பக்கம் எண் :


416 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

Periya Puranam
கூசிமொழிந் தருண்ஞானக் குறியி னின்று
கும்பிட்டுத் தட்டமிட்டுக் கூத்தாடித் திரியே“

எனவரும் சிவஞானசித்தியார் முதலிய சாத்திரவிலக்கணங்களிலும்,
இளையான்குடி மாற நாயனார் முதலியோர் சரிதவிலக்கியங்களிலும்
கண்ட நீதி.

      நிறை சொன் மாலை - நிறை சொல் - “அருளிக் கூறினும்
வெகுண்டு கூறினும் அவ்வப்பயன்களைப் பயந்தேவிடும் மொழி“ என்பர்
பரிமேழலகர். ஈண்டு இம்மொழிகள் தம்முடைய பயன்களைப்
பயந்தேவிடுதலாவது தேவாரத் திருவாக்குக்களின் விளையும் உறுதிப்
பயன்களாம். முதலைவாய்ப் பிள்ளை அழைத்தல் முதலியவற்றிற்
கண்டுகொள்க.

     கோதிலா வாய்மை - குற்றங்களை இல்லையாகச் செய்யும் உண்மைத்
தன்மை. “வாய்மையெனப் படுவதி யாதெனில் யாதொன்றுந், தீமையிலாத
சொலல்“ என்னும் குறளும், அதில் தீமையிலாத - என்பதற்குத் தீமைபயவாத
என்ற உரையும் இங்கு வைத்துக் காண்க. “நாவின் வாய்மையாற்
போற்றினார்“ (திருஞான - புரா - 1078), “போதியோ வென்னும் -
அன்னமெய்த் திருவாக்கெனும் மமுதம்“ (மேற்படி 1088), “குரும்பை
யாண்பனையீனும் என்னும் வாய்மை குலவுதலால்“ (மேற்படி 980) முதலிய
ஆணைகளின் இலக்கணத்தை நோக்குக.

     சொன்மாலை - சொல்லாலாகிய மாலை.
     கோதிலா வாய்மையாலே பாடு -

“...........நமக்கு மன்பிற் பெருகிய சிறப்பின் மிக்க
அர்ச்சனை பாட்டே யாகு மாதலான் மண்மே னம்மைச்
சொற்றமிழ் பாடு கென்றார்.....“
(216)

என முன்னர்த் தம்மைப் பாடுமாறு ஆணையிட்ட பரமன், இப்போது
அதுபோலவே தம் திருவாக்கினால், தமக்கும் தம் அடியவர்க்கும்
பேதமின்மையை விளக்கி, “இவர்களை நிறைசொன் மாலை பாடுக“
என்றருளியது காண்க. தம்மைச் சொற்றமிழ் பாடுக என்றவர், அவர்களை
நிறைசொன் மாலை பாடு என அடைகொடுத்துக் கூறியது அவர்களது
ஏற்றத்தை எடுத்துக் காட்டியபடியாம். 197

     344. (வி-ரை.) இன்னவாறு - அவர்களது வரலாறு இன்னது.
இன்னபண்பு - அவர்களது தன்மை இன்னது. ஏத்துகேன் - இவை இன்ன
என்றறியாமையால் எவ்வாறு ஏத்தவல்லேன்?

     அதற்கு யான் ஆர் - அவ்வாறு ஏத்துவதற்கு என்ன உரிமை -
என்ன தகுதி “நான் ஆரென் னுள்ளமார்?.....என்னை ஆண்டிலனேல்“
என்ற திருவாசகம் காண்க.

     பாடும் பரிசு எனக்கு அருள்செய் - “உன்றன் குணப்பெருங்கடலை
நாயேன், யாதினை யறிந்தென் சொல்லிப் பாடுகேன்“ (218) என மொழிந்து
முன்னர்க் கேட்டதும், ஆண்டானைப்போலவே அடியாரும் உணரவும்
ஓதவும் படாராதலின் அதற்கு இறைவனை வேண்டிப் பெறுதலும்
உய்த்துணர்க.                    198

     345. (வி-ரை.) தொல்லை.....பாகன் - தொல்லை - பழமை;
மால்வரை - பெரிய மலை; தூயாள் - தூய்மைகட்கெல்லாம் இடமானவள்;
கருணையே திருமேனியாதலின் தூயாள் என்றார். பாட்டுக்குரிய கருணையுடன்
அருள்செய்தார் என்றது குறிப்பு. “சத்தியருளன்றிச் சத்தனருளின்றாம்“
(திருமூலர்) என்றபடி தான் சத்தியுடையானாகி அருளினன் என்றலுமாம்
அருணாதவொலியாய் மந்திரமாய் அருளப்பெறும் அப்பாட்டுக்கு
அருட்சத்தியுடன் கூடிய உருவினனாகித் தோற்றுவாய் செய்தருளினன் என்ற
கருத்துமாம்.

     அல்லல்தீர்ந்து உலகு உய்ய - உலகு உய்யமறையளித்த - என்றும்,
உலகு உய்யப் பாடுக - என்றும் இரண்டிடத்தும் இயைத்துப்
பொருளுரைத்துக் கொள்க. உலகுய்ய