பக்கம் எண் :


58 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

Periya Puranam
இவரது பதினோரந் திருமுறைப் பிரபந்தங்களால் உணரப் பெறும். பெரிய
புராணமாகிய விரிநூலுக்கு வகை நூல் உணர்த்தியவாறு. தொகை - வகை -
விரி - என்று நூல்கள் மூன்றாக வகுக்கப்பெறும். இங்குத் தொகை - வகை
- விரி நூலாவன மேலே உரைத்தார். இனி, முதல் - வழி - சார்பு - என
மூவகை நூல்களாக வகுக்கும்போது இப்புராணம் சார்பு நூலாம். இதற்குத்
திரு அந்தாதி வழிநூல் என இங்கு உணர்த்தியவாறுமாம்.

     பொள்ளாப் பிள்ளையார் என்பது பொல்லாப் பிள்ளையார் என
வழங்கும். பொள்ளுதல் - தச்சனாற் றொளைக்கப்படுதல்.
தொளைக்கப்படாமல் தானாய் உண்டானவர். இப்பிள்ளையாரிடத்துக் கேட்டு
நம்பியாண்டார் நம்பிகள் திருவந்தாதியருளிச் செய்தார். நூல் வந்த வழியும்
மரபும் உணர்த்தியபடி.

     வந்தவாறும் - என்பதும் பாடம். 39

50. உலக முய்யவுஞ் சைவநின் றோங்கவும்  
  அலகில் சீர்நம்பி யாரூரர் பாடிய
நிலவு தொண்டர்தங் கூட்டம் நிறைந்துறை
குலவு தண்புன னாட்டணி கூறுவாம்.
40

     இதனால் திருமலைச் சருக்கத்தில் வரும் இரண்டாவது பகுதியாகிய
திருநாட்டுச் சிறப்புக்குத் தோற்றுவாய் செய்தார். பொருட்டொடர்பும்
இதனாலே விளங்கும்.

     (இ-ள்.) உலகம்.....கூட்டம் - உலகில் எல்லா உயிர்களும் உறுதிபெற்று
உய்யும் பொருட்டும், சைவத்துறையானது நிலைபெற்று நின்று வளரவும்
அளவில்லாதசிறப்புக்களையுடையார் நம்பியாரூரர்
திருத்தொண்டத்தொகையினாலே துதித்தருளிய, என்றும் நின்றுநிலவும்
திருத்தொண்டர் திருக்கூட்டம்; நிறைந்து உறை.....கூறுவாம் - எப்போதும்
நிறைந்து உறைகின்ற குலவும் தண்ணிய நீர் நிறைந்த காவிரிபாயும் சோழ
நாட்டின் சிறப்பினை இனிக் கூறுகின்றோம்.

     (வி-ரை.) உய்ய - ஓங்க - பாடிய - கூட்டம் என்று கூட்டுக.

     ஆரூரர் பாடிய - ஆரூரராற் பாடப்பெற்ற; செயப்பாட்டு
வினைப்பொருளில் வந்தது.

     உலகம் உய்ய - சைவம் நின்றோங்க; உலகம் உய்வதற்குக் காரணம்
சைவம் நின்று ஓங்குதலேயாம். ஆதலால் இம்முறையே வைத்தார், “தீதிலாத்
திருத்தொண்டத் தொகை“ என மேலே (25) கூறியதும் காண்க.

     குலவு - குலவு - புனல்; குலவுதல் - விளக்குதல்; யாவராலும்
புகழப்பெற்ற புனல் என்க. குலவு என்பதனை நாடு என்றதனோடு சேர்த்துக்
குலவுநாடு என்று உரைத்தலுமாம். கூட்டம் நிறைந்துறைவதனாற் குலவப்பெற்ற
நாடு என்க. இது சோழநாடு.

     நிலவு தொண்டர் - ஆண்டானாகிய சிவபெருமானைப் போலவே
தொண்டர் கூட்டமும் என்றும் நிலைபெற்றது என்றபடி.

     தண்புனல் நாடு - குளிர்ந்த நீர்; என்றும் பொய்யாது பெருகும்
காவிரிபாயும் நாடு. “பூந்தண் பொன்னி எந்நாளும் பொய்யாதளிக்கும்
புனல்நாடு“ சண்டேசுரர் புராணம் - 1.

     இது சோழநாடாம். “ஓருலகோ ஒரு திசையோ ஒருபதியோ“ என்றபடி
இப்புராணத்துட் கூறப்பெற்ற தொண்டர்களுடைய நாடுகள், தொண்டை நாடு
- சேரநாடு முதலிய நாடுகள் பலவாயிருப்பவும், சோழ நாட்டையே
இப்புராணத்துக்குரிய நாடாக உரைத்தது என்னை? என எடுத்துக்கொண்டு,
இப்புராணம் திருத்தொண்டர் புராணம் ஆதலாலும், அவர்கள் அனைவரும்
திருத்தொணடத் தொகையிலே தொகுத்துத் துதிக்கப் பெற்றாராதலாலும்,
அத்திருத்தொண்டத் தொகையின் விரிவே இப்புராணமாதலாலும், அவர்கள்
திருவாரூரிலே தேவாசிரிய மண்டபத்திலே நிலைபெற
எழுந்தருள்வார்களாதலாலும், அந்தப் பதிகம்