| 76 | திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும் |
Periya Puranam
அசைவார்
- அணைவார் - இவ் வினைகள் தனித்தனி வெவ்வேறு
செயல்களைக் குறித்துக் கடைசியர்கள் என்ற எழுவாயைத் தழுவின;
அசைவார் - முற்றெச்சம்; அசைவாராகி அணைவார் என்க.
அசைதல்
- பயிருக்குச் சிதைவுண்டாகாதபடி மெல்லப் போதல்.
வரம்பணைவார் - மேலும் பயிருக்குச் சிதைவாகாவண்ணம்
வரம்பினை
அணைவார் - சேர்வார் - என்பது கருத்து.
குழலலைய
- என்பது பாடம். 13
| 64.
|
செங்குவளை
பறித்தணிவார் கருங்குழன்மேற்
சிறைவண்டை |
|
| |
அங்கைமலர்
களைக்கொடுகைத் தயல்வண்டு
வரவழைப்பார்
திங்கணுதல் வெயர்வரும்பச் சிறுமுறுவ
றளவரும்பப
பொங்குமலர்க் கமலத்தின் புதுமதுவாய்
மடுத்தயர்வார்.
|
14 |
(இ-ள்.)
செங்குவளை பறித்து அணிவார் - (கடைசியர்கள்)
செங்குவளை மலர்களையும் களையாகப் பறித்து அவற்றை அணிதலும்
செய்வார்கள்; கருங்குழன்மேல் - தங்கள் கரிய கூந்தலின் மேலே;
சிறைவண்டை..அழைப்பார் - சிறை வண்டுகளைத் தமது அங்கையாகிய
மலர்களினாலே போகும்படி ஒட்டுவதால் அவை போகாததுடன் அயலில்
இருக்கும் வண்டுகளையும்கூட வரும்படி செய்து கொள்வார்;
திங்கள்...அயர்வார் - நிலாப்போன்ற நெற்றியிலே வியர்வை யரும்பவும்,
முல்லை அரும்புகள் போன்ற பற்கள் சிறு நகை யரும்பவும், (களைகளைந்த)
புதிது பூத்த தாமரை மலரினின்று பொங்கிய தேனை வாய் வைத்து உண்பார்.
(வி-ரை.)
செங்குவளை - பறித்து அணிவார் - குவளை -
ஒருவகை நீர்ப்பூ. அது செங்குவளை கருங்குவளை என இருவகைத்து. இவை
நீர்நிலைகளிலேயன்றி நீர் செழித்துப்பாயும் காலத்தில் வயல்களிலும் பூக்கும்.
இங்குக் குறித்தது செங்குவளை. இதனைச் செங்கழுநீர் என்பார். நெற்
பயிருக்குப் பிறவற்றைப் போலவே இவையும் களைகளாதலின் இவற்றையும்
களைந்தனர் என்பார் பறித்து என்றார். ஆனால் இவை உருவினாலும்
மணத்தினாலும் நிறத்தினாலும் சிறந்தன ஆதலின் மற்றக்களைகளைப்போல
வறிதே போகட்டுவிடாமல், இவற்றை அணிந்துகொண்டு பயன்படுத்தினார்கள்
என்பது தோன்ற அணிவார் என்றார். குவளையும் பறித்தார் - என்றும்,
பறித்தும் அணிந்தார் - என்றும், ஈரிடத்தும் தொக்க உம்மை விரித்துரைத்துக்
கொள்க.
பொங்குமலர்க் கமலத்தின்
புதுமது - கமலப் புது மலரின் பொங்கு
மது என மாற்றி உரைக்க. செங்குவளை போலவே களையாகக் களைந்த
என்றுகூட்டிக் கொள்க. களையாகக் களைந்த என்பது குவளைக்கும்
கமலத்துக்கும் வருவித்து உரைக்கப்பட்டது, அல்லாத வழிக் களைகளையச்
சென்ற கடைசியர்கள் அக்காரியம் செய்யாது மனம் போனபடி வேறுசெய்து
விளையாட்டயர்கின்றார்கள் எனவரும் ஆதலின். செங்குவளையோடு
கருங்குவளையும், கமலப் புதுப் பூவுடன் பழம் பூவும் களையாகக்
களையப்படுமாயினும் அவற்றுள் இவை பயன்படுத்தப் பெற்றன என்று
கூறியதனால் ஏனைய தள்ளப்பட்டனவாம்.
மது வாய்மடுத் தயர்வார்
- செங்குவளை வறிது போகாதபடி
பயன்படுத்த அணிந்தது போலவே, வயலிலும் அயலிலும பூத்த
கமலங்களைப்பறித்து அவையும் வறிதே போகாது அவற்றின் அகத்தேனைத்
தம் இளைப்புத் தணிய உண்டு களிப்பர் என்று அணியும் சுவையும் குறிப்பும்
சொற்சுருக்கமும் பெறக்கூறியவாறு. அயர்தல்
- உண்டாட்டயர்தல்; உண்டு
திளைத்தல், வாய்மடுத்து - வாயிலே வைத்து.
இது அயரும் வகையைக்
கூறியவாறு. இது குறிப்பதற்கே மது அயர்வார் என்னாது மது வாய் மடுத்து
அயர்வார் என்றார்; அஃதாவது மதுவை வேறு கொள்கலத்திற் பெய்து
உண்ணாது நேரே வாய் வைத்து உண்பார் என்பது. இந்நாளில் மதுவும்
அதுபோல்வனவும் அருந்துவோர் கலத்தை வாயினுட் பெய்து அருந்துதல்
இதின் மரபிலே வழிவழி வந்த வழக்கம் போலும்.
|
|
|
|