பக்கம் எண் :


அமர்நீதி நாயனார் புராணம்673

Periya Puranam
கொண்டீர் - என்பது. இதுவரை இசைந்ததுபோல இசைவதனைத் தவிர வேறு
சொல்லுவதற்கு என்ன உள்ளது? என்றலுமாம்.

     அங்கு மற்று உங்கள் தனங்களின் ஆகிலும் - அங்கு -
சேய்மைச் சுட்டு, துலை நாட்டி நறுக்கின்ற இங்கில்லாமல் சேமங்களாகிய
அங்கு என்க. எல்லாம் என்னுடைய பொருள்களேயாயினும் உங்களுடையன
என்று எண்ணிக் கொண்டிருக்கும் அவ்விடத்தே உள்ள என்பது குறிப்பு.
இங்கு - தம்முடையதான சிவச்சார்பு. அங்கு - அதற்கு வேறாகிய மாயா
உலகம். ஆகிலும் - கோவணத்திற்கு எவ்வாற்றானும் தொடர்பு கொண்ட
இனமல்லாவிடினும் அவற்றிலாகிலும். மேலே ஏனைய என்றதற் கேற்ப
இவ்வாறு கூறினார். 37

539. நல்ல பொன்னொடும் வெள்ளியு நவமணித்
                                 திரளும்
 
  பல்வ கைத்திறத் துலோகமும் புணர்ச்சிகள் பலவு
மெல்லை யில்பொருள் சுமந்தவரிடவிடக்
                               கொண்டே
மல்கு தட்டுமீ தெழுந்தது; வியந்தனர் மண்ணோர்.
38

     (இ-ள்.) வெளிப்படை. நல்ல பொன்னுடனே வெள்ளியும்
நவமணித்தொகுதிகளும் மற்றும் பலவகையான் மேம்பட்ட தனி
உலோகங்களும் இன்னும் பல உலோகங்களின் சேர்க்கையாலான பலவகைப்
புணர்ச்சி உலோகங்களும் ஆக அளவற்ற பொருள்களை அவர் சுமந்து வந்து
அந்தத் தட்டில் இடஇட அது அவற்றைத் தன்னுட் கொண்டே,
நிறைவுடையதாயும், மேலெழுந்தபடியே நின்றது; உலகத்தார் அதைக் கண்டு
வியப்படைந்தார்கள்.

     (வி-ரை.) நல்ல பொன்னொடு - உலோகங்களில் உயர்ந்ததும்,
நற்பயன் றருவதும் ஆகிய பொன்னுடனே. பொன்னிலே நல்ல - உயர்ந்த -
சாம்புநதம் முதலாக அதனுடனே என்பாருமுண்டு.

     பொன்னொடு வெள்ளியும் - பொன்னிலும் வெள்ளி தாழ்ந்ததாயினும்
அதனோடு ஒருபுடை ஒக்க வெண்பொன் என்று சொல்லப்பெற்று
அதற்கடுத்தபடியில் வழங்க உள்ளது. பொன்னின் உயர்வு குறித்து ஒடு விகுதி
தந்து பிரித்தோதிய படியாம். அதனோடு சேர்க்கத்தகாததாயினும் தனம்
என்று இதனையும் வழங்குதலால் இதனையும் இட்டார் என்பார் வெள்ளியும்
என இழிவு சிறப்பும்மை கொடுத்தோதினார். எண்ணும்மையுமாம்.

     நவமணித் திரளும் - பொன்னினை அடுத்துவரும் தனங்களின் வகை
மணிகளாம். “பொன்னு முத்துநன் மணிகளும்“ (503), “பொன்னினு
மணியினும்“ (375) முதலியன காண்க. பொன்னினும் மணிகள்
விலையுயர்ந்தவையாதலின் அவற்றை முன் வைக்காது பொன்னின் பின்
வைத்ததென்னை? யெனின், மணிகள் பொன்னி லழுத்தியோ அல்லது
பொன்னாற் கட்டியோ பொன்னொடு புணர்ந்தாலன்றிப் பயன்படுமாறில்லை.
இவற்றை மதிப்பதும் பொன்கொண்டேயாம். ஆதலின் பொன்னை முன்னர்
வைத்ததுமன்றி நல்ல என்ற அடைமொழியும் கொடுத்தோதினார். பொன்
அமையாதவிடத்து ஒரோவழி வெள்ளியும் அவ்வாறே மணிகளுக்கு
உதவுதலால் வெள்ளியையும் அடைமொழியின்றி முன்வைத்தார்.
நவமணிகளாவன - கோமேதகம், நீலம், பவளம், புட்பராகம், மரகதம்,
மாணிக்கம், முத்து, வைடூரியம், வைரம் என்பன.

     பல்வகைத் திறத்து உலோகமும் புணர்ச்சிகள் பலவும் - முன்
குறித்த பொன்னும் வெள்ளியுமேயன்றி இரும்பு, செம்பு முதலிய வேறு பலவும்
கருதிப் பல்வகைத் திறத்து என்றார். இவை தனி உலோகங்கள். இரும்பைக்
கரும்பொன் என்னும் வழக்கும் காண்க. இவை தாமே பெரும்பயன்
தருவதனோடு பொன், மணி முதலியவற்றைத் தேடிக்கொள்ள உதவுவன
ஆதலின் திறத்து என்றார்.