பக்கம் எண் :


இயற்பகை நாயனார் புராணம் 537

Periya Puranam

     தன்றுணை - சத்த னருடரிற் சத்தி யருளுண்டாஞ், சத்தி யருடரிற்
சத்தனருளுண்டாம்“ (திருமந்திரம் - முதற்றந்திரம் - 220); “உடையா
ளுன்ற னடுவிருக்கும் உடையா னடுவு ணீயிருத்தி“ (திருவாசகம்) முதலிய
திருவாக்குக்கள் காண்க. இறைவனோ டென்றும் பிரியாது எத்திறமீச னிற்ப
மவளு நிற்பள் என்றபடி துணையாய் நிற்கும் சிற்சத்தியாகிய உமாதேவியார்
என்க.
     வானில் ஞானாகாயம். நாயனார்க்கும் அம்மையார்க்கும்
புலனாவது. (200) பார்க்க.

     தலைவன் - உலகறியக்காட்டி உய்வித்தலும், ஆளாகக்
கொள்ளு தலும் தலைவன் செயல் ஆதலின் இங்கு இப்பெயராற்
கூறினார். எல்லார்க்கும் மேலாகிய - தனக்கு மேற் பிறரொருவரில்லாத -
தலைவன்.

     துணை - விடை - இவை அருட்கோலத்தின் வெளிப்படுவன.
(371 - 399) உரை காண்க.1383     
   
     காணார் - கண்டார் - கண்டார். வீழ்ந்தார் - எழுந்தார்.
நாயனாரிடத்து அங்கு விரைவின் ஒன்றன்பின் ஒன்றாய் நிகழ்ந்த
ஒவ்வோர் முற்றிய வினையையும் ஒவ்வோர் வினைமுற்றாற் கூறிப்
போந்த அழகு காண்க. பகைவரைக் கண்டு ஒறுக்க நாயனார் விரைந்து
வந்தனர்; சுற்றுமுற்றும் பார்க்கப் பகைவரைக் காணார்; வேதியரையுங்
காணார்; ஆயின் அம்மையாரை மட்டிற் றனிக்கண்டார்; இதன்
வகையறியமாட்டாராய் மேலே பார்க்கத் தலைவனைக் கண்டார். தாம்
நினைத்து வந்த எண்ணம் முற்றும் மாறின. ஆயின் தலைவனைக் கண்ட
மகிழ்ச்சிப் பெருக்கினாலே தாங்கி நிற்கமாட்டாராய் நிலத்தில் வீழ்ந்தார்;
பின்னர் எழுந்தார் என அவரது தொடர்பாகிய மனநிகழ்ச்சிகளை
இச்செயல்களின் வைத்துக் கண்டு கொள்ளுமாறு யாத்த அழகு குறிக்க.

     நேர்ந்தார் - நேர்தல் - முற்படுதல்; முற்றெச்சம். நேர்ந்தாராகி
- என்ன (435) என்றதனுடன் முடிந்தது. வினை முற்றாகக் கொள்ளினு
மமையும்.

     இப்பாட்டிற்கு எழுவாய் வருவிக்க. 31

     435. (வி-ரை.) சொல்லுவது - சொல்லுதற்கு உரியதை. வகர
இடைநிலை பெற்ற, துவ்வீற்றுத் தொழிற்பெயர். இரண்டனுருபு தொக்கது.
“செய்வதறியாச் சிறுநாயேன்“ என்புழிப்போல. உரியதை என ஒரு சொல்
வருவித்துரைக்கப்பட்டது. இறைவனது பெருங்கருணைத்திறம் மிகச்
சடுதியில் தமக்கு வெளிப்படக் கண்ட மகிழ்ச்சிப் பெருக்கிலே இன்னது
சொல்லற்குரியது என்றறியவராது. ஆதலின் அறியேன் என்றார். “மூண்ட
பெருமகிழ்ச்சியினால் முன் செய்வ தறியாதே“ (அப்பூதி - புரா - 19)
என்றது காண்க. இது மனம் வாக்கு முதலிய கரணங்களின்
உட்டொடர்பாகிய இயல்பு. பதிமுதுநிலை வாக்கிறந்த தாதலின்
சொல்லுவதறியேன் என்றார் என்பதுமாம்.

     தோற்றிய தோற்றம் - முன்னும் இப்போதும் ஐம்பொறிகளாலும்
அநுபவிக்கும்படி காட்டிய எல்லாவகைத் தோற்றங்களையும் குறித்தது.
“உணர்வி னேர் பெற வருஞ்சிவ போகத்தை யொழிவின்றி யுருவின்கண்,
அணையு மைம்பொறியளவினு மெளிவர வருளினை யெனப்போற்றி“
(திருஞான - புரா - 161) என்றது காண்க. தோற்றிய தோற்றம் - உனக்கு
ஆளாகும்படி வந்த இப்பிறவி எனக்கு ஊதியஞ் செய்ததனால் போற்றி
என்றலுமாம். “வந்த பிறப்பை வணங்குவாம்“ (சண்டீசர் புரா - 60) காண்க.
 
    என்னை வழித் தொண்டு கொண்டாய் - என்னை -
தொண்டராகப் பற்றாத என்னையும். இழிவு சிறப்பும்மை தொக்கது.
“என்னையு மடியானாக்கி“ - கந்தபுராணம் வழித் தொண்டு கொண்டாய் -
வழிவழித் தொண்டர்க்குரிய அருளினைச் செய்து ஆட்கொண்டாய்.
வல்லை
- அருளின் விரைவு குறித்தது.