பக்கம் எண் :


திருமலைச்சிறப்பு31

Periya Puranam

     “கோவினுக் கருங்கலம் கோட்ட மில்லது” என்பது தேவாரம்.

     திருமனம் - திரு - மோட்ச சாம்பிராச்சியமான ஐசுவரியம். “திருநின்ற
செம்மையே செம்மையாக் கொண்ட” என்றபிரமாணத்துட் காண்க. அசைதலே
தன்மையாக் கொண்ட மனம் சிவபெருமானைப் பதித்தபடியால் அசையாமல்
நின்று அசலத்துக்கு ஒப்பாயிற்று.

     சிலம்பு - இயற்கையாலே அசையாதது சிறப்பன்று; சலிப்புள்ள மனம்
தன் இயல்பிற்கு மாறாய்ச் சலிப்பில்லாமல் நிற்பது அதனிலும் சிறப்பாம்
என்பது குறிப்பு. தன்மை - பெருமை - தூய்மைகள் இவ்விரண்டிடத்தும்
பொதுத்தன்மைகளாம் என்க.

     ஒங்கும் - ஒங்கும் என நிகழ்காலத்தாற் கூறினார்.“வேந்தனு
மோங்குக
” என்றபடி. அநபாயரை வாழத்தியவாறு மாயிற்று.  12
                           
வேறு

23. அன்ன தன்றிருத் தாழ்வரை யின்னிடத்
 
  தின்ன தன்மைய னென்றறி யாச்சிவன்
றன்னை யேயுணர்ந் தார்வந் தழைக்கின்றான்
உன்ன ருஞ்சீ ருபமன் னியமுனி.
13

     (இ-ள்.) அன்னதன் ... இடத்து - மேலே கூறிய தன்மைகளைப்
பொருந்திய கயிலாய மலையின் சாரலினிடத்தே; இன்ன ... தன்னையே -
இப்படிப்பட்ட தன்மையுடையான் என்று யாவராலும் அறியப்படாதவராகிய
சிவபெருமானையே; உணர்ந்து ஆர்வம் தழைக்கின்றான் - உணர்ந்துகொண்டு
ஆசைபெருக அனுபவித்துக் கொண்டிருக்கிறான்; உன்னரும் சீர்
உபமன்னியமுனி - நினைத்தற்கும் அரிய சிறப்பினையுடைய உபமன்னிய
முனிவர்.

     (வி-ரை.) அதன் தாழ்வரை யிடத்து உபமன்னியமுனிவர் சிவன்
தன்னையே உணர்ந்து ஆர்வம் தழைக்கின்றான் என்க.“இன்ன தன்மையன்
என்றறியொண்ணா எம்மானை” என்பது சுந்தரமூர்த்தி நாயனார் தேவாரம்.

     அறியாச் சிவன - அறியப் பெறாத சிவன். செயப்பாட்டு
வினைப்பொருளில் வந்தது. சிவன் மனத்தா லுணர்தற்கும் வாக்கினால்
ஒதுதற்கும் அறியவன் என்பது. “உலகெலாம் உணர்ந்து ஒதற்கரியவன்” என
முதற்றிருப்பாட்டிலேயே அறிவித்தமை காண்க.

     தன்னையே - ஏகாரம் தேற்றம்; பிரிநிலையும் ஆம். சிவனையே
யன்றி வேறொருவரையும் உணராதவன் - வணங்காதவன் என்பது.

“சம்பு வின்னடித் தாமரைப் போதலால்
எம்பிரா னிறைஞ் சாய்”
(19)

என்று மேலே குறிப்பதையும் காண்க.

“மற்றோர் தெய்வம் கனவிலும் நினையாது”
                       - திருவாசகம்

“உன்னையல்லா லொருதெய்வ முள்கேன்”
                 - அப்பர் சுவாமிகள்

“சென்றுநாஞ் சிறுதெய்வஞ் சேர்வோ மல்லோஞ்
சிவபெருமான் றிருவடியே சேரப் பெற்றோம்”
                     - அப்பர் சுவாமிகள்.

“அத்தாவுன் னடியலா லரற்றா தென்நா”
     - திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்