பக்கம் எண் :


திருமலைச்சிறப்பு41

Periya Puranam

     வந்து - முன்னே “எய்தி”ச் சேடியர் மலர் கொய்வுழிப், பின்னர் “வந்து”
என்பதாம். “அங்குமுன்” என்றதும் காண்க.

     அருள் என - அருள் என்னும்படி; இதனை வரும்பாட்டிலே “மனம்
போக்கிட” என்றதனுடன் சேர்த்து முடிக்க. தீவகமாய் “அருள் என” “வந்து”
என்று கூட்டலுமாம்.

     ஆய்குழற் கந்தமாலைக் கமலினி - இவர் திருவாரூரிலே பரவையார்
என்ற பேருடன் அவதரித்தனர். இவரை, இங்குச் சுந்தரர் என்ற நிலையிற்
கண்ட குழலும் கந்தமாலையுமாகிய இக்காட்சியினையே தொடர்ந்து,
திருவாரூரிலே“தேங்கமழ் குழலின் வாசம் திசையெலாம் சென்று சூழ”ப்
(தடுத்தாட்கொண்ட புராணம் - 137) பூங்கோயிலுள்ளாரை வணங்கப்
போந்தபோது நம்பிகளாகிய நிலையிற் கண்டனர் என்ற தொடர்ச்சியின்
அழகைக் காண்க. 24

35. மாத வஞ்செய்த தென்றிசை வாழ்ந்திடத்
 
  தீதி லாத்திருத் தொண்டத் தொகைதரப்
போது வாரவர் மேன்மனம் போக்கிடக்
காதன் மாதருங் காட்சியிற் கண்ணினார்.
25

     (இ-ள்.) மாதவம் ... வாழ்ந்திட - பெருந்தவம் செய்த
தென்றிசைப்பூமி வாழ்வடையவும்; தீதிலா ...... தர - தீதிலாத
திருத்தொண்டத் தொகை என்னும் நிதியை உலகுக்குக் கொடுக்கவும்;
போதுவார் - போக்கிட - போவாராகிய ஆலாலசுந்தரர் அச்சேடியர்களின்
மேல் மனத்தைச் செலுத்த; காதல் ... கண்ணினார் - அவ்வாறு காதல் பெற்ற
அவ்விரு பெண்களும் காட்சித் துறையிலே ஈடுபட்டனர்.

     (வி-ரை.) தென்றிசை - இந்நில வுலகமாகிய அண்டத்திற்
பரதகண்டத்தில் விந்த மலைக்குத் தெற்குத் திசையில் உள்ள நிலமும்
நீருமாகிய பகுதி.

     மாதவம் செய்த தென்றிசை என்றது - எல்லாப் புண்ணியங்களுக்கும்
மேம்பட்ட சிவபுண்ணியம் செய்ய ஏதுவாயுள்ளது பற்றி மாதவம் செய்த
என்றார். இதனாலே இது புண்ணிய பூமி எனப்பெறும். இதனை 31 முதல் 36
வரை உள்ள திருப்பாட்டுக்களிலே ஆசிரியர் உபமன்னிய முனிவரது
திருவாக்கிலே அமைத்து விரிக்கின்றார். மேல் - கீழ் - நடு என்ற மூன்று
வகை உலகங்களிலும் நடுவாகிய பூவுலகம் சிறந்தது. மேல் உலகம் ஆகிய
தேவருலகம் புண்ணியலோகம் என்பர். புண்ணியங்களுக்கேற்க
இன்பானுபவத்திற்கே உரியது. கீழ் உலகமாகிய நரக லோகம்
பாவத்திற்கேற்கத் துன்பானுபவத்துக்கே உரியது நிலவுலகம் இரண்டுக்கும்
உரியதாம். அதுவேயுமன்றிச், சிவபூசை சிவதர்மங்களுக்கும் ஏற்றதாய்
வீட்டுக்கும் வழிதரும். மற்ற இரண்டும் அவ்வாறன்றி அந்தந்த அனுபவங்கள்
தீர்ந்ததும் பிறவியிற் செலுத்துவன. இந்தப் பூவுலகத்திலும் வேத
சிவாகமங்களும் தமிழ் வேதங்களும் பிறந்து வழங்குதலாலும், புண்ணிய
நதிகளும் புண்ணிய சிவதலங்களும் உள்ளனவாதலாலும் பரதகண்டம்
சிறந்தது. இப்பரதகண்டத்திலேயும் வடக்குப் பிரதேசத்திலே புண்ணிய
நதிகளிருந்தாலும் எல்லாத் தேவர் இருடிகள் முனிவர் முதலியோர்களும்
வந்து பூசித்துப் பேறு பெற்ற தென்றிசை சிறந்ததாம்.

மேரு நடுநாடி மிக்கிடை பிங்கலை
கூருமிவ் வானின் இலங்கைக் குறியுறும்
சாருந் திலைவனந் தண்மா மலயத்தூ
டேறுஞ் சுழுனை யிவைசிவ பூமியே.
- திருமுலர் திருமந்திரம் - திருக்கூத்துத் தரிசனம் - 26

ஈறான கன்னி குமரியே காவிரி
வேறா நவதீர்த்த மிக்குள்ள வெற்பேழுள்