|
நாதனடியார்க்
கன்புநீடும் - மேல்வருஞ் சரிதமாகிய இளையான்குடி
மாற நாயனார் சரித தத்துவத்தைச் சுருக்கிக் காட்டித் தோற்றுவாய்
செய்தவாறு. வறுமைவந்த காலத்திலும் மாறாது அடியாரிடத்தில் அன்பு
நீடியிருப்பது அவர் சரித உள்ளுறையாம். வளம்
- வளஞ் சுருங்கிய
காலத்தும் மணஞ் சுருங்காமல் நின்று வளமுடையராகிய செயலைச்
செய்தமை புராணத்திலே காண்க. “வளஞ் சுருங்கியும் மணஞ்
சுருங்குதலின்றி“ (446). ஆதலின் இங்கு வளத்தினைச் சிறப்பிற் குறித்துக்
கூறினார்.
இளசை
- இளையான்குடி என்பதன் மரூஉ. தஞ்சாவூர் தஞ்சை
என்றாற் போல. இப்பதியினைப் பற்றிய விவரம் வரும் புராணத்துட்
காண்க.
மாறன்
- நாயனார் பெயர். 36
சுருக்கம்
: - சோழநாட்டிலே காவிரி கடலொடு கலக்கும்
கரையிலே உள்ளது பழமையாகிய புகார் என்னும் காவிரிப்பூம்பட்டினம்.
காவிரியின் நாடுபாய்ந்து மிக்க நீர் அங்குக் கலப்பதால் கடல் காவேரிச்
சங்கமும் என்றதொரு தீர்த்தமாய் என்றும் நிலவும். அந்நகரத்திலே முதல்
வணிகர் குலத்திலே இயற்பகையார் என்ற பேருடைய ஒரு பெரியார்
இருந்தார். அவர் சிவனடியார்கள் யாவரேயாயினும், அவர்கள் தம்மிடத்து
வேண்டிய பொருள் எதுவேயாயினும், இல்லை யென்னாதே கொடுக்கும்
அதனைத் தம் இயல்பாகக் கொண்டு அதுவே தமது குற்றமற்ற ஒப்பற்ற
இல்வாழ்க்கையின் பேறு ஆகும் எனக் கொண்டு வாழ்ந்துவந்தனர்.
அந்நாளில் இறைவன், தூயநீறு பூசிய மேனியில் தூர்த்த
வேடமும்
விளங்கும் ஒரு வேதியராகக் கோலங்பெகாண்டு, தமது தொண்டனார்
இல்லையென்றாது கொடுக்கு மியல்பினை உலகுக்குக் காட்டி உய்விக்க
எண்ணி, எழுந்தருளி வந்து இயற்பகையார் வீட்டினுட் புகுந்தார். அவர்
இவரை எதிர்கொண்டு “தேவரீர் எழுந்தருளியது முந்தையெம் பெருந்தவம்“
என்று முகமன் பல கூறி வரவேற்றனர் மறையோர் இயற்பகையாரை
நோக்கிச் “சிவனடியார்கள் குறித்து வேண்டிய பொருளைக் குணமெனவே
கொண்டு ஒன்றினையும் இல்லை யென்னாது நீர் கொடுக்கும் உண்மையைக்
கேட்டு உம்மிடத்து ஒரு பொருளை வேண்டி வந்தோம்; அதனைக்
கொடுக்க இசையலாம் என்றாற் சொல்லலாம்“ என்றார். அதுகேட்ட
இயற்பகையார் “எந்தப் பொருளும் என்னிடத்துள்ளதேயானால் அது
சிவனடியார்களுடைமையோயாம்; சந்தேகமில்லை; தேவரீர் அருளிச்
செய்யலாம்“ என்றார். வேதியர் “உன் காதன் மனைவியை வேண்டி
வந்தேன்“ என்றார்.
புறத்திலும் சொல்லத்தகாத இம்மொழியை வேதியர்,
எதிரே
நின்று சொன்னபோதிலும், முன்னையினும் மகிழ்ந்து இயற்பகையார்,
“என்னிடம்உள்ள பொருளையே கேட்டது தேவரீர் எனக்குச் செய்த
பேறு“ என்று சொல்லி, விரைந்து மனையுட் புகுந்து தம்
மனைவியாரைப் பார்த்து “விதி மணக்குல மடந்தையே! இன்று
உன்னை இம்மெய்த்தவர்க்குக் கொடுத்தேன்“ என்றார். மனைவியார்
அதுகேட்டுக் கலங்கிப் பின் தெளிந்து, “என் உயிர்நாதராகிய நீர்
சொல்லிய தெதுவோ அதனைச் செய்வதைத் தவிர வேறு உரிமை
எனக்கு உண்டோ?“ என்று கொல்லித் தம் கணவரை வணங்கினார்.
அவரும் இவரை எதிர் வணங்கினார். அம்மையார் போய் மாதவரைப்
பணிந்து அவர் பக்கத்திலே நின்றார். இவ்வாறு“ கொடுத்து மகிழ்ந்த
நாயனார் “ இனி அடியேன் செய்ய வேண்டிய பணிவிடை யாது?“
என்று வேதியரைக் கேட்க, அவர் “நான் இப்பெண்ணைத் தனியாய்க்
கொண்டுபோகும்போது சுற்றத்தாராலும் ஊரவராலும் இடையூறு நேராதபடி
நீ துணை போதுக“ என்றார். “முன்னர் அறிந்து நானே செய்யவேண்டிய
இப்பணியைத் தேவரீர் சொல்லும்வரை தாழ்த்தது பிழை“ என்று சொல்லி
உட்சென்று கச்சு அணிந்து, வாளும் பலகையும் தாங்கி, வீரத்துடன்
இயற்பகையார் புறப்பட்டு, வேதியரையும் முன்னே அம்மையாரையும்
போகவிட்டுத், தாம் துணையாகப் பின்னே போந்தனர்.
|