| திருவாரூர்த் திருநகரச் சிறப்பு | 69 |
Periya Puranam
(வி-ரை.)
காவிரி - எழுவாய் வருவித்துரைக்க. இப்பாட்டுப்
பண்புபற்றி வந்த பொருள் ஒப்புமையாம். ஆளுடை நாயகியின் கருணை
இடையறாது எல்லா உயிர்களிடத்தும் ஒழுகுவதுபோலக் காவிரியும் ஒழுகுவது
என்பது.
உள்நெகிழ் கருணையின்
ஒழுக்கம் - உமையம்மையார் இமயமலை
யரசன் மகளாய்ப் போந்தமையும், இறைவன்பால் அறம் வளர்க்கும் வித்தாக
இருநாழி நெல் பெற்று அறம் வளர்த்தமையும், அவரது பெருங்கருணையின்
செய்கையேயாம் என்பது, இக்கருணையானது உயிர்களை வாழ்விக்கும்
இச்சையாலே அம்மையாரது திருவுள்ளத்தினின்றும் நெகிழ்ந்து இடையறாது
பெருக்கெடுப்பது என்பார், “உண்ணெகிழ் கருணையின் ஒழுக்கம்“ என்றார்.
இதன் விரிவு திருக்குறிப்புத் தொண்ட நாயனார் புராணத்துட் காண்க.
ஒழுக்கம் - இடையறாது ஒழுகி வருவது.
வண்ணம் நீள்வரை
- பனிமலை; நீள்வண்ணவரை என்க.
உருவினாலும் திருவினாலும் எப்போதும் நீள்வது என்பதாம். ஈகை
- பொன்;
காவிரி - பொன்னுடைமையின் பொன்னி எனப்படும்.
அண்ணல் பாகத்தை ஆளுடை
- மேன்மையும் ஈகையும்
அருளினைப்பற்றியது. அருள் இறைவியின் இயல்பு. எனவே பெருமானது
அருள் உயிர்களிடம் செல்வதற்குத் தாமே இறைவியாயிருத்தலின்
அருட்பாகத்தை ஆளுடை நாயகி; ஆள்கின்ற முதல்வி
என்றுரைத்தலுமாம். 6
| 57.
|
வம்பு
லாமலர் நீரால் வழிபட்டுச் |
|
| |
செம்பொன்
வார்கரை யெண்ணில் சிவாலயத்
தெம்பி ரானை யிறைஞ்சலி னீர்ம்பொன்னி
உம்பர் நாயகற் கன்பரு மொக்குமால். |
7 |
இது
காவிரிக்கும் அன்பர்களுக்கும் செயல் வகையால் ஒப்புமை கூறுவது
(இ-ள்.)
வம்புலாம்.......வழிபட்டு - வாசனையுடைய மலர்களாலும்
நீரினாலும் வழிபாடு செய்து; செம்பொன்........இறைஞ்சலின் - செம்பொன்
மணலையுடைய இருகரையிலும் உள்ள எண்ணில்லாத சிவாலயங்களிலே எமது
பெருமானைக் கும்பிடுதலினாலே; ஈர்ம் பொன்னி - நீர்வற்றாத காவிரியாறு;
உம்பர்.......ஒக்குமால் - தேவ தேவனாகிய சிவபெருமானுடைய
அடியவர்களையும் போன்றுள்ளது.
(வி-ரை.)
ஆல் - தேற்றப் பொருளில் வந்த அசைமொழி.
காவிரி;
மலராலும் நீராலும், வழிபட்டுப், பொன் தூவிச் சிவாலயங்களைச் சூழ்ந்து
வணங்கிச் செல்லுதலால் அக்காரியமே செய்யும் அன்பர்களுக்கு ஒப்புமை
பெறுவதாம்.
அன்பரும் - உம்மை - சிறப்பு உம்மை. தனக்கு உவமையில்லாத
இறைவனுக்கு அன்பராவார்களும் அவ்வாறே தமக்கு உவமை யில்லாதவர்கள்.
“பெருமையாற்றம்மை(யே) ஒப்பார்“ என்று பின்னர்க் கூறுதல் காண்க.
அசேதன பௌதிகப் பொருளாயிருந்தும் செய்கையால் அவர்களையும் ஒக்கும்
என்ற சிறப்புக் காண்க. இதனை இறந்தது தழுவிய எச்சவும்மையாகக்
கொண்டு மேலே கூறிய ஒழுக்கம் போல்வதேயன்றி அன்பரையும் போல்வது
என்று உரைப்பதுமாம். அளுடைய நாயகியின் உண்ணெகிழ் கருணையின்
ஒழுக்கமே அன்பர்களை வழிப்படுத்திச் சிவபெருமானிடத்திற்
சேர்ப்பதாதலின், அதனைப் போன்ற காவிரியும் வழிபட்டுக் காட்டி
அவரையும் ஒக்கும் என்று, மேற்பாட்டினைச் சார இதனை வைத்தார்.
வம்பு உலாம் மலர்
- அன்றலர்ந்தமையால் மணம்
வீசிக்கொண்டிருக்கும்புது மலர்.
மலர் நீர்
- மலராலும் நீராலும் என உருவும் எண்ணும்மையும் விரிக்க,
“புண்ணியஞ் செய்வார்க்குப் பூவுண்டு நீருண்டு“ என்பது திருமந்திரம்.
மலர்களையிட்ட நீர் என்றுமாம். அருக்கியநீர், திருமஞ்சை நீர்களின்
இலக்கணம் இதுவேயாதல் காண்க.
|
|
|
|