|
சிவ ஆகமங்களின்
விதித்தபடி பூசை செய்வோர்களது மனத்திலே
விளக்கமாக எழுந்தருளியிருப்பன் சிவன் என்பதாம். ஆகமசீலர்க்கு அருள்
நல்கும் பெருமானுடைய புண்டரீகப் பதமாதலின், அச்சீலமாகிய
மாதவமுடையார் நெஞ்சிலே அவர் நினைந்தவாறே பொலிந்தன. கற்றார்க
ளுற்றோருங்காட்சியானை (தேவாரம்); கற்றவர் விழுங்குங் கற்பகக்
கனியை, அளிவள ருள்ளத் தானந்தக் கனியே (திருவிசைப்பா)
முதலிய
திருவாக்குக்கள் காண்க. இறைவன் எல்லா இடத்திலும் இருப்பானாயினும்
சிவஞானிகளிடம் விளக்கமாக வீற்றிருப்பன் என்பது. ஏனையோர்களிடத்து
விளங்கப் பெறாது இருப்பன் என்க.
வேதியாதவர் தம்மை
வேதிப்பன - வேறுபடாது மலத்துளழுந்திக்
கேவலத்துக் கிடப்போரை வேறுபடுத்திச் சகலத்துளாக்குவன.
வேதியாமலிருத்தல் - அறியாமலிருத்தல். வித் - அறி; பகுதி. எனவே
வேதியாதவர் - அறியாதவர்கள் என்க. அறியாதவர்களாதலின் அவர்களை
அறியும்படி செய்தல் இறைவன் அருட்டொழில் ஆதலால் வேதிப்பன -
என்றார். வேதித்தல் - அறிவித்தல். கல்லாதார் மனத்தணுகாக்
கடவுடன்னை, மற்றவரறியா மாணிக்க மலையை முதலிய
திருவாக்குக்களிலே முன்னைய தற்கடுத்து இத்தன்மையைப் பேசியிருத்தல்
காண்க. தெரிந்து பூசிப்போரிடத்துப் பொலிந்து, தெரியாது வாளா
கிடப்போரை அறிவித்தும் அருள் செய்வன இரண்டு பாதங்கள் என்க.
அறியாதவனை அறிவிக்கும் அருட்டிறம் திருவிளையாடற் புராணத்திலே
மாபாதகந் தீர்த்த படத்தில் இறைவன் அம்மையாருக்குச் சொல்வதாக
உள்ள பகுதியிற் காண்க.
இனி
- வேதிப்பன - என்பதற்குப் பேதிக்கச் செய்வன - மாற்றுவன
- என்றுரைத்தலுமாம். மாற்றுவது வேதி எனப்படும். இது தரிசவேதி -
பரிச வேதி என் இருவகைப்படும்.
என்றது காண்க. ஆணவத்திற்
கட்டுண்டுகிடப்போரை அதிலிருந்து பரிசம்
- நோக்கு - பாவனை முதலிய தீக்கைகளால் மாறச் செய்வன. பரிசத்தாலே
கட்டுநீங்கும் கோழி முட்டையும், பார்வையால் நீங்கும் மீன்முட்டையும்,
பாவனையால் (நினைவினால்) நீங்கும் ஆமை முட்டையும், இவற்றிற்கு
உதாரணங்களாகக் கூறுப.
சோதியாய் எழும்
சோதி - எழுந்து விளங்கும் சூரியன் - சந்திரன்
- அக்கினி - என்பனவே ஒளிப்பொருள்களாம். இவையே சோதி என்பன.
சூரியனும் சந்திரனும் சொல்லவே ஏனையவிண்மீன்களும், அக்கினி
கூறப்படவே ஏனைவிளக்குகளும் அடங்கும். இவை தாமே ஒளிகொடுப்பன
அல்ல. இவற்றுள்ளே நின்று ஒளிகொடுப்பவன் இறைவன். அவன்
பிறிதொன்றினானன்றித் தானே ஒளியுடையவன்; ஆதலின் சுயஞ்
சோதியாவன். அவனை ஒளியுருவுடையவனாகவே நினைப்பது
சிவாகமங்களின் றுணிபு. சிவபூசை விதியில் சூரிய பூசையிலே சூரியமண்டலத்திடையில் விளங்கும்
ஒளியுருவனாகிய சதாசிவ
மூர்த்தியைப் பூசிக்கும் முறையைச் சைவாசாரியர்களிடம் கேட்டுணர்க.
சோதியுட்சோதிய
- சோதிகளிலே மிகுந்த சோதி என்றும்,
சோதிகளுக்குள்ளே நின்று அவற்றிற்கு ஒளிதரும் சோதி என்றும்
கொள்க. ஒளியா யொளியதன் ஒளி என அடுக்கிக் கூறுவதுங் காண்க.
மும்மலங்களுக்கு சடமாயொழியவே, அவைகளினின்றும் நீங்கிச் சுத்தமாய்
மேம்படும் ஆன்ம ஞானவொளியுடன் ஒளியாகி அதனை விளக்குவன.
சோதிக்குட் சோதியாய்த் தோன்றிடுவன் காணே - சித்தியார். ஓங்காரத்
துள்ளொளிக் குள்ளே முருக னுருவங்கண்டு - கந்தர் அலங்காரம்.
|