|
உடம்புகள் அவ்வவற்றின்
கருமத்திற்கீடாய் வரும்; அவ்வுடம்புகளே மேலும்
கருமத்திற்குக் காரணமாயும் இருக்கும். ஆனால் சிவஞானிகளுக்கோ எனில்
பிராரத்த வினையைத் தொலைப்பதன் பொருட்டுமட்டுமே செயல் செய்யக்
காரணமாக உடம்புகள் பயன்படும். அவை மேல் விளைவுக்கு வித்தாகா.
சூரிய வெளிச்சத்திலே விளக்கு ஏற்றிச் செய்யப்படும் கிரியைகளில்
விளக்கின்காரியம் பயனற்றொழியச் சூரியஒளியி னுதவி கொண்டே அவை
செய்யப்படுவதுபோலச் சிவாஞ்ஞையாகிய அருள்நெறியிலே அதன்
முன்னிலையிற் செய்யப்படும் அந்தப் பிராரத்த அநுபவம் செயலற்று நிற்கும்.
இங்கு நம்பிகள் செயலும் அவ்வாறே காண்க.
“அவனே தானே யாகிய வந்நெறி, யேக னாகி
யிறைபணி நிற்க,
மலமாயை தன்னொடு வல்வினை யின்றே“ என்று சிவஞானபோதம்
பத்தாஞ்சூத்திரம் வகுத்தும், அதன் கீழ் “அவனருளா லல்ல தொன்றையுஞ்
செய்யா னாகவே அஞ்ஞான கன்மம் பிரவேசியா வாகலான்“ என்று
அருளியதுங் காண்க. பசுபாசங்களினியல்புகளை உள்ள வாறுணர்ந்து,
செய்வனவெல்லாம் அவனருள் வழிநின்று செய்யப்படும் செயலாகக்
கண்டுகொண் டிருப்பாராயின், அவ்விறைபணியாகிய அடிமைத்திறமுடையார்
எவ்வுடம்பினின்று எவ்வினைகளைச் செய்யினும் அவை அவர்க்குப்
பந்தமாதலில்லை; பிராரத்தவினையுந் தன்னைக் கூட்டுவிக்கும் முதலவன்
சந்நிதியில் உடலூழாய் ஒழிவதன்றி, ஏனையோர்க்குப்போல அவர்க்கு
ஆதலில்லை யாகலான், பெருங்காயமிட்டு எடுத்தொழிந்த கலத்திலே அதன்
வாசனை மங்கிப்போய் மெலிதாய் நாறுமாறுபோல, நானவ னென்றெண்ணிச்
சிவோகம்பாவனை செய்தறியும் ஞானிக்குப் பிராரத்த வினையும்
அதற்கிடமாகிய உடம்பு முதலிய மாயேயமும் வாசனை மாத்திரையாய்
மெலிதாய் வந்து தாக்குமாயினும், அவ்வழி யேறுவதாகிய ஆகாமியவினை
பிறவிக்கு வித்தாய் நிலைபெற்று முறுகுதலின்றிக் கெட்டொழியும். ஒளி
இருளைத் துரக்குமாறுபோல அவ்வுணர்வு ஆகாமியத்தைத் துரக்கும் என்று
இக்கருத்தை விரித்து மாபாடியத்திலே எமது மாதவச் சிவஞான யோகிகள்
உரைத்தருளியவற்றையுங் காண்க. விரிவு அங்குக் கண்டு கொள்க.
பின்னர் வரும் சங்கிலியார் திருமணச் செய்திகளையும்,
அங்கு
நம்பிகள் “புண்டரிகத் தவள்வனப்பைப் புறங்கண்ட தூநலத்தைக்,
கண்டுகேட் டுண்டுயிர்த்துற் றுணர்ந்திருந்தார் காதலினால்“ என்றும்
கூறும் (ஏயர்கோன் - 267) பகுதிகளையும் இவ்வாறே கண்டுகொள்க.
வெளிமுகம்
- உண்முகம் என்ற இருவகை நிலைகளையும்
குறிப்பதற்காகப் “பன்னாளும் பயில்யோகம் பரம்பரையின் விரும்பினார்“
என்று மிக அழகுபெற ஒரே அடியிற் குறித்த ஆசிரியர், முன்பாட்டிலே
அவற்றைப் பிரித்து “மலர்வித்து.....விளையாடிச் செல்கின்றார்“ என
விரித்தனர். அதன் விளைவை இப்பாட்டிலே “கூட வைகிச்
செழுந்தவிசிழிந்து கும்பிடும் விருப்பால் நம்பி“ என்று காட்டி,
விளையாட்டு விளையாட்டின்மட்டிலே நிற்க, விருப்பம் பெருமானிடத்தே
பதிந்து கிடந்ததை விரித்தோதினார்.
சாணாரவிந்தமலர் சிந்தையிலும் சென்னியிலும் மலர்வித்ததனால்
கும்பிடும் விருப்பம் நிகழ்ந்தது. கும்பிடுதல் நனவில் நிகழ்வது. மலர்வித்தல்
அதனோடு கனவு முதலிய நிலைகளினும் நிகழ்வது. சென்னி ஆயிரம்
இதழுடையதாய் மேனோக்கி மலர்ந்த தாமரை போன்றதாகவும், சிந்தை -
குவிந்த தாமரை போன்றதாகவும் கூறுவர். இது பற்றியன்றே பட்டினத்தடிகள்
முதலிய பெருஞானிகளும் திருக்கோயில் வாயில் காத்திருந்தனர் என்க.
தங்கள் நாதர்
- உரிமையின் மிகுதி காட்டிற்று. பரவையாருக்கும்
தமக்கும் நாதர் என்றலுமாம்.
|