பக்கம் எண் :


தில்லைவாழந்தணர்சருக்கம்397

Periya Puranam

     இவ்வாறன்றி மாளிகை சோலை முதலியனவற்றைத் தனித்தனி
எண்ணும்மை கொடுத்து மாளிகையிலும், சோலையிலும், ஆசனத்திலும்
மாதுடன் கூடவைகி என்று உரை கூறுவாருமுண்டு. வைகி என்பது
மேற்பாட்டிலே முடித்த விளையாடிச் செல்கின்றார் என்பதைத் தொடர்ந்து
அனுவதித்து மேற்கொண்டார் ஆதலானும், இழிந்து என்பது இவற்றிலே
தவிசு ஒன்றுக்கேயன்றி ஏனைய மாளிகை சோலை முதலியவற்றிற்குப்
பொருந்தாமையானும் அஃது உரை அன்றென்பது.

     சோலை - வாவி - செய்குன்று முதலிய இப்பொருள்கள், கூடிய
நாயகன் நாயகிகள் அனுபவிக்கும் உலக அனுபவப் பொருள்களாம். மேலும்
பரவையார் (கமலினியார்), சங்கிலியார் (அநிந்திதையார்) இவர்களின்
பொருட்டே சுந்தரமூர்த்திகள் ஆணைவழி அவதரித்து அவர்களின்வழியே
வேட்கைதீர மணக்கோலத்துடன் மண்மேல் விளையாடி வருகின்றார்
ஆதலானும் இவை இவரது அனுபவங்களுக்கு மிக உரியவாயின. பின்னர்ச்
சேரமான் பெருமாள் நாயனார் நம்பிகளுக்குச் செய்யும் உபசாரங்களினும்
இவ்வுண்மை காணப்பெறும்.

“திருவுமெய்ப் பொருளுஞ் செல்வமு மெனக்குன் சீருடைக்
                            கழல்களென் றெண்ணி
யொருவரை மதியா துறாமைகள் செய்து மூடியு முறைப்
                              பனாய்த் திரிவேன்“
                   -தக்கேசி - திருமுல்லைவாயில் - 1

என்ற நம்பிகள் தேவாரக் கருத்தினையும் காண்க. எந்த மகனும்
விட்டுநீங்கலாகாத உலக இன்பப் பொருள்களாகிய சோலை - வாவி -
செய்குன்று - தவிசு இவைகளின் இடையேயும் பூங்கோயில் சென்று
கும்பிடும் விருப்பமே நம்பிகளுக்கு மிக்கு எழுந்தது என்று கூறியவதனால்“
பிரான் சரணாசர விந்தமலர் சிந்தையினும் சென்னியினும் மலர் வித்து.........
கூடி விளையாடிச் செல்கின்றார்“ என்று மேற்பாட்டில் கூறியதின் உண்மை
விளக்கப்பெற்றது.

     சோலை - வாவி முதலிய பல விசேடண அடுக்கு அத்தவிசினது
பிணிக்கும் தன்மையின் வன்மையைக் காட்டி நின்றது. இழிந்து - அது
கும்பிடும் விருப்பினைவிட இழிந்ததாக நம்பிகள் கருதினார் என்பதும்
குறிப்புப் பொருள். செழுந்தவிசில் இருந்த போதே நம்பிகளது மனம் அதிற்
பற்றாது கும்பிடும் விருப்பம் மேலிட்டிருந்தது என்க.

     எல்லார் உயிர்க்கும் இச்சை, அறிவு, செயல் என்ற மூன்று சத்திகள்
உண்டு. இவை மூன்றும் வேலை செய்கின்றமட்டிலே மேல் நிகழ்ச்சிகள்
நிகழும். பொருள்களை முதலில் நிருவிகற்பக் காட்சியாகக் கண்ட உயிருக்கு
அதிலே புத்தி கலந்து தொழில் செய்தபோது சவிகற்பக் காட்சி நிகழும்.
அதன்பின் அதில் ஞானம் உண்டாம். பின் அதில் இச்சை நிகழும். இங்கு
நம்பிகளது அறிவிச்சை செயல்கள் அவ்வாறு தொடர்ந்து நிகழாது பரவையார்
சார்வும், சோலை வாவி முதலிய பொருள்களும், கண்டபோது அவற்றின்
சார்பினாலே முன்னை அறிவும் இச்சையும் செயலுமாகத் தொடர்ந்து நிகழ்ந்து
கும்பிடும் விருப்பை எழுப்பப் பின்னர்த் திருத்தொண்டத் தொகை அருள
எதுவாயினமை குறிக்கத்தக்கது. அதுவே அவரது அவதார தத்துவம்.

“மாத வஞ்செய்த தென்றிசை வாழ்ந்திடத்
தீதி லாத்திருத் தொண்டத் தொகைதரப், போதுவார்“

என முன்னர்க் கூறியமை காண்க. தவிசிழிந்து கும்பிடும் விருப்பால் நம்பிகள்
பூங்கோயில் போந்ததன் உண்மை இவ்வாறுணரத் தக்கதாம்.

     உலகத்தில் நிற்கும்போதே சிவஞானிகளின் அறிவு இச்சை செயல்கள்
உலகச் சார்பிலே செல்லாது சிவச்சார்பிலே செல்வனவாம். அவர்கள்
உலகத்தைப் பாரார். அவர்களதுகண் விழித்தே யிருக்குமாயினும் உலகத்தை
நோக்காது; உண்முகமாகவே நோக்கி நிற்றலால் உலகத்தார்க்குக்
குருடாகவேகாணும். “விழித்த கண்குரு டாய்த்திரி வீரரும் பலரால்“ என்பது
இவர்களது இயல்பு. உயிர்களுக்கு