|
சேதி
நன்னாட்டு - நன் - சேதி என்ற பெயருக்கும் அதனைக்
கொண்டுமுடியும் நாடு என்ற பெயருக்கும் இடையில் வந்த பண்பு குறித்த
இடைப்பிறவரல் என்பர் இலக்கண நூலார். “தூய மாதவஞ் செய்தது
தொண்டை நன்னாடு“ என்புழிப் போலக் கொள்க. “உருபு முற்றீ ரெச்சங்
கொள்ளும், பெயர்வினை யிடைப்பிறவரலுமா மேற்பன“
என்பது இலக்கணம்.
ஏற்பனவே இடைப்பிறவரலாய் வரும் என்றதனாலே இந்நாட்டுக்கு
நன்மையே ஏற்றதென்பது கருத்தாம். நன்மையாவது நாடாவளங்கள்
மிகுதலோடு, நலங்களுள் மிக்கதாகிய வீடுபேற்றுக்குரிய நலமும் மிகுதல்.
நீடு திருக்கோவலூர்
- திரு நீடு கோவலூர் என
மாற்றியுரைத்துக்கொள்க. திரு - சைவத்திரு. கண்டாரால் விரும்பப்படும்
தன்மை நோக்கம் என்பர் பேராசிரியர்.
கோவலூர்
- சிவபெருமான் வீரஞ்செய்த எட்டுத் தலங்களுள்
ஒன்றாய் அந்தகாசுரனைச் சங்கரித்த தலம். இதனைத் திருக்கு
- ஓவல் -
ஊர் - எனப் பிரித்து அறியாமையை ஒழித்து உயிர்களுக்கு அருள் புரியும்
தலம் என்று தலமான்மியங்கூறும். எனவே உயிர்களுக்கு ஊனத்தை நீக்கி
அருளும் தன்மை நீடிய ஊர் என்க. “கோவலூர்
வினையை வென்ற
வேடத்தான் வீரட்டானஞ்“, “கோவலூர்தனுள் வீடுகாட்டு நெறியினான்
வீரட்டானம்“ என்ற ஆளுடைய பிள்ளையாரது இத்தலத் தேவாரங்கள்
காண்க.
மன்னி
- இவ்வரச மரபு நெடுங்காலமாக நிலைபெற்று வழிவழி
இந்நகரைத் தமது தலைநகராகக் கொண்டு அரசளித்தது என்பதாம்.
அன்பின் வழிவரும்
- இரு மரபிலேயும் சிவனடியார்களான
பரம்பரையில் வழி வழி வந்த சைவ மரபினர் என்க. “வழிவழி யாளாய்
மணஞ்செய் குடிப்பிறந்த, பழவடியார்“ என்பது திருவிசைப்பா. மாதொரு
பாகர் அன்பின் வழிவரும் - “அருளென்னும்
அன்பீன்குழவி“ என்றபடி
இங்கு, அன்பு என்றது, அருளின்
மூலத்தைக் குறித்ததாகக் கொண்டு,
பாகர் உயிர்களின்மேல் வைத்த அருண் மூலத்தினானே அதன் வழி உலகில்
வளர்ந்து வருகின்ற என்றுரைத்தலுமாம். “நாரையூர் அன்பனுக்கு“, “அன்பர்
கோயி லெதிர்கொள் பாடி“ “தீர்ந்த அன்பாய அன்பர்க் கவரிலுமன்ப
போற்றி“ முதலிய தேவார - திருவாசக ஆட்சிகளும் காண்க. பல
பிறவிகளிலேயும் சிவனுக்கு அன்பு செய்த வழி எனவும், சிவன் வைத்த
அருண் மூலவழியிலே வந்த எனவும் இருவழியும் உரைக்க நின்றது.,
வேத நன்னெறியின்
வாழ்மை விளங்கிட மேன்மை பூண்டு -
சித்தாந்த சைவம் வேத நெறிகளையெல்லாம் தன்னுள்ளே அங்கமாய்
அடங்கத் தான் இவற்றுள் அடங்காது முழுமுதற் றன்மை பெற்று
விளங்குவது. “வேதநெறி தழைத்தோங்க மிகு சைவத் துறைவிளங்க“ என்ற
புராணங் காண்க. வேதத்திற் சொல்லிய பலவுங் சைவத்தின் அங்கமாவன.
அங்கங்கள் விளங்கவே முழுமையும் விளங்குவதாம். “வேதமோது
நெறியினான் வீரட்டானம்“ என்ற இத்தலத் தேவாரங் காண்க.
வேதநெறி
என்னாது வேத நன்னெறி எனவும், அதனோடமையாது
வேத நன்னெறியின் வாய்மை
- எனவுங் கூறியது வேதங்களின்
உள்ளுறை உண்மையான சைவத்திறத்தினைக் குறித்தது. “வேத
உள்ளுறையாவன“ அரனடியார் பூசையும், அரன் பூசையுமே எனத்
திருநீலநக்க நாயனார் புராணத்துக் கூறியதும் காண்க.
வேதநெறி விளங்கிட மேன்மை
பூண்ட இவ்வரசர் பொதுப்பட
அதனுள் விதித்த எல்லா அறங்களையும் காவல் புரிந்தனரேனும், தாம்
காதலால் ஈசர்க்கன்பர் கருத்தறிந்தேவல் செய்வா
ராயினார் என்றதாம்.
அரசராதலின் எல்லா அறங்களையும் காக்குங் கடப்பாடுடையர்; ஆயினும்,
அவற்றின் உண்மைநிலையினைத் தம் ஒழுக்கத்திலே வைத்து உலகில்
நடந்து காட்டினார் என்பது. விளங்கிட -
தாம் நிற்பதனோடு உலகினையும்
நிறுத்தும் பொருட்டு - விளங்கச் செய்ய. விளங்கிடம்
மேன்மை -
விளங்கும் இடமாகச் சுட்டி யறியத்தக்க மேன்மை என்றலுமாம்.
|