பக்கம் எண் :


68 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

Periya Puranam
இறங்கி உலகிற் போதருதலால்; பொங்கு........போதலால் - (1) (காவிரி)
நீர்வெள்ளம் பொங்கி வருதலால் உளதாகிய வெள்ளிய தலைபோன்று
உருண்ட வடிவுடைய நுரைகளை மோதி அடித்துக்கொண்டு வருதலால் - (2)
(கங்கை) வெண்டலைகளிற் பொங்கு நுரைபோல மோதி வருதலால்;
எங்கள்.......கங்கையாம் - எங்கள் தலைவனாகிய சிவபெருமானது
திருமுடியிலிருந்து வருகின்ற கங்கையே போலும்; பொன்னியாம் கன்னி
நீத்தம் - காவிரியாகிய கன்னியாற்றின் பெருக்கு. - ஆச்சரியக் குறிப்புப்
பெறவரும் அசை. பொன்னியாம் கன்னி நீத்தம் கங்கையாம் என்று கூட்டுக.

     (வி-ரை.) போதலால் என்பதனை உச்சியிற் போதலால் எனவும்.
பொருது போதலால் எனவும் இரண்டிடத்தும் தனித்தனி கூட்டுக. போதல் -
போதருதல் - புகுதல் - வருதல் - என்க. வெண்டலை - வெள் + தலை -
வெளியிடங்களில் என்றும் கூறுவர்.

     முடிச்சிகரத்துச்சியில் - சடைமுடியின் நுனியின் மேலிடத்திலிருந்து
எனப் பொருள் உரைப்பதும் ஒன்று. அவனது முடி - “சடைமுடி“
(திருவிசைப்பா) என்பர். “சுடர்ச்சடை சுற்றி முடித்து“ என்றபடி
சடைக்கற்றையைச் சுற்றிக் கிரீடமாக அமைந்துள்ளாராதலின் அதன்
மேற்பாகத்தின் நுனியில் ஒரு சடையிலிருந்து பனித்துளி போலக் கங்கை
இறங்கி உலகிற் பரக்த வருவதாம் என்ற புராண வரலாறு காண்க.
காவிரிக்குப் பொருந்த உரைக்கும்போது, முடி - சைய மலையின் சிகரங்களில்
ஒன்று என்க. மலைச் சிகரங்களுக்கு முடி என்று இப்போதும் பெயர்
வழங்குகின்றது.

     கங்கையாம் பொன்னியாம் தென்றிசைக்கு வரும்போது கங்கையிலே
தமது கமண்டலத்தில் தீர்த்தம் முகந்து வந்தனர் அகத்தியர் - என்ற
கந்தபுராண வரலாறு இவ்வொற்றுமைக்குச் சிறப்புத் தருவது காண்க.

     இச்சிறப்புப்பற்றியே கங்கையே காவிரி - காவிரியே கங்கை எனக்
கொள்ளற்பாலது என்பார் கங்கையாம் பொன்னியாம் எனச் சொல்லினும்
ஒற்றுமை நயம் பொருந்தக் கூறினார். “கங்கைக்கே யும்பொற்பார் கலந்துவந்த
பொன்னியின்.......“எனத் திருஞானசம்பந்த சுவாமிகள் போற்றியதும் அறிக.
“காவிரி நாடன கழனி நாடு“ - எனக் கம்பன் இதனை ஒட்டிக் கூறியதும்
காண்க. இப்பாட்டிற் சொல்லும் பொருளும் - என இருவகை ஒப்புமையும்
குறித்தபடியாம்.

     மிசைநின் - றேயிழி - என்பதும் பாடம். 5

56. வண்ணநீள் வரைதர வந்த மேன்மையால்  
  எண்ணில்பே ரறங்களும் வளர்க்கும் மீகையால்
அண்ணல்பா கத்தையா ளுடைய நாயகி
உண்ணெகிழ் கருணையி னொழுக்கம் போன்றது.
6

     இது காவிரிக்கும் உமைஅம்மையாரின் கருணைக்கும் பண்பு ஒப்புமை
கூறுவது.

     (இ-ள்.) வண்ணம் நீள்.......மேன்மையால் - (1) (காவிரி) அழகிய
பெருந்தொடர்ச்சியில் ஒன்றாகிய சையமலையிலிருந்து வந்த மேன்மையினால்
- (2) (நாயகி கருணை ஒழுக்கம்) வண்ணத்தால் எல்லா மலைகளிலும் நீண்ட
இமயமலைக்கு மகளாய் உலகிலே வந்த மேம்பாட்டினால்;
எண்ணில்.......ஈகையால் - (1) காவிரி அளவற்ற பெரிய அறங்கள்
எல்லாவற்றையும் வளரத் துணை செய்து நிற்கும் பொன்னுடைமையினாலே;
(2) (நாயகி கருணை ஒழுக்கம்) எல்லா அறமும் யான் செய்ய வேண்டும் என
வரங்கேட்டு உயிர்களுக்கு அறமாக்கும் வித்தாக இருநாழி நெற்பெற்று அறம்
வளர்த்த பெருங்கொடையினால்; அண்ணல்.........போன்றது - (காவிரியாறானது)
இறைவனது ஒரு பாகத்தைத் தம்மதாக ஆக்கிக்கொண்டு உலகத்தை
ஆட்கொண்ட உமாதேவியாருடைய திருவுள்ளத்திலே எல்லா உயிர்களிடத்தும்
பரந்து நெகிழும் தன்மையதாம் கருணையுடைய இனிய ஒழுக்கம் போன்றதாம்.