வென்றவர்....“ என்றது
இங்கு உணரத்தக்கது.

     கோதிலாத குணப்பெருங் குன்று - “குணமென்னுங் குன்றேறி
நின்றார்“ என்றார் திருவள்ளுவரும். கோதிலாத குணமென்றது
திருக்கூட்டத்தில் உள்ள அடியார்களுக்கு உரியனவாய் இப்பகுதியிலே
ஆசிரியர் தாமே அருளிச்செய்தலில் இங்கு விவரிக்கவில்லை. அக்குணங்களிற்
சலியாமையும் நிலைபேறும் மிக்கது பற்றி்ப் பெருங்குன்று என்றார்.
“எம்பிரானுக்கு ஆனபணி ஆசிலா நல்லறமாவது அறிய வருமோ உமக்கு“
என்று தண்டியடிகள் நாயனார் திருவாரூர்ச் சமணர்களைத் தேற்றி
யருளினமையும், சண்டேசுர நாயனார் தந்தையைத் தடிந்தமையும், எறிபத்த
நாயனார் யானையையும் பாகரையுங் கொன்றமையும், இன்னும் இவைபோல
இப்புராணத்து வருவனவும் சிவபுண்ணியமாகிய நல்வினையே ஆயின கருத்து
இங்கே உய்த்துணரற்பாலது. “குணமென்னுங் குன்றேறி“ என்னுங் குறளிற்
பேசிய நீத்தார்களாகிய முனிவர்களினும் மேம்பட்டு விளங்குவது அடியார்கள்
தன்மை. ஆதலின் இது பெருங்குன்று எனப் பெற்றது. 7

143. கேடு மாக்கமுங் கெட்ட திருவினார்  
  ஒடுஞ் செம்பொனு மொக்கவே நோக்குவார்
கூடு மன்பினிற் கும்பிட லேயன்றி
வீடும் வேண்டா விறலின் விளங்கினார்.
8

    (இ-ள்.) கேடும்....திருவினார் - குறைவதும் மிகுவது மில்லாத நிலைத்த
ஐசுவரியத்தை உடையவர்கள்; ஓடும்...நோக்குவார் - மண் ஓட்டையும் பசும்
பொன்னையும் ஒன்று போலவே காண்பவர்கள்; கூடும்...விளங்கினார் -
(இறைவனை மனத்திலே) கூட்டி வைக்கும் அன்பு மேலீட்டினாலே அவனைக்
கும்பிடும் பிறப்பு ஒன்றேயன்றி வீட்டையும் விரும்பாத வன்மையுடையார்.

     (வி-ரை.) கேடும் ஆக்கமும் கெடுதல் - எக்காலத்தும்
மிகுதிப்பாடாவது குறைவுபாடாவது இல்லாமல் என்றும் ஒருபடித்தாகவே
நிலைத்திருத்தல். இது இவர்கள் அடைந்த திரு (செல்வம்)வின் இயல்பு.
உலகிலே ஏனைய மாக்கள் செல்வமாக எண்ணுகினற் மற்ற ஐசுவரியங்கள்
போலல்லாமல் வறுமையாலும் செல்வத்தாலும் வரும் துன்ப இன்ப
முனைப்புக்கள் இந்தத் திருவினிடத்தே செயற்படாமற் கெட்டொழியும்.
ஆதலின் கெட்ட என்றார். இத்திருவின் இயல்பும் மற்ற உலகங்களின்
ஏனைய இயல்பும் இளையான்குடி மாறநாயனார் புராணத்தும் பிற இடத்துங்
காண்க.

     திரு - இது இறைவனது தன்மையாய் எக்காலத்தும் இன்பமாகவே
நிற்கும்நிலை. இதுவே ஈசுவரத் தன்மை - ஐசுவரியம் - எனப் பெயர் பெறும்.
“இறவாத இன்ப அன்பு“ என்பதும் இது.

     ஓடும் செம்பொனும் ஒக்கவே நோக்குதல் - ஓடு - பிச்சைபுக்கு
உண்ணும்நிலையும் செம்பொன் - செல்வ நிலையும் குறித்தன. ஓடு - பிச்சை
ஓடு. வறுமையையாரும் வெறுப்பர்; செல்வத்தை யாரும் விரும்புவர்.
அடியவர்கள் இவ்வாறன்றி இவ்விரண்டு நிலையிலும் மனம் மாறாது ஒன்று
போலவே நின்று தம்பணிசெய்து நிற்பர்.

“செல்வ மேவிய நாளி லிச்செயல் செய்வ தன்றியும் மெய்யினால்
அல்ல னல்குர வான போதிலும் வல்லர்...“

                               - இளையான் - புரா - 6.