பக்கம் எண் :


பதிகம்59

Periya Puranam
பிறந்ததும், அவர்கள் இருந்ததும், ஆகிய சோழ நாடும், திருவாரூர்த்
திருநகரமுமே இப்புராணத்திற்கு நாடு நகரமுமாம் என்பார் “தொண்டர்தங்
கூட்டம் நிறைந்துறை - நாட்டணி கூறுவாம்“ என்று காரணமும் தொடர்பும்
காட்டியருளினார். 40

பதிகம்

     இப்புராணத்து நாடுநகரமும் கூறுமுன் பதிகம் அமைகின்றவாறு : -
நாடு - நகரம், புராணவரலாறு கூறியபின் பதிகம் கூறுவது முறையாகவும்,
இவ்வாறே பின் ஆசிரியர்களான சிவஞான சுவாமிகள் - பரஞ்சோதி முனிவர்
- முதலாயினோர் அமைத்திருப்பவும், இங்கு நாடு நகரம் புராண
வரலாறுகளின் முன் பதிகம் அமைத்தது என்னை? எனின் -
இப்புராணத்துக்கு எல்லா நாடுகளும் நாடாக, அவற்றிற்கு மணிமுடி போன்ற
திருமலையைச் சொல்லிப் புராண வரலாறும் ஆசிரியர்
முன்னர்க்கூறியருளினர். ஆதலின் இதன் அமைதி இங்குப் பொருந்தியவாறு
காண்க. இப்புராணத்திற்குப் பதிகமாவது “மற்றிதற்குப் பதிகம்“ என்ற
மேலைப்பாட்டிலே “திருத்தொண்டத் தொகை“ எனப்பெற்ற நற்பதிகமே என்று
ஆசிரியர் மேற்கொண்டமை உரைக்கப்பெற்றது. பதிகமாவது இன்னதென்பது
அப்பாட்டினுரையிற் கூறப்பெற்றது.

திருத்தொண்டத்தொகைத் திருப்பதிகம்

பண் - கொல்லிக் கௌவாணம்

திருச்சிற்றம்பலம்

தில்லைவா ழந்தணர்தம் மடியார்க்கு மடியேன்
     றிருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன்
இல்லையே யென்னாத வியற்பகைக்கு மடியேன்
     இளையான்றன் குடிமாற னடியார்க்கு மடியேன்
வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன்
     விரிபொழில்சூழ் குன்றையார் விறன்மிண்டர்க் கடியேன்
அல்லிமென் முல்லையந்தா ரமர்நீதிக் கடியேன்
     ஆரூர னாரூரி லம்மானுக் காளே.
1
   
இலைமலிந்த வேனம்பி யெறிபந்தர்க் கடியேன்
     ஏனாதி நாதன்ற னடியார்க்கு மடியேன்
கலைமலிந்த சீர்நம்பி கண்ணப்பர்க் கடியேன்
     கடவூரிற் கலயன்ற னடியார்க்கு மடியேன்
மலைமலிந்த தோள்வள்ளல் மானக்கஞ் சாற
     னெஞ்சாத வாட்டாய னடியார்க்கு மடியேன்
அலைமலிந்த புனன்மங்கை யானாயர்க் கடியேன்
     ஆரூர னாரூரி லம்மானுக் காளே.
2
   
மும்மையா லுலகாண்ட மூர்த்திக்கு மடியேன்
     முருகனுக்கு முருத்திர பசுபதிக்கு மடியேன்
செம்மையே திருநாளைப் போவார்க்கு மடியேன்
     திருக்குறிப்புத் தொண்டர்தம் மடியார்க்கு மடியேன்
மெய்ம்மையே திருமேனி வழிபடா நிற்க
     வெகுண்டெழுந்த 1தாதைதாண் மழவினா லெறிந்த
அம்மையா னடிச்சண்டிப் பெருமானுக் கடியேன்
     ஆரூர னாரூரி லம்மானுக் காளே.
3


1 தாதையை - பாடபேதம்.