பக்கம் எண் :


தில்லைவாழந்தணர்சருக்கம்425

Periya Puranam

    நம்பிகள் அதன்பின் திருநாவலூர் சென்று வணங்கித் திருப்பதிகம்
பாடினர். திருத்துறையூர் சென்று வணங்கித் தமக்குத் தவநெறி
தரவேண்டுமென்று இறைவனை வேண்டிப் பதிகம்பாடி அவ்வாறே
அருளப்பெற்றனர். அங்கிருந்து திருத்தில்லையிலே ஆனந்தக் கூத்தரது
திருக்கூத்தை வணங்கும் ஆசையினாலே வழிக் கொண்டனர்.

     மாலைக்காலம்வரத் திருவதிகைப் புறம்பணையை அடைந்த இவர்,
“இத்திருத்தலமானது திருநாவுக்கரசு சுவாமிகள் கைத்திருத்தொண்டு செய்த
தலம். ஆதலின் இதனை மிதிக்க அஞ்சுகின்றறேன்“ என்று உட்கொண்டு,
அந்நகருட் புகுதாது புறத்திலே உள்ள சித்தவட மடத்திலே பரிசனங்களுடன்
பள்ளியமர்ந்தருளினர். இரவிலே இறைவர், ஒருவருமறியாமல் உள்ளே புகுந்து
தாமும் பள்ளிகொண்டு நம்பிகளது திருமுடி மேல் ஒருமுறைக் கிருமுறை
தமது காலை நீட்டினர். இவர் சினந்து “நீ யார்?“ என்று வினாவினர். அவர்
“என்னை அறியாயோ?“ என்றுசொல்லி மறையவே, தம்மானை யறியாத
சாதியார் உளரே“ என்ற பதிகத்தைப் பாடித் துதித்தனர். அங்கிருந்து கெடில
நதி கடந்து திருமாணிகுழி, திருத்தினைநகர் என்ற தலங்களை
வணங்கிக்கொண்டு திருத்தில்லையை அடைந்து நடேசப்பெருமானை
வணங்கிப் பதிகம் பணிந்தனர். அப்போது “திருவாரூரில் நம்மிடம் வருக“
என்றொரு வாக்கு ஆகாயத்தினின்றும் எழுந்ததைக் கேட்டனர். அதன்படியே
புறப்பட்டுக் கொள்ளிடத் திருநதி கடந்து போய்ச் சீகாழியை யடைந்தனர்;
அது ஆளுடைய பிள்ளையார் அவதரித்த தலமாதலின் அதன் உள்ளும்
மிதிக்கலாகாது என்று புறத்தே நின்று வணங்கினர். பெருமான் இவருக்கு
அங்கே காட்சி கொடுத்தருளப்பெற்றுக் “கழுமல வளநகர்க்
கண்டுகொண்டேனே“ என்ற மகுடத்தையுடைய திருப்பதிகம் பாடித்
துதித்தனர். பின்பு திருக்கோலக்கா, திருப்புன்கூர் முதலிய தலங்களை
வணங்கிக்கொண்டு காவிரிக் கரையை அணைந்து நீராடிச் சென்று அதன்
கரை மருங்கே உள்ள திருஅம்பர்மாகாளம், திருப்புகலூர் முதலிய தலங்களை
வணங்கிக்கொண்டு திருவாரூரை அடைந்தார்.

     முன்னரே தியாகேசர் அவ்வூரின் அடியவர்கட்கு “நம் ஆரூரன் நாம்
அழைக்க இங்கு வருகின்றான்; அவனை மகிழ்ந்து எதிர்கொள்வீர்“
என்றருளியபடியே மிகச் சிறப்புடன் அடியார்கள் நம்பிகளை
எதிர்கொண்டனர் அவர்களை நோக்கி “உங்கள் பெருமான் எம்மையும்
ஆள்வரோ“ என்று பதிகம் பாடி வணங்கிப்போய்த் திருமூலட்டான
நாதரையும், தியாகேசரையும் தரிசித்துப் பதிகம்பாடினர். அப்போது “நம்மை
உனக்குத் தோழமையாகத் தந்தோம்; நீ மணக்கோலத்துடன் மண்மேல்
விளையாடி வருவாயாக“ என்று ஓர் ஆசரீரிவாக்குக் கேட்க, நம்பிகள்
பணிந்து கொண்டு அன்று முதல் அவ்வாறே மணக்கோலத்துடன்
திருவாரூரை நாள்தோறும் தரிசித்துவந்தார். அன்று முதல் இவருக்குத்
தம்பிரான் றோழர் என்று பெயர் வழங்கியது.

     இதற்கு முன்னரே, திருக்கயிலையினின்றும், ஆணையின் வழியே,
பூவுலகில் போந்த சேடியர் இருவரிற், கமலினியார் இங்குத் திருவாரூரில்
உருத்திரகணிகையர் மரபில் அவதரித்துப் பரவையார் என்ற நாமம்பூண்டு
சிறப்புடன் வளர்ந்து தினந்தோறும் திருவாரூர்ப் பெருமானைத் தரிசித்து
வருவாராயினார். அவ்வாறு நிகழும் நாள்களில் ஒரு நாள் நம்பிகள்
தரிசித்துக் கோயிலினின்று வரும்போது, தரிசிக்கச் சென்றுகொண்டிருந்த
பரவையாரைக் கண்டனர். அவரும் இவரைக்காணவே, முன்தொடர்பினாலே
இருவர் மனத்திலும் ஒருவர் மேல் ஒருவர் காதல் நிகழ்ந்தது. திருவாரூர்ப்
பெருமானது திருவருளினாலே அவ்வூர் அடியவர்கள் இருவர்க்கும் திருமணம்
நிகழ்வித்தனர். நம்பிகள் மகிழ்ந்து விளையாடியும் திருவாரூரரைத் தரிசித்தும்
வருவாராயினார். ஒருநாள் அவ்வாறு திருக்கோயிலுக்குச் செல்பவர்
“தேவாசிரியனில் வீற்றிருக்கும் அடியார்களுக்கு நான் அடியேனாகப்
பண்ணும் நாள் எந்நாள்“ என்று இறைவனை வணங்கினர். இறைவன்
எதர்காட்சி கொடுத்து, அடியார்களைப் பாடும்படிப் பணித்து, அவர்களது
பெருமைகளை எடுத்துச் சொல்லி, அவர்களது வழித்தொண்டின்
வரலாறுகளையும்