|
மெய்யெலாம்
நீறு பூசி - முழுத் தவ வேடம் பூண
எண்ணினானாதலின் முழு நீறு பூசிய முனிவர்போல உடம்பெங்கும் நீறு
பூசினான். முன்னர் நீறு பூசியவனன்றாதலின் தரிக்கக்தக்க இடமிது தகாத
இடம் இது என்று அறியாதவனாய் மெய்யெலாம் பூசினான் என்ற
குறிப்புமாம். வேணிகள் முடித்துக் கட்டி -
தனது குடுமியினைச் சடைகள்போலத் திரித்து அவற்றைத் தொகுத்துச் சடைமுடியாக்கி.
முடித்துக் கட்டுதல் - தலைமேல் முடிபோலக் கூப்பி நிற்கும்படி கட்டி
முடிதல். வேணி - சடை . நீறும் வேணியும்
முன்னர் இவன் உடையனாயின்,
அவை சைவ அடையாளமாதலின், நாயனார் அவ்வேடத்தை
வழிப்பட்டொழுகி யிருப்பாரேயன்றிப் பகைப்பட்டுப் போர்செய்திரார்;
எனவே, இவற்றை இவன் புதிதாகப் தாங்கினவனாம். நாடிழந்தவன் பலநாள்
காட்டில் மறைந்து சடை வளர்த்தான் என்பாருமுண்டு.
படைகரந்த புத்தகக்
கவளிஏந்தி - தான் நினைத்த வஞ்சனைச்
செய்கையைச் செய்தற்குக் கருவியாகிய படையை மறைத்து அதனையே
ஒருபுத்தகம் போல கவளிகையிற் கட்டி எடுத்து. படையை மறைத்தற்கும்,
இதுவும் ஒரு சைவ அடையாளமென வஞ்சித்தற்கும் என இருவகையும்
கருதிப் படைகரந்த கவளியாக்கினான் என்பதாம்.
மைபொதி விளக்கே
யென்ன மனத்தினுட் கறுப்பு வைத்து -
மையாகிய நீல நிறத்தைத் தனக்குள் வைத்தும், அதனைச் சுற்றி
விளக்கத்தினைச் செய்து ஒளிரும் விளக்குப்பேல, மனத்தினுள்ளே
கறுப்பாகிய வஞ்ச எண்ணம் பொதிந்து வைத்துக் கொண்டு விளக்கஞ்
செய்யும் நீறு முதலிய தவவேடத்தைப் புறத்தே விளங்க வைத்தானென்க.
எரியும் திரியைச் சுற்றிப் பெரிய நீலக்குப்பாயம் போன்று குவிந்து
மேனோக்கியதொரு மை சூழ்ந்துகொண்டிருப்பது
காணலாம். அதன்
வெளியிற் சூழ்ந்து விளக்கின் சிவந்த சுடர் எரிவதும் காணலாம். அந்த
சிவந்த எரிசுடரின் மேற்பகுதியினைச் சுற்றி வெண்சுடர்க் கொழுந்தையும்
காணலாம். எனவே ஒவ்வொரு விளக்கின் சுடரும் திரியினைச் சுற்றிய
நீலக்குப்பாயம், அதன் மேற் செஞ்சுடர், அதன்மேல் வெண்சுடர் என மூன்று
பகுதிகளையுடையது. விளக்குச் சுடர் எரிவதற்கு ஆதரவானது நெய். அது
உருகி நெய்யாவியாக மாறும். அது நீல நிறத்துடன் நின்று திரியைச் சுற்றிய
சுடரினது உட்பாகமாய், நெருப்புக்கு விறகு உதவுவதுபோல, விளக்குச்சுடர்
எரிவதற்குக் காரணமாய் உதவுகின்றது. ஆகவே சுடரின் நிலைப்பகுதியான
உட்கறுப்பே அதன் விளக்கத்துக்குக் காரணமாம். இங்கு முத்தநாதன்
கொண்ட தவ வேடத்திற்கு அவன் தனது மனத்தினுட் கொண்ட வஞ்சக்
கறுப்பே காரணமாயிற்று என இவ்வரிய வுவமத்தின் அழகினை விரித்துக்
கண்டுகொள்க. நெய்ஞ்ஞின் றெரியும் விளக்கொத்த நீலமணி மிடற்றான்
(அப்பர் பெருமான் - கோயில் - திருவிருத்தம் - 4) முதலிய
திருவாக்குக்கள் காண்க. விளக்கும் இருளும் என்ற முரண்பட்ட இரண்டு
பொருளுக்கு ஏற்ற இந்த உரிய அரிய உவமானம் ஆசிரியர் சேக்கிழார்
பெருமானது தெய்வமணக்கும் செய்யுற்களிற் காணும் அரிய உவமங்களில்
ஒன்று. இஃது வேறு எந்தக் கவிகளிடத்தும் காணுதலரிது. இதன்
அருமையினை உன்னிக் களிக்க.
இவ்வாறன்றி மை
- என்பதற்கு நிழலாகிய இருள் என்று
பொருள்கொண்டு தன்கீழே இருளாகிய நிழலைக் கொண்ட விளக்கு
என்றுரைப்பாருமுண்டு; விளக்குள்ள பக்கம் நிழலுண்டு என்ற பழமொழியுங்
காட்டுவர். மற்றுஞ் சிலர் இதனை இல்பொரு ளுவமையென் றொதுக்கினர்.
சுடருட் பொதிந்து மறைந்து நிற்கும் மைந்நிறங்கொண்ட புகையினை
உட்கொண்டு என்பாருமுண்டு.
பொய்தவ வேடம்
- பொய்த்தவம் என்றது எதுகை நோக்கிப்
பொய்தவமென நின்றது. பொய்யானது தடவேடங்கொண்டு இவனுடன்
வந்ததென்க. பொய்யினைக் கொண்டு உதவிசெய்து கொள்ளத் தவவேட
முடன்வந்தது என்றலுமாம். நீறு - வேணி என்னும்
சைவத் தெய்வத்
தவவேடம் என்றும் மெய்யேயாம்; அவ்வேடம் பொய்யாவதில்லை.
மெய்த்தவவேடமே மெய்ப்பொருளெனத் தொழுது
|