பக்கம் எண் :


620 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

Periya Puranam

யராய், அவனையும் புற கென்ற திறத்தைக் காண்க. அற எறிவார் - அற
-
அறவே - முழுதும். அறும்படியாக என்றலுமாம். எறிவார் - எறிவாராயினர்.

     எல்லை தெரிய ஒண்ணாதார் - பொருளின் அளவால்
அளக்கலாகாதவருடைய. முன் செப்பற்கரிய என்றது உரையின் வரையால்
அளக்கலாகாமை குறித்தது. இதனை நாயனார்க்குக் கூட்டி அளவிடமுடியாத
பெருமையுடையவர் என்றுரைப்பாருமுண்டு. எல்லை தெரிய ஒண்ணா
இறைவன் கழல்பற்றியவராதலின் இவரும் அத்தன்மையினரே.

     மெய்ப்பத்தர்கள் - உண்மை யன்பர்கள். மெய்ப்பொருணாயனார்
போலல்லாது இந்நாயனார் உண்மையன்பர்கள்பாலே பத்தி செய்வார். ஆயின்
இவர் வேடத்தைச் சிந்தை செய்யாரோ எனின், வேடத்துடன் உண்மை
யன்பும் உடன்சேர்த்தி எண்ணி அன்பு செய்வார் என்க. இது இவரது சரிதக்
குறிப்பாகும். நம்பியாரூரரையும் அவரை ஆட்கொண்ட பெருமானையும் புறகு
என்று கூறவல்ல விறல் படைத்தவராதலின் இவரது திருவுள்ளம் மெய்ப்
பத்தர்கள் பாற் பரிவுடையது
என்றார். பரிவுடைமை - அன்பு
பூண்டொழுகுதல்.

     எம்பிரானார் - எமது பெருமானார். தலைவர் என்று ஆசிரியர்
இங்குக் குறித்ததன் காரணம் 501-ம் பாட்டிற் காண்க. இப்புராணத்திற்கு
முதனூலாகிய திருத்தொண்டத் தொகை இவராலே உலகம் பெறுதற்குக்
காரணமாயிற்று என்ற நன்றி கருதி வணங்கினார் என்க. அதனாலே
தொண்டர் கூட்டமும் அவர் புகழும் உலகெலாம் எங்கும் நிலவி
நின்றதென்பதுமாம்.

     அவதரித்தார் - எறிவார் - உடையார் - பிரானார் - விறன்மிண்டர்
என முடிக்க. எண்ணும்மைகள் தொக்கன. நாயனாரது பெயரை முதலிற் கூற
நேர்ந்தபோது, இவ்விடத்து “மெய்ப்பத்தர்கள்“ அடியின் அடியில் ஆசிரியர்
அமைத்துக்காட்டி, நாயனாரது உண்மை நிலையைக் குறித்த அழகு காண்க.
473-உரை பார்க்க. மெய்ப்பத்தர்கள்பாற் பரிவுடைமையே “கூட்டம் பேணா
தேகும் ஊரனுக்கும் புறகு
“ என்று நாயனார் கூறக் காரணமாயிற்
றென்பதும், இதுவும் இச்சரிதக் குறிப்பாம் என்பதும் இங்கும் காண்க. வரும்
பாட்டும், 498-ம் பாட்டும் காண்க. 4

495. நதியு மதியும் புனைந்தசடை நம்பர் விரும்பி
                             நலஞ்சிறந்த
 
  பதிக ளெங்குங் கும்பிட்டுப் படருங் காதல்
                           வழிச்செல்வார்
முதிரு மன்பிற் பெருந்தொண்டர் முறைமை நீடு
                            திருக்கூட்டத்
தெதிர்முன் பரவு மருள்பெற்றே யிறைவர் பாதந்
                         தொழப்பெற்றார்.
5

     (இ-ள்.) வெளிப்படை. கங்கையையும் பிறைச்சந்திரனையும் சூடிய
சடையினையுடைய சிவபெருமான் விரும்பி வெளிப்பட் டருள்வதால்
நன்மையிற் சிறந்த திருப்பதிகள் எங்கெங்கும் கும்பிட்டுச் செல்லும்
ஆசையினால் வழிச்செல்வாராய், (அவ்வாறு கும்பிடுகின்ற முறையிலே)
முதிர்ந்த அன்புடையார்களாகிய பெருந்திருத்தொண்டர்களது திருக்
கூட்டத்தின் எதிரே முன்னர்த் துதித்துப், பின்பே இறைவரது
திருப்பாதங்களைத் தொழும் பேறு பெற்றார்.

     (வி-ரை.) நம்பர் - நம்பி அடைதற்குரியார். “நம்புவார்க் கன்பர்
போலு நாகவீச் சரவ னாரே“ என்ற திருநேரிசை காண்க. இவர்பால் வைத்த
நம்பிக்கை எஞ்ஞான்றும் எவ்விடத்தும் யாவர்க்கும் பொய் போவதில்லை
என்பது. “நாளுமற் றவர்க்கு நல்கு நம்பர்தா மளக்கி னன்றி“ - எறிபத்தர்
புராணம்
- 56.

     விரும்பி நலஞ்சிறந்த பதிகள் விரும்பி - விரும்ப. விரும்புதலால்.
விரும்பி வெளிப்பட வீற்றிருந்தருள்வதனால். நலஞ்சிறத்தலாவது
வெளிப்பட்டருளிய அன்றுமுத லின்றுவரை அடைந்தார்க் கெல்லாம்.
அவ்வவர்க் கேற்றபடி சிறந்த நன்மை தந்து விளங்குதல்.