|
பெரியார் சிவபெருமானது
திருநீலகண்டத்தினிடத்திலே மிகுந்த பத்தி செய்து
அதனையே எப்போதும் துதித்துச் சொல்லி வருபவர்.
ஒரு நாள் இவர் ஒரு பரத்தையினிடமணைந்து நண்ணினார்.
அதனால் மனைவியார் மானம் பொறாது ஊடல் கொண்டவராகி,
இல்வாழ்க்கைக்கு வேண்டிய எல்லாம் செய்தேயும், இவரோடு
உடனுறைவதற்கு மட்டும் இசையாதவராயினர். அவரைப் புலவி தீர்த்துக்
கூடும் பொருட்டு இவர் வேண்டியவற்றைச் சொல்லி அவரை அணையத்
துணிந்தபோது, அவர் எம்மைத் தீண்டுவீராயின் திருநீலகண்டம் என்று
ஆணையிட்டனர். அது கேட்ட பெரியார் உடனே பெயர்ந்து நீங்கி
அயலார்போல அவரைப் பார்த்து, எம்மை என்று சொன்னதனால்
உம்மையேயன்றி மற்ற மாதரார் தம்மையும் என் மனத்தினாலுந்
தீண்டமாட்டேன் என்று சூள் உரைத்தனர். மனைவியார் தம் கணவர்க்கு
வேண்டிய இல்வாழ்வுக்குரிய ஏனை எல்லாக் காரியங்களையும் செய்துவர,
இவ்விருவரும் திருவாணையைக் காத்து மெய்யுறு புணர்ச்சி ஒன்று
மட்டுமின்றி, இந்நிகழ்ச்சியை அயலார் ஒருவரும் அறியாதபடி, ஒரு
வீட்டிலே உடன் வாழ்ந்து இல்லறம் நடத்திக் கொண்டு வந்தனர்.
இவ்வாறு ஆண்டுகள் பலவும் கழிந்தன; இவர்களது இளமையும்
கழிந்தது; இருவரும் மூப்படைந்து உடல் தளர்ந்தனர்; ஆயினும்
இறைவனன்பினில் ஒரு சிறிதும் தளர்ந்தாரில்லை. இவர்களதன்பை
உலகமறியச் செய்து உலகுக்கு நன்னெறி காட்டுவதற்காக இறைவன்
கீளும் கோவணமுஞ் சாத்தி, நீறு பூசி, வெண்ணூல் பூண்டு, பம்பை
மயிர்த்தலையுடையராகிய, ஒரு சிவயோகியாராக உருவெடுத்துக் கொண்டு
கையில் ஒரு திருவோட்டினை ஏந்திக் கொண்டு நடந்துவந்து இவரது
திருமனையை நண்ணினார். அவரை இவர் உரிய வகையால் உபசரித்து
நான் செயும் பணிவிடை யாது? என்ன, அவர் எனது இந்தத்
திருவோடு மிக அரியது; தன்னிடம் வந்த எல்லாவற்றையும் தூய
தாக்குவது; இதனை வாங்கி உன்னிடம் வைத்து நாம் வேண்டும்போது
தருக என்று கூறித் தம் திருவோட்டினைக் கொடுத்தனர். இவரும்
அவ்வண்ணமே அதனை வாங்கிக் காவல் பொருந்திய ஒரு தனியிடத்துச்
சேமித்து வைத்து வந்து சிவயோகியாரிடம் விடைபெற்று மீண்டனர்.
இவ்வாறு சிவயோகியார் வந்து நாள் பல கழிந்தன. இறைவன்
அத்திருவோட்டினை வைத்த குறியிடத்தினின்று அகலப் போக்கி
விட்டனர். பின்பு ஒரு நாள் யோகியார் மீண்டு வந்து இவரிடம் தமது
திருவோட்டினை தரும்படிக் கேட்டனர். இவர் அதனைத் தேடிக் காணாது
திகைத்தனர். மிகவும் பயந்து சிவயோகியாரிடம் வந்து அவ்வோடு
கெட்டுப்போய்விட்டபடியால் அதற்குப் பிரதியாகத் தம்மிடம் உள்ள வேறு
நல்லதொரு திருவோடு பெற்றுக் கொள்ளும்படி வேண்டினர். யோகியார்
சினந்து நான் வைத்த அடைக்கலப் பொருளைக் களவு செய்து இவ்வாறு
பாவகம் பலவும் செய்கின்றாய்! என் ஒட்டினை நீ கெடுத்து விட்டது
உண்மையாயின் உன் மகனைக் கைப்பற்றிக் குளத்தில் மூழ்கிச்
சபதம் செய்க என்றனர். நாயனார், தமக்கு மகனில்லை என்ன, ஆயின்
மனைவியார் கைப்பற்றி மூழ்கித் தருக என்று கேட்டனர் யோகியார்.
அதற்கு எங்களில் நிகழ்ந்த ஒரு சபதத்தால் நீர் கேட்டவாறு உடன்
மூழ்க இசைவில்லை; புனலில்யானே மூழ்கித் தருகின்றேன்; வாரும்
என்று நாயனார் கூற, யோகியார் மிகச்சினந்து தில்லைவாழந்தணர்
வந்து கூடிய சபையிற் சென்று முறையிட்டனர். அவர்கள் இருவரையும்
விசாரித்து, யோகியார் கேட்டவாறு மனைவியைப் பற்றி மூழ்கித்
தருதலே நீதி வழக்கு என்று தீர்த்தனர். பொருந்தும் வகையினாலே
மூழ்கித் தருவதாய்ச் சொல்லி நாயனார் மனைவியாரையும் உடன்
கொண்டு திருப்புலீச்சுரத்தின் முன்னர்த் திருக்குளத்தில் இறங்கி
மூங்கிற்றண்டி னிருதலையும் தானும் மனைவியாருமாகப் பற்றி
மூழ்கப் புக்கனர். யோகியார் மனைவி கைப்பற்றி மூழ்கீர் என்று
கேட்டனர். அப்போது இவர் தமது பழஞ் செய்கையை உலக மறிய
எடுத்துச் செல்லி மூழ்கிக் கொடுத்தனர்.
|