| 286.
|
கற்பகத்தின்
பூங்கொம்போ? காமன்றன்
பெருவாழ்வோ?
|
|
| |
பொற்புடைய
புண்ணியத்தின் புண்ணியமோ?
புயல்சுமந்து
விற்குவனை பவளமலர் மதிபூத்த
விரைக்கொடியோ?
அற்புதமோ? சிவனருளோ? அறியேனென்
றதிசயித்தார்.
|
140 |
(இ-ள்.)கற்பகத்தின்
பூங்கொம்போ? (இங்கே நான் காணும்
இப்பொருள்) கற்பக மரத்தினது பூக்களோடு கூடிய கொம்போ?; காமன் தன்
பெருவாழ்வோ? - மன்மதன் தனதுபெரிய வாழ்வாய்க்கொண்ட பொருளோ?;
பொற்புடைய புண்ணியத்தின் புண்ணியமோ? - அழகு என்ற பொருள் செய்த
புண்ணியத்தின் பயனாய் விளைந்த புண்ணிய விளைவோ?; புயல் சுமந்து -
மேகத்தை மேலே சுமந்து கொண்டும்; வில் - குவளை - பவளம் - மலர் -
மதி - பூத்த விரைக் கொடியோ? - வில்லையும், நீலோற்பல மலரையும்,
பவளத்தையும், கோங்கையும், நிலாவையும் அழகு பெற அங்கங்களாகக்
கொண்டும் விளங்கு ஒரு வாசனைக் கொடியோ?; அற்புதமோ - மேலே
சொல்லிய இவைகளில் இன்னதென்றோ அல்லது இவற்றோடு அடங்காமையின்
வேறொன்றென்றோ துணியக் கூடாத அற்புதப் பொருளோ?' சிவன் அருளோ
- ஒன்றினாலும் உவமிக்கப் பெறாத) இறைவனது திருவருள்தானோ?;
அறியேன் என்று அதிசயித்தார் - இது இன்னதென்று அறியேன் என்று
அதிசயங் கொண்டார்.
(வி-ரை.)இது,
காட்சியின் பின் அற்புதத்தால், அவ்வாறு கண்ட
பொருள் இவற்றுள் எதுவோ என்று ஐயப்பட்டுக் கூறுதலாகிய ஐயம் என்ற
அகப்பொருட்டுறையாம்.
முன் இளம் பருவத்தே பரவையாரைக் கண்ட சுற்றத்தாரும்
மிக்கோரும்
மானிளம் பிணையோ என்பது முதலாகக் கண்ட இளநலங்கள் யாவும்
இப்போது அவ்வாறே முதிர்ந்து தத்தம் தொழில்களைச் செய்யவல்ல
நலங்களாய் விளங்கிய நிலையை நம்பிகள் கண்டார். அவைகளை நம்பிகள்
கண்டபடியை இப்பாட்டிற் கூறுகின்றார்.
கற்பகத்தின் பூங்கொம்போ?
- தெய்வப் பூக்களின் மணத்துடன்
இப்பொருள் விளங்குதலின் கற்பகத்தினது இனிய பூங்கொம்புதானோ?
என்றார். இனி இக்காட்சி தெய்வத்தன்மை வாய்ந்ததேயன்றி மண்ணுலகிலே
காணக்கூடியதன்று; ஆதலின் முதலில் கற்பகம் என்று நினைத்தார். கற்பகம்
நினைத்ததெல்லாம் தரும் மரம் ஆதலின் எனக்கும் அவ்வாறு அளிக்குமோ
என்ற விருப்பம் குறிப்பாகும் என்றும் கூறுவர். கற்பு + அகத்து + இன் + பூ
+ கொம்பு என்று பிரித்துக் கற்பினை அகத்தே கொண்ட இனிய பூ மலர்தற்
கிடமாகிய கொம்பு என்று ஒரு தொனிப் பொருளும் பெறுதல் காண்க.
கொம்பு என முதலிற் காட்சியிற்றோன்ற, அதன் இலக்கணம் முழுதும் இங்குக்
கொம்பு என்று கண்ட பொருளில் அமையாமை காண்டார்க்கு, அதுவோ?
அல்லது இது பெண்ணோ? என்று பின் தோன்ற, இங்ஙனம் இருபொருளும்
பெறக் கூறினார் என்க.
காமன்தன் பெருவாழ்வோ
- காமன் தான் பெருவாழ்வடைதற்குக்
காரணமாகக் கொண்டொழுகும் பொருளோ? காமன் இளம் பருவம் கற்கும்
தளியிளந்தனு இவரிடத்துப் பெற்றானாதலாலும், அதனையன்றி அவன்
ஆணை நடத்துதல் அமையாதாதலானும் அவனது பெருவாழ்வோ என்றார்.
வாழ்வுக்குக் குறிக்கோளாக (இலட்சியமாக) உள்ள பொருளை வாழ்வு என்று
உபசரித்துக் கூறினார். மங்கலம் பெருக மற்றென் வாழ்வுவந் தணைந்த
தென்ன (மெய்ப்பொருள் - புரா - 12) என்று கூறுதல்காண்க. காமன் வாழ்வு
பெற்று நிலைப்பதற்குரிய பொருள் பலவாயிருக்கவும், அவற்றுள் எல்லாம்
இது தலைமை பெற்றது என்பார் பெருவாழ்வு என்றார். திருக்கோவையா
ருரையிலே உருவளர் காமன்றன் வென்றிக் கொடி என்றது நுதல்விழிக்குத்
தோற்று உருவிழப்பதன் முன் மடியா வாணையனாய் நின்றுயர்த்த கொடியை
என்று பேராசிரியர் உரைத்த பொருள் இங்குப் பொருத்திக் கண்டு
சுவைக்கத்தக்கது.
|