பக்கம் எண் :


424 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

Periya Puranam

     சுருக்கம் :- 146-ம் திருபபாட்டில் ஆலால சுந்தரர் இறைவனது
ஆணையின்படி தென்றிசைக்குட்போந்து திருத்தொண்டத் தொகைத் தமிழ்
பாடிய வண்ணம் உரை செய்வாம் என்று ஆசிரியர் எடுத்துக் கொண்டனர்.
அவ்வரலாறு இப்புராணத்துட் கூறப்பெறுவதாம். 182, 183 பக்கங்கள் பார்க்க.

     திருக்கயிலையிலிருந்து ஆலாலசுந்தரர் தென்றிசையிற் போந்து
அவதரிக்கும் பேறு பெற்றது திருமுனைப்பாடி நாடு. இவர் அவதரித்த ஊர்
திருநாவலூர். அப்பதியிலே ஆதிசைவ மரபிலே சடையனார் என்ற
பெரியாருக்கும் அவரது கற்புடை மனைவியாராகிய இசைஞானிப்
பிராட்டியருக்கும் திருமகனாராய்த் தீதகன்று உலகம் உய்யும்பொருட்டு இவர்
அவதாரமாயினார். நம்பியாரூர் என்ற பிள்ளைத் திருநாமாம் சூட்டப்பெற்றுப்
பல அணிகலன்கள் சாத்தித் தெருவிலே சிறுதேர் உருட்டி விளையாடிவரும்
ஒருநாள் இவரை அந்நாட்டு அரசர் நரசிங்கமுனையரையர் கண்டனர். இவரது
பொலிவு அவர் மனத்தைக் கவர்ந்தது. பெற்றார்களிடம் கேட்டுப் பெற்று
இவரைத் தமது காதன்மகனாகக் கொண்டு வளர்ப்பாராயினர். இவருக்கு
மணப்பருவம் வந்தது. பெற்றோர்கள் தங்கள் மரபுக்கேற்பப் புத்தூர்ச்
சடங்கவி சிவாசாரியாரது மகளாரை மணம்பேசிக்கலியாணம்நிகழ்த்த
மணப்பந்தரில் யாவரும் கூடினார்கள். “மையன் மானுடமாய் மயங்கும்போது
தடுத்தாட்கொள்வோம்“ (39) என்று தாம் அருளியமொழியின்படியே
இவரைத் தடுத்தாட்கொள்வதற்காக இறைவன் ஒருகிழவேதியர் உருவங்
கொண்டு மணப்பந்தரில் வந்து, “இந்நாவலூர் ஆரூரன் என் அடியான்; என்
வழக்கை முடித்துப் பின்னரே மணஞ்செய்தல் வேண்டும்“ என வழக்கிட்டு
அதற்கு ஆதரவாக இவரது தந்தைதன் தந்தை தந்த ஆளோலை உண்டு
என்று மேலிட்டனர்; வழக்கு மேலிடவே நம்பிகள் அவரைப் பித்தனோ
என்று கூறி வெகுண்டு, அவரைத் தொடர்ந்து பற்றி, அவர் கையிலிருந்த
ஓலையைக் கீறியிட அவர் ஓலமிட்டனர். இவ்வழக்கினைத் தீர்ப்பதற்கு
அனைவரும் திரண்டு திருவெண்ணெய்நல்லூர் நீதி மன்றத்திற்குச் செல்ல,
அங்குக் கிழவேதியர் தம்வழக்கையும் முன்நிகழ்ச்சியையும் சொல்லி
முறையிட்டனர். ஆரூர்நம்பிகள் “நான் ஆதிசைவன்; இவ்வந்தணன் என்னை
அடிமை என்ற வழக்கு மனத்தினா லுணர்தற்கெட்டா மாயையாயிருக்கிறது'
என்றனர். நீதிமன்றத்தவர் முறைப்படி இவ்வழக்கை ஆய்ந்தனர்.
“முன்கிழிபட்ட ஓலைபடியோலை - மூலவோலை வேறாக உண்டு“ என்று
கிழவேதியர் சொல்லி மூலஓலை காட்டினர். அதனை விதிப்படி ஆராய்ந்து,
‘அது நம்பியாரது பேரனார் (பாட்டன்) தந்ததுதான்; நம்பி வேதியருக்கு
ஆட்செய்ய வேண்டுவதே முறை' என்று விதித்தனர். அவ்வா றாட்
செய்வதற்குத் தமது நீடு வாழ்க்கை காட்டுதற்காக வேதியர், அனைவரும்
பின்றொடரச் சென்று திருவெண்ணெய்நல்லூர் ஆலயமாகிய
திருவருட்டுறையிலே புகுந்து மறைந்தனர். நம்பிகள் திகைத்து நின்று
அழைத்தனர். மறைந்த வேதியர் இடபவாகனத்திலே உமாதேவியாருடன்
ஆகாயத்திலே தோன்றி, நம்பிகளை நோக்கி “நீ முன்பு நமக்குத்
தொண்டன்; நம் ஏவலால் மண்ணிற் பிறந்தனை; மண்ணின் வாழ்க்கைத்
துன்பம் உன்னைத் தொடராதபடி வந்து நாமே தடுத்தாட்கொண்டோம்“
என்று அருளிச்செய்து, “நம்மை வன்மை பேசியபடியால் உனக்கு
வன்றொண்டன் என்னும் நாமம் தந்தோம்; நம்மை இவ்வுலகிலே
பாடுவாயாக!“ என்று ஆணையிட்டனர். நம்பிகள் “நான் யாதினை அறிந்து
என்ன என்று சொல்லிப் பாடுவேன்?“ என்று கேட்க, “நீ முன்பு நம்மைச்
சொல்லியபடி என் பெயர் பித்தன் என்றே பாடுவாய்“ என்றருளினர்.
அவ்வாறே “பித்தா பிறைசூடி“ என்று தொடங்கும் திருப்பதிகத்தை நம்பிகள்
பாடியருளினர். “இதுபோலவே இவ்வுலகில் பலவாற்றாலும் நமது புகழைப்
பாடுவாயக“ என்று இறைவன் அருளினர் இங்கிது நிற்க, அங்கு
மணப்பந்தலில் மணமகளாயமர்ந்து, மணந்தவிர்ந்த, சடங்கவி மகளாரும்
திருவாவலூர் நம்பிகளை ஒழியாது உணர்ந்துநின்ற வழியினாலே
சிவலோகத்தை எளிதில் அடைந்தார்.