பக்கம் எண் :


திருவாரூர்த் திருநகரச் சிறப்பு77

Periya Puranam
     அயர்வார் என்பதற்கு மயங்குவார் - சோர்வார் என்று கூறுவாருமுளர்.
பறித்த களைக் கமலத்தின் புதிய தேன் வீணாகாது தம் இளைப்பையாற்றிக்
கொள்ள விளையாட்டாய்த் தேனை வாய்வைத்து உறிஞ்சி
ஆட்டயர்தலேயன்றி மதுவுண்டு மயங்குதல் இங்குப் பொருளன்று என்று
விடுக்க. அணிவார் - அழைப்பார் - அயர்வார் - என்ற வினைமுற்றுக்கள்
தனித்தனி வெவ்வேறு செயல்களைக் குறித்தன. இவை முன்பாட்டிற் கண்ட
கடைசியர்கள் என்ற எழுவாயைத் தனித்தனி தழுவி நின்றன.

     அங்கை....கொடு உகைத்து - வர அழைப்பார் - கையாகிய
மலரைக் கொண்டு, செங்குவளையை அணிய அதிலுள்ள வண்டுகள் குழலிற்
படர்ந்தன; அவற்றைக் கையினால் துரத்தவே கைகளும் மலர்
போன்றிருத்தலின்முன் வண்டுகள் போகாததோடு வேறு
பக்கத்திருந்தவைகளும் வந்தன. அங்கை - அழகியகை; அல்லது அகங்கை.

     அங்கை மலர் களைக்கொடு - இனி, இரட்டுற மொழிந்துகொண்டு,
கையிலும் மலர்கொண்டார்; அது கொண்டு வண்டு ஓச்ச அதன்மேலும்
வண்டுவந்தன; அதனால் அது தேனுடைத்தாதல் அறிந்து அதனை
வாய்மடுத்தனர்; அதனால் முறுவல் பூத்தனர் - என்றுரைத்தலும் ஒன்று.
அணிவாராய் அழைப்பார் என்றும், அழைப்பாராகி அணிவார் என்றும்
கொள்ளத்தக்கது.

     வெயர்வு அரும்ப - களை களைந்து வேலை செய்த சிரமத்தால்
என்க. இக்குறிப்பினாலே முன்னர் இளைப்புத்தீர தேனைத்
வாய்மடுத்தயர்ந்தார் என்றுரைக்கப் பெற்றதாம்.

     சிறு முறுவல் தளவு அரும்ப - தளவு சிறு முறுவல் அரும்ப என்க.
தளவு - முல்லையரும்பு. இங்கு அதுபோன்ற பல் - என்ற பொருள் குறித்தது
ஆகுபெயர். “நெற்றி வேர்வை நிலத்தில் விழப் பாடுபடுதல்” என்பது
பழமொழி வழக்கு. இவ்வாறு வேலை செய்தும் மனமகிழ்ச்சி யுடையார்
என்பார் முறுவல் அரும்ப என்றார். மேலே தாம் வண்டு போக்கச்செய்த
செயல் அழைக்க ஆயினது நோக்கத் தமக்கே நகை தோன்றிற்று என்பதும்
குறிப்பு. கமலத்தின் புது மது உண்ணும் உருசியினாலும் நகைதோன்றும் என்க.
சிறுமுறுவல் - பற்கள் சிறிது தோன்றச் செய்யும் புன்னகை.

     கருங்குழன் மேல்
- இதனை மேல் அணிவார் என்றும், மேல்
உகைத்து அழைப்பார் என்றும், கூட்டி யுரைத்துக்கொள்க.

     வாய்மடுத் தயில்வார் - என்பதும் பாடம். 14

65. கரும்பல்ல நெல்லென்னக் கமுகல்ல கரும்பென்னச்  
  சுரும்பல்லி குடைநீலத் துகளல்ல பகலெல்லாம்
அரும்பல்ல முலையென்ன அமுதல்ல மொழியென்ன
வரும்பல்லா யிரங்கடைசி மடந்தையர்கள் வயலெல்லாம்.
15

     (இ-ள்.) அரும்பு அல்ல...வயலெல்லாம் - இவை அரும்பு அல்ல =
அரும்புபோன்ற முலையே; இவை அமுதல்ல = அமுதுபோன்ற மொழியே
என்று சொல்லத்தக்க இலக்கணம் வாய்ந்த பல்லாயிரம் கடைசியர்
மடந்தையர்கள் களைபிடுங்கிய வயல்களிலெல்லாம்; கரும்பு அல்ல...கரும்பு
என்ன - (காண்பவர்கள்) இவை கரும்பு அல்ல நெல்லே என்னவும்; இவை
கமுகு அல்ல கரும்பே என்னவும் சொல்லும்படி; சுரும்பும்...பகல் எல்லாம் -
பகற்போதெல்லாம் நீல மலரின் துகளாலாகிய அல்லை (இரவை) உடையன.

     (வி-ரை.) வளர்ந்துவரும் நெற்பயிரின் வளம் - நெடுமை -
முதலியவற்றை ஒருவன் தூரத்தே கண்டு இவை கரும்போ என்று
எண்ணிக்கொண்டு வந்து வயலை அணுகினான்; அணுகியபின் இவை
கரும்பென முன் எண்ணியது தவறு; இவை நெல்லே எனத் துணிந்தனன்.
இவ்வாறே கமுகினைப் பற்றியும்கொள்க. சில தன்மைகள் உள்ளமையாலே
தூரத்தே ஒன்றை இன்னது எனத் துணிவா