பக்கம் எண் :


தில்லைவாழந்தணர் புராணம்431

Periya Puranam

“அகலிடத்துயர்ந்த தில்லை“ எனவும் விரிக்கப்பெற்றன. அந்தணர் என்ற முதனூல் “எரித்த அப்பர்“ - “அமுதத் திருநடர்“ - “பிறையணிந்த துப்பர்“ என விரிந்தது. மறையோர் - உரிமைத் தொழில் புரிவோர் எனக் கூட்டுக. சொல்லுதும் - துதிப்போம். தம் அடியார் - என்ற முதனூல் “உரிமைத்தொழில் புரிவோர்“ என வகை நூலிலும், “நிருத்தனுக்குரிய தொண்டாம் பேற்றினார்“, “அடித்தவம்“, “கோயிலுள்ள வகம்படித்தொண்டு“, “நடம்புரிவார்க் காளாம் திரு“, தாங்கள் போற்றிட“ என்று விரிநூலிலும் விரிந்தமை காண்க.

     350. (இ-ள்.) ஆதியாய் நடுவுமாகி - ஆதியாகியதுடன் நடுவும் ஆகி;
அளவிலா அளவும் ஆகி - பாசஞான பசுஞானங்களால் அளந்தறியப்படாது.
சிவஞானத்தால் அறியப்படும் பொருளாகி; சோதியாய் உணர்வும் ஆகி -
காட்டும் அறிவாகிய ஒளியும், அது காட்டக் காண்கின்ற அறிவுமாகி;
தோன்றிய பொருளும்......ஏகம் ஆகி - இருவகை மாயைகளினின்றுந்
தோன்றிய எப்பொருளும் ஆகி அவையனைத்தினும் அத்துவிதமாய்க்
கலந்ததொரு பொருளேயாகி; பெண்ணும் ஆய் ஆணும் ஆகி -
பெண்ணும் ஆய் அதனோடு இணைந்த ஆணுமாகி; போதியா
நிற்கும்......போற்றி - போதித்து நிற்கும் தில்லையின் பொதுவிலே
ஆடுகின்ற திருக்கூத்து எம்மாற்போற்றப் பெறுவது! போற்றப் பெறுவது!!

     (வி-ரை.) ஆகி - ஆகி - ஆகி - ஆகி - ஆகி - ஆகிப் -
போதியா நிற்கும் - நடம் - போற்றி என்று முடிக்க.

     ஆதியாய் - எல்லா உலகங்களுக்கும் தோற்றுதற் கருத்தாவாய்.
“அந்தம் ஆதி“ என்று உண்மை நூலிற் கண்டவாறு, மாசங்கார
காலத்திலே எல்லா உலகங்களும் சங்கார கருத்தாவாகிய இறைவனிடத்தே
ஒடுங்கி நின்று மீளவும் சிருட்டிக் காலத்திலே அவனிடத்தினின்றும் தோன்றி
உளவாம் என்பது முடிபு. “ஒடுங்கி மலத்துளதாம்“ - சிவஞான போதம்
1-ம் சூத்திரம். ஆதி - தொடக்கம்; மீளத் தோன்றுதற்கிடமாய் நிற்கின்ற
நிலையைக் குறித்தது. முதலிற் சங்கார கருத்தாவாகிய தன்னிடத்திலே
உலகம் ஒடுங்கச் செய்தலாலே சங்கார கருத்தாவும், பின்னர் மீளத்
தோன்ற நிற்றலாலே சிருட்டி கருத்தாவும் தானே ஆகியவன் என்பது
ஆதி என்பதனாற் பெற்றாம். “படைப்பாதித் தொழிலும்“ (1-ம் சூத்திரம்
- 74) என்ற சித்தியாரில் படைப்பாகிய ஆதித் தொழில் என்று
உரைகண்டமையும் காண்க.

பெருங்கடன் மூடிப் பிரளயங் கொண்டு பிரமனும்போய்
இருங்கடன் மூடி யிறக்கு மிறந்தான் களேவரமுங்
கருங்கடல் வண்ணன் களேவர முங்கொண்டு கங்காளராய்
வருங்கடன் மீளநின் றெம்மிறை நல்வீணை வாசிக்குமே.

என்ற அப்பர் பெருமான் திருவிருத்தம்,

புவம்வளி கனல்புனல் புவிகலை யுரைமறை திரிகுண
                                  மமர்நெறி
திவமலி தருசுரர் முதலியர் திகழ்தரு முயிரவை யவைதம
பவமலி தொழிலது நினைவொடு பதுமநன் மலரது மருவிய
சிவன்.................“
  
                               - திருச்சிவபுரம் -

நட்டபாடை - 1

என்ற திருஞான சம்பந்த நாயனார் தேவாரம் முதலிய திருவாக்குக்களைக்
காண்க. இவ்வாறன்றி ஆதி என்பதற்கு முதற்காரணர் என்று கூறுவாறுமுண்டு.
குடத்திற்கு மண் முதற்காரணமாவதுபோல உலகத்துக்கு இறைவன் முதற்
காரணமாதல் இல்லை என்பது ஞான நூல்களின் முடிபு; ஆதலின் அது
பொருந்தாமையறிக. நடுவும் - தோற்றம் - நிலை ஒடுக்கம் எண்ணும்
மூன்றில் நடுவில் நின்றதாகிய உலக நிலைபேற்றுக்குந் தானே கருத்தாவாகி.
ஆதியாய் என்றதனாலே தோற்றம் ஒடுக்கம் இரண்டிற்கும் கருத்தாவாதல்
பெற்றாம்; எஞ்சிய நடுவுக்கும் அவனே கருத்தா என்பது இங்குக் கூறினார்.