பக்கம் எண் :


674 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

Periya Puranam
ஓடும் செம்பொனும் ஒக்க நோக்கும் அடியார் திறத்து நின்றவராகிய நாயனார்
கோவண நிறை காணும் இடத்து விலையும் மதிப்பும் குறிக்கொள்ளாது
நிறையளவொன்றனையே குறித்தார். ஆதலின் பொன் - வெள்ளி - மணி
யிவைகளை முன்னர் இட்டார் என அவற்றைப் பிற உலோகங்களின்
முன்னர்க் கூறியது காண்க. பிற உலோகங்களை முன்னர் இடுவாராயின்
பொன் முதலியவற்றை விலைநோக்கித் தமக்கென எண்ணியவராக்
கொள்ளவரும் என்பது குறிப்பாம். பொன் - வெள்ளி முதலியன
அந்நாளிலும் நாணயங்களாகவும் விலைபெற்ற அணிகலன்களாகவும்
வழங்கினர் என்றறிகின்றோம்.

     புணர்ச்சிகள் பலவும் - பல தனி உலோகங்களின் சேர்க்கையால்
உண்டாகும் வெண்கலம் முதலியன.

     எல்லையில் பொருள் - “அந்நிலைக்கண் மிக்கவர்“ 503, என
முன்னர்க்குறித்தபடி வாணிபத் துறையிலே வேறு நாடுகளிலிருந்தும் வரும்
பொன் - மணி - துகில் முதலிய விலைபெற்ற சரக்குக்களில் மிக்க வாணிபம்
செய்தாராதலின் மிக்க பொருள் பெற்றனர். இவையே இந்நாளிலும் மிக்க
பொருள் வரும் வாணிபமாதலும் காண்க. ஆதலின் எல்லையில் பொருள்
என்றார். பின்னர் அவரே உலைவில் பல் தனம் - (541) என்று தமது
பொருள்களின் அளவற்ற பெருநிலையினைக் கூறுதலும் காண்க. எல்லையில்
- வகையிலும் தொகையிலும் அளக்கலாகாத நிலை குறித்தது.

     சுமந்து - இவற்றின் விலை குறியாது எடைமட்டிற்
குறிக்கொண்டாராதலின் சுமந்து என்ற சொல்லாற் குறித்தார். இவை உருவிற்
சிறியவாயினும் எடையில் மிகும். இவை பலவும் சேருங்கால் மிகுகனமாம்
என்பதும் குறிப்பு. சுமந்து இட்டதேயன்றிப் பயனில்லை என்ற இலேசாற்
கூறியதுமாம்.

     இடஇட - பல வகைகளையும், ஒவ்வோர் வகையினிலும்
பலவற்றையும்குறித்த அடுக்கு. “துகில்பட்டுடன் இடஇட“ 535. என்றதும்
காண்க.

     கொண்டே - கொண்டேயும். சிறப்பு உம்மை தொக்கது.

     மல்கு - நிரம்பிய - நிறைவெய்திய. இனி இடப்பெறும்
பொருளின்மையின் இவ்வாறு கூறிமுடித்தார். 541 பார்க்க. மீதெழுந்தது
மேல் எழுந்தபடியே நின்றது.

     வியந்தனர் - காரணமறியாத பெருஞ் செயலைக் கண்டபோது
உளதாம் உள்ள நிகழ்ச்சி வியப்பு எனப்படும். இதனையே பின்னர்த்
திருவருளும் திருத்தொண்டின் பெருமையும் காரணமாகக் கண்டபோது
துதிசெய்து அதிசயித்துத் தொழுதார் (546) என்பதும் காண்க. வியப்பின்
மிகுதியும் விரைவும் கருதிப் பயனிலையை முன்னர் வைத்தார். அறிவின்
வலிமை பெற்ற விண்ணோர் இதனை அருளென்றறிந்தாராதலின் அவர்களின்
பராட்டுதல் மட்டும் பின்னர் (546) ஒருசேரக் கூறினார்.

     எல்லைதீர் தனம் - எல்லையில் தனம் - என்பனவும் பாடங்கள். 38

540. தவநி றைந்தநான் மறைப்பொரு ணூல்களாற் சமைந்த  
  சிவன்வி ரும்பிய கோவண மிடுஞ்செழுந் தட்டுக்
கவனி மேலமர் நீதியார் தனமெலா மன்றிப்
புவனம் யாவையு நேர்நிலா வென்பது புகழோ?
39

     (இ-ள்.) வெளிப்படை. தவத்தால் நிறைந்த நான்மறைப் பொருளாகும்
நூல்களினால் அமைந்து சிவபெருமான் விரும்பியதாய்ச் செழுந் தட்டிலிட்ட
கோவணத்துக்கு இந்த ஒரு பூமியில் அமர்நீதியாரது தனங்கள்மட்டுமேயன்றி
எல்லாப் புவனங்களும் நேர்நிற்க மாட்டா என்று சொல்வதும் அதற்கு ஒரு
புகழாகுமோ? (ஆகாது; அதன் புகழ் அதனினும் மேம்பட்டு நிற்கும்.)

     (வி-ரை.) இப்பாட்டு ஆசிரியர் கூற்று - கவிக்கூற்று என்பர்.