|
மலாடர் கோமானாகிய
மெய்ப்பொருணாயனார், வேத நன்னெறியினது
உண்மைத்திறம் உலகிலே விளக்கமடையும்படி மேன்மை பூண்டவராய் மிக்க
அன்பினாலே இறைவனது அடியார்களது கருத்தறிந்து அவர்களுக்கு ஏவல்
செய்து வருவாராகியும். 1
468. (இ-ள்.)
வெளிப்படை. அரசியல் நெறியிலே வந்த அற வழிகளில்
வழுவாமற் பாதுகாத்து, மலைபோலுயர்ந்த தமது தோள் வலிமையாற்
பகைவர்களைப் போரில் வென்று மாற்றி, முன்னோர் மொழிந்தவற்றினின்றும்
சிறிதும் பிறழாது ஓங்குகின்ற நீதிநிலையிலே சிறந்தவராகியும், அலை
பொருந்திய கங்கையைச் சடையிலே தரித்த இறைவனது அடியார்
வேடத்தினையே சிந்தையுட் கொண்டவராகியும், 2
469. (இ-ள்.)
வெளிப்படை. உமாதேவியாரை ஒருபாகத்தேயுடைய
சிவபெருமான் வெளிப்பட்டு வீற்றிருக்கும் கோயில்கள் எங்கெங்கும்
பூசைகள் வழுவாது நீடி நடைபெற்று வரும்படியாகவும், ஏழிசைப்பாடலும்
ஆடலும் பொங்கிய சிறப்புக்களிலே மிகவும் பொருந்தி நிகழும்படியாகவும்,
வழுவாது செய்து வழிபட்டு வாழ்வாராகியும், தங்கள் நாயகரன்பர்களது
திருவடிகளையே யன்றி வேறு சார்பில்லாதவராகியும், 3
470. (இ-ள்.)
வெளிப்படை. தமது அரசுரிமையிலே தேடியனவாகிய
பொருள்களும் நீடு செல்வங்களும் திருத்தில்லையிலே ஐந்தொழி
லருட்கூத்தியற்றும் பெருமானது அன்பர்க்கே யாவனவாகும் என்று நாடிய
மனத்துடனே, தம்மை யாட்கொள்ளும் நாயன்மார்களாகிய அரனடியவர்கள்
அணைந்தபோது கூடிய மகிழ்ச்சி பொங்கக் குறைவற அச்செல்வங்களை
வேண்டுமாறு கொடுத்து வந்தார். 4
467. (வி-ரை.)
சேதி நன்னாட்டுத் திருக்கோவலூர் - சேதி
-
நாட்டின் பெயர். திருக்கோவலூர் - நகரின்
பெயர். எனவே,
இப்புராணத்திற்குரிய நாடும் நகரமும் கூறியவாறு. நன் -
நீடு - என்பன
முறையே அவற்றின் சிறப்புக் கூறியன. மலாடர் - வழிவரும்
- ஏவல்
செய்வார் - எனக் கூறியவாற்றால் அந்நாட்டு மக்கட் சிறப்பும், அரசு
மரபுச் சிறப்பும், அரசரும் அவரது பண்பும் என்ற இவற்றை எடுத்துரைத்தார்.
சேதிநாடு
- இது நடுநாட்டின் ஒரு சிறு உட்பகுதியாம்
தொண்டைநாட்டுக்கும் சோழநாட்டுக்கும் நடுவில் உள்ளதாதலின் நடுநாடு
எனப் பெறும். தொண்டைநாடும் அதன் வடக்கில் உள்ள வடநாடும்,
சோழநாடும் அதன் தெற்கில் உள்ள தென்னாடு எனப் பெறும் பாண்டி
நாடும் என்ற பலவற்றுள்ளும் நடுவில் உள்ளது இந்நடுநாடு என்றலும்
பொருந்தும். இந் நடுநாட்டினுள், வழிவழி வந்த பல சிற்றரசு மரபினர்களால் ஆளப்பெற்ற
பல உட்பகுதிகளான சிறு நாடுகள் உண்டு. அவற்றிலே
சேதிநாடு ஒன்று. நாட்டினை ஆளும் அரசமரபினர் பேரால் வழங்கும்
சோழநாடு, பாண்டியநாடு என்பனபோல, இந்நாட்டினை ஆளும் சேதியர்
மரபுப்பேரால் சேதிநாடு எனும் பேரும் வந்தது
என்பர். திருவிசைப்பாப்
பாடிய சேதிராயர் இம்மரபில் வந்த அரசர்களில்
ஒருவர் என்ப.
மலாடர் கோமான்
- இந்தச் சிற்றரசு மரபு வழியிலே மலையமான்,
நத்தமான், சுருதிமான் என மூன்று உட்பிரிவினர் உள்ளார் எனவும்,
அவர்களில் மெய்ப்பொருணாயனார் மலையமான்
என்ற பிரிவினைச்
சேர்ந்தவர் எனவும் கூறுவர். சோழன் நாடு சோணாடு என வந்ததுபோல,
மலையமான்நாடு மலாடு என மருவி வந்ததென்பர்.
புணரியற்
புறனடையானே மரூஉ வழக்கிற்கு இலக்கணங்களில் இதனைப் புலவர்
உதாரணங்காட்டுவதும் காண்க. திருநாவலூரில் அரசு செலுத்திய
நரசிங்கமுனையரைய நாயனார் இம்மூன்றுட்பிரிவுகளில் ஒன்றனைச்
சார்ந்தவர் என்று கூறுவாருமுண்டு. சுருதிமான் மரபினர்க்கு மூப்பர் என்ற
பேரும் உண்டென்பர். முனையதரையர் என்பதே முனையரையர்
என்றாயிற்றென்றும், அம்மரபும் இவற்றுடன் விரவியதென்றும்
ஆராய்ச்சியாளர் கூறுப. இவற்றின் விரிவெல்லாம் சரித்திர ஆராய்ச்சியிற்
கண்டு தெளிக.
|