|  
             (12) 
        அடியார் சிறப்பும், வணக்கமும் மனிதப் பிறவிக்குப் பேறு தருவன  
        என்பது. இப்பகுதியின் மட்டுமன்றி, இப்புராண முழுமையிலும் போந்த சிறந்த  
        தனிக்கற்பனையாம் அரனிலும் அடுத்த துணையாவர் அடியவர்களேயாம். 
         
             திருமலைச்சருக்கத்தின் வைப்புமுறை :- நூன்முகத்துப் 
         
        பாயிரமுரைக்கப்பெற்றது. நூன்மங்கலம்செய்து கடவுள் வணக்கத்துடன்  
        தொடங்கிய ஆசிரியர் இந்நூற்பெயர் திருத்தொண்டர் புராணம் ஆம் எனத்  
        தோற்றுவாய்செய்து எடுத்துக்கொண்டனர். இப்புராணத்திற்கு முதல்நூல்  
        திருத்தொண்டத் தொகை. அது நம்பியாரூரரால் அருளப் பெற்றது. அவர்  
        கயிலையினின்றும் அதுதரும் பொருட்டே இங்கு வந்தனர். அவ்வரலாற்றைத்  
        திருமலைச் சிறப்பிற் கூறினார். தொண்டர்கூட்டமே இந்நூற்பொருளாதலின்  
        தொண்டர்தங் கூட்ட நிறைந்துறை நாடாகிய சோழநாட்டுச் சிறப்பை  
        அதற்கடுத்தும், அந்நாட்டிலே தொன்மையின் மிக்கதாய் அக்கூட்டம்  
        நிறைந்துறைவதாய் உள்ள திருவாரூர்ச் சிறப்பை அதனையடுத்தும்  
        உரைத்தார். அத்திருக் கூட்டத்தின் சிறப்புக்களை வடித்து எடுத்துத்  
        தொடக்கத்திற்காட்டும் வகையால், அந்நகரில் உள்ள பூங்கோயிலையும்  
        அதில் அவர்கள் எழுந்தருளியுள்ள தேவாசிரியனையும், அங்கு நிறைந்த  
        அவர்தம் பெருமைகளையும் திருக்கூட்டச் சிறப்பிற் பேசினார். ஆலாலசுந்தரர்  
        வந்து இக்கூட்டத்தைத் தொழுது திருத்தொண்டத்தொகை பாடிய வரலாற்றை  
        அதனை அடுத்துத் தடுத்தாட் கொண்ட புராணத்திற் கூறினார். இதுவே  
        திருமலைச் சருக்கத்தின் அமைப்பாம். 
         
             இனி இத்திருத்தொண்டத் தொகையான தமிழின் முறையே 
         
        இப்புராணத்தை அமைவுபடுத்திக் கூறுகின்றேன் என்று மேற்கொண்டனர்  
        ஆசிரியர். 
         
             இம்முறையிலே பின்னர்வரும் சருக்கங்களின் அமைவும், 
        சருக்கங்களுட்  
        புராணங்களின் அமைவும் கண்டுகொள்க. 
         
             நம்பிகள் சரித அமைப்பு - திருமயிலையினின்று ஆணையின் 
        வழியே  
        போந்த நம்பிகளது சரிதம் திருமலையினிகழ்ந்த முற்பகுதியைத் திருமலைச்  
        சிறப்பிற் கூறினார்; அங்கு நின்றும் தென்றிசையிற் போந்து, திருவாரூர்  
        சேர்ந்து, திருத்தொண்டத் தொகை அருளி, அடியார் நடுவுள் அணைந்த  
        வரையிலே தடுத்தாட்கொண்ட புராணத்துட்கூறினார்; இனி அங்கு நின்றும்  
        புறப்பட்டு மாதவஞ்செய்த தென்றிசை வாழ்ந்திடத் திருப்பேரூர், திருத்தில்லை  
        முதலிய பல தலங்களிலும்சென்று தரிசித்து, உலகமுய்யப்பதிகம் பாடித்,  
        திருவொற்றியூரிலே சங்கிலியாரை மணந்து, மீளவும் திருவாரூரை அடைந்து,  
        பின்னர் ஏயர்கோன் கலிங்காம நாயனாரது நட்புப்பெறும்வரை அந்நாயனார்  
        புராணத்திற்பேசி, ஆதன் பின்னர்ப் பலதலங்களையும் தரிசித்துக்  
        கழறிற்றறிவரா நாயனார்நட்புப் பெற்று மீண்டும் திருவாரூர்வந்து  
        அமரும்வரை அவர் புராணத்திற் பாடி, அதன் பின்னர்ச்செய்த  
        தலயாத்திரையிலே திருவவிநாசியிற்சேர்ந்து முதலைவாயிற்பிள்ளை  
        தருவித்துத் தந்து, கழறிற்றறிவார்பால் திருவஞ்சைக்களஞ்சார்ந்து,  
        அங்கு இறைவனிடம் முத்திலிண்ணம்பம்செய்து, பதிகம்பாடி இறைவன்  
        ஆணையின்படிப் போந்த வெள்ளை யானையிலேறிக், கழறிற்றறிவாருடன்  
        மீளத் திருக்கயிலை அடைந்து, தமது திருப்பணியிற்றலை நின்றவரையில்  
        இறுதியில் வெள்ளையானைச் சருக்கத்திற் பாடியருளினார் ஆசிரியர் என்க. 
         
             ஆரூரன் ஆரூரில் அம்மானுக்காளே 
        என்ற பாட்டுத்தோறும் விரவித்  
        திருத்தொண்டத் தொகை முழுதும் நம்பிகளது சரிதம் பரந்தமையால் அதன்  
        வழித்தாய் வந்த விரிநூலாகிய இப்புராணத்திலும் அவ்வாறே புராணம்  
        முற்றும் அவர் சரிதம் விரைவி நிறைவெய்துவதும் காண்க. 
         
      
        
          | 
             தடுத்தாட்கொண்ட 
              புராணம் முற்றிற்று. 
              திருமலைச் சருக்கம் முற்றிற்று.  
           | 
         
       
    
   |