பக்கம் எண் :


676 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

Periya Puranam

கொண்டதொரு பொருள் ஆயிரம் பொன்னளவு கொண்டதற்கு நேராகாது
என்றால் அது பின்னதற்கு ஒரு புகழ்ச்சியாகக் கொள்ளப்படாதது போல
என்க. மண்ணோர் வியந்தனர் என மேற்பாட்டிற் குறித்த ஆசிரியர்
இவ்வாறு வியக்கக் காரணமின்று; “வளைவையல் லால்விய வேனய
வேன்றெய்வ மிக்கனவே“ - திருக்கோவையார், என்றபடி இதன்
உண்மையை அறியும் அருட்பதிவு பெறாத மண்ணோர்க்கு மட்டும் இது
வியப்பாயிற்று. அன்றி இஃது கோவணத்திற்குப் புகழாய் நில்லாது என்று
இதன் தத்துவத்தை ஆசிரியர் விரித்துரைத்தபடியாம்.

     தவநிறைந்து நாற்பொருள்மறை - என்பதும் பாடம். 39

541. நிலைமை மற்றது நோக்கிய நிகரிலார் நேர்நின்  
  “றுலைவில் பஃறன மொன்றொழி யாமையுய்த்
                            தொழிந்தேன்;
றலைவ! யானுமென் மனைவியுஞ் சிறுவனுந்
                                தகுமேற்
றுலையி லேறிடப் பெறுவதுன் னரு“ ளெனத்
                              தொழுதார்.
40

     (இ-ள்.) வெளிப்படை. மற்று அந்த நிலைமையை நோக்கிய
நிகரில்லாதவராகிய நாயனார் மறையவர்முன் நேரெ நின்று “கேடில்லாத
பலவகையாகிய தனங்களை யெல்லாம் ஒன்றுகூட விடாமல் தட்டிலே இட்டு
முடித்தேன். தலைவரே! யானும் எனது மனைவியும் சிறுவனும் தகுமேல்
துலையிலே இட ஏறப்பெறுதற்கு உன் அருள் இருப்பதாக“ என்று
தொழுதனர்.

     (வி-ரை.) மற்றது - வேறாகிய அது. தனம் முதலிய பொருட்
சார்புகளாற் கோவண நேர்பெறக்கூடும் என்ற எண்ணம் இதுவரை நின்றது.
இங்கு அது கழிந்து ஒழிந்து வேறுநிலை வருகின்றது. ஆதலின் மற்று என்ற
வினைமாற்றுச் சொல்லும் அது என்ற சேய்மைச் சுட்டும் தந்து ஓதினார்.

     நோக்கிய - நோக்கம் - கூர்ந்த பார்வை. “கண்ணொடு கண்ணிணை
நோக்கொக்கின்“ - குறள் “அண்ணலு நோக்கினான் அவளு நோக்கினான்“
- கம்பராமாயணம். இந்நிலையினைக் கூர்ந்து அறிந்த நாயனார்
பொருட்சார்புகள் யாவும் நேர்நிலா தொழிந்தமை யுணர்ந்தனர்; உணரவே
அந்தப் போதத்தினை ஒழித்து எஞ்சிய உயிர்ச் சார்புகளை நேர்தர மனத்தில்
எண்ணுகின்றார் எனும் மனநிலை குறித்தது.

     நேர்நின்று - ஒரு பெருஞ்செயல் குறித்தோர் நேர்நிற்றல் முறையாம்.
“உடற் செவ்வே நிறுத்தி“ - திருமந்திரம். “செந்நின்று“ - திருஞான. புரா -
1052 காண்க. நேர் - நேரே - எதிரே - என்றது வெளிப்பொருள்.
எதிர்நின்று
என்பது வரும் பாட்டு. நேர்பெற நின்று என்றலுமாம். நேர் -
நேர்ச்சி - சமன் - என்க. இங்குக் கூறிய செயலால் கோவண நேர்பெறப்
போகின்றார் என்றது குறிப்பு.

     உலைவு இல் - உலைதல் - கெடுதல். உலைவில்லாத தனம் என்றது
இதுவரை அது எண்ணித் தீர்ந்தது என்று சொல்ல இயலாதபடி மிகுந்திருந்த
தனம். இன்று தீர்ந்தது என்னும் சொற்பெறுதல் இங்கு உலைவு எனப்பட்டது.
உண்மையில் அவை கெடுதலில்லாதனவே யாம். சிவனடியார் பெற்ற
தனமாயிருந்தன; சிவன்பாற் கொடுக்கப்பெற்றன; கேடிலானுடைய
வாயினமையின் இவையும் கேடிலாதனவாயின என்க.

     ஒன்றும் - முற்றும்மை. ஒன்றொழியாமை - முழுமையும் -
என்றதனை உறுதிபெற வழங்கும் அழகிய வழக்கு.

     ஒழியாமை - ஒழியாமல். உய்த்து - தட்டிலே இட்டு.

     ஒழிந்தேன் - இட்டு முடித்தேன். தீர்த்தேன். எனது - என் பொருள்
என்ற மமகாரம் ஒழிந்தேன் என்பது குறிப்பு. ஒழியாமையிட்டொழிந்தேன்
என்ற சொற்சுவையுங் காண்க. ஒழிந்தேன் - யான்மட்டும் எஞ்சினேன் என்ற
குறிப்புமாம்.

     தலைவ! “யான் எனது என் றற்ற விடமே திருவடி“ என்றபடி இங்கு
எனது என்பது அற்று, யான் என்பது விட்டமையால் திருவடி தோன்றிற்று.
அடியைத்