பக்கம் எண் :


திருவாரூர்த் திருநகரச் சிறப்பு89

Periya Puranam
     காலிரும் பகடு போக்கும - கால் இரும் + பகடு + போக்கும் -
சாலியைத் தோற்றுவிக்கும் (உண்டாக்கும் துணைக் காரணங்களில்
முதன்மையான) கருவியாகிய பெரிய ஏர்களைச் செலுத்தும் என்க. இது
பாண்டிலின் அடை. காலுதல் தோற்றுவித்தல். பிறவினை விகுதி தொக்கது.
“பகல்கான் றெழுதரு பல்கதிர்ப் பரிதி” என்ற பெரும்பாணாற்றுப் படையும்
காண்க. பகடு - ஏர். “பகடு புரந்தருநர்” - புறநானூறு 35.

     கரும்பெரும் பாண்டில் ஈட்டம் - பாண்டில் - எருமை. உழவிலும்
பிறவற்றிலும் வேலை செய்வதற்கு எருமைகளையே நியோகித்தல் சேக்கிழார்
சுவாமிகள் மரபு. எருதுகளைச் சிவபெருமானுக்கேயன்றி மனிதருக்காகச்
செய்யும் வேலைகளில் ஆசிரியர் பயன் படுத்துவதில்லை,

“....சடையார் தேவர்கடம் பிராட்டி யுடனே சேரமிசைக்
கொள்ளுஞ் சினமால் விடைத்தேவர் குலமன் றோவிச் சுரபிகுலம்”

என்று இக்கருத்தைச் சண்டேசுர நாயனார் புராணத்துட் (22) கூறியமை
காண்க. ஆதலின் இங்குப் பாண்டில் என்பதனை எருது எனவும்,
காலிரும்பகடு போக்கும் - என்பதில் பகடு என்றதற்கு எருமை எனவும்
கொண்டு “வலிந்த கால்களையுடைய பெரிய எருமைக் கடாக்களோடு சேர்த்து
நடாத்துகின்ற கரிய எருதுகளின் பெரிய கூட்டம்” என்றும், பாண்டில்
என்பதை வட்டம் என்று பொருள்கொண்டு வலிய கால்களையுடைய பெரிய
எருமைகள் விரைந்துபோகும் சுழலால் உண்டாகும் கரிய வட்டத்தின் கூட்டம்
என்றும், உரைத்த உரைகள் பொருந்தாமை உணர்க. எருதுகளில்
கரியவற்றையே பொறுக்கிச் சேர்த்தலுக்கும், எருமைகளுடன் எருதுகளைச்
சேர்த்தலுக்கும் இயைபின்மையும் காண்க.

     அன்றியும் பயிர்களைத் தோற்றுவிக்கத் துணை செய்த அவைகளே
அவற்றின் போகம் முடிவிலும் பிரிக்கத் துணை செய்வன என்ற நயமும்
தோன்றுதல் காண்க.

     ஆலிய (முகில்) - மழைத் துளிகள் பொருந்திய - நீர் நிறைந்த -
ஆலியை உடைய என்பது பொருள். ஆதலின் கரிய முகில் என்று
உரைக்கப்பெற்றது. “வெண் முகிலாய்ப் பரந்தெங்கும் பெய்யுமா மழை”
என்றபடி வெண்முகிலும் உளதாயினும் உவமப் பொருளாகிய கரும்பெரும்
பாண்டிலுக் கேற்பக் கருமுகில் என்க. ஆலிய அசைவுடைய என்றுமாம்.
ஈட்டம் (சூழும் காட்சி) - மிக்கது என வினைமுடிக்க.

     காட்சியின் மிக்கது - காட்சி போல விளங்கிற்று. இங்குக் காட்சி
என்றதற்கேற்க (ஈட்டம்) சூழும் காட்சி என முன்னரும் வருவித்துரைக்கப்
பெற்றது. இடப்படுவது ஈட்டம். இதற்காகக் கொண்டுவந்து ஓரிடத்தில்
இடப்படுவதனால் பாண்டிலுக்கு ஈட்டம் என்றும், காலமும் இடமும் சேரத்
தாமே கூடுவதனால் முகிலின் கூட்டம் எனவும் குறித்தார்.

     சிகரச் சாரல் - என்பது பாடம்.  24

75. வைதெரிந் தகற்றி யாற்றி மழைப்பெயன் மானத்
                                தூற்றி
 
  செய்யபொற் குன்றும் வேறு நவமணிச் சிலம்பு
                                மென்னக்
கைவினை மள்ளர் வானங் கரக்கவாக் கியநெற்
                                குன்றான்
மொய்வரை யுலகம் போலு முளரிநீர் மருத
                                வைப்பு.
25

     (இ-ள்.) வை.....தூற்றி - வைக்கோலைப் பிரித்து எடுத்து வேறிடத்திற்
போக்கி, நெல்லை முறங்கொண்டு வீசி மழை தூற்றுவது போலத்தூற்றி;
செய்ய...நெற்குன்றால் - சிவந்த பொன்மலையும் வெவ்வேறாகிய நவமணிக்
குன்றுகளும் என்று சொல்லும்படி கைத்தொழில் வல்ல மள்ளர்கள்
ஆகாயத்தை மறைக்கும் படி உயர்த்திச் சேர்த்த நெற்குன்றுகளால்;
மெய்...வைப்பு - நிறைந்த மலைகளையுடைய குறிஞ்சி நிலத்தைப்போல
இருந்தது தாமரை பூத்த நீர் பொருந்திய மருதநிலம்.