பக்கம் எண் :


88 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

Periya Puranam
நெல்லுக்குத் தாழ்ந்திருக்கும்; ஆதலின் அதினின்றும் வேறு பிரிப்பர். இவ்விரு
வகைகளை மேலே 25-ம் பாட்டிற் காண்க. அடுக்குதலால் சூடுபெறச்
செய்யநிற்றலின் இதற்கு இப்பெயர் வந்ததுபோலும்.

     பரிவுற - வாழு மிடத்திலிருந்து உயிர்கள் வருந்த எடுக்கப்படுதலால்
அத்துன்பமும் இரக்கமும் தோன்றப் பரிவுறப்படுத்த - என்றார். மீன் படுத்தல்
- படச் செய்தல் கொல்லாமலே, பிடித்து எடுத்தலாலேயே, உயிர் போக்கிக்
கிடைக்கும்படி செய்தல்; என்க. இது மீன் பிடிக்கும் தொழிலின் மரபுப் பெயர்.
அதிபத்த நாயனார் புராணத்துட் காண்க.

     படர் நெடுங் குன்று - மீன் படுத்துக் குவித்த பின்னும் சில நேரம்
அவை உயிருடன் தவழ்ந்தும் குதித்தும் நிற்றலால் படர் என்றார். படர்தல்
- செல்லுதல்; போதல்.

     விரைவிற் கெடுந்தன்மை யுடையதாதலின், குன்றுபோற் குவிப்பினும்
விரைவிலே செலவாக்கப்படும் எனக்குறிக்கச், சென்று கழியும் (படர்) நீண்ட
(நெடும்) குன்று - என்று உரைப்பதுமாம். குன்று - மலையிற் சிறியது -
அளவாற் சிறுமையும் குணத்தால் இழிவும், தோன்றக் குன்று என்றார்.
குன்றுதல் - குறைதல்.

     சுரிவளை சொரிந்த முத்து - முன் 63-ல் “தண்டரளம் சொரி
பணிலம்” என்ற கருத்தைத் தொடர்ந்து அனுவதித்து, அந்த முத்துக்களை
அரித்துச் சேர்க்கும் கால மிதுவேயாதலால் சொரிந்த என்று இறந்த காலத்தாற்
குறித்தார்.

     சுடர்ப் பெரும் பொருப்பு - முத்திலே பல நிறங்களும் விரவி
ஒளிர்வதனால் சுடர்கள் விட்டு விளங்கி அதனாற் பெரிய மலையாயிற்று
என்க. சோதிமலை என்றவாறு. முத்து உருவத்தாற் சிறியன ஆயினும்
சுடராற்பெரியவாயின.

     மலர்க் கற்றை வெற்பு - நெல்லோடு பயிராய் விளைந்த கமலம்
முதலிய நீர்ப் பூக்களைப் பிரித்து ஒரு புறம் இட்டு வைக்கும் சேர்க்கை,
இங்கு வெற்பு எனப்பெற்றது. கற்றையாகிய வெற்பு; வேரி பொழிந்திழி வெற்பு;
என்று தனித்தனி கூட்டுக.

     இழிவெற்பு - முன்னே குறித்த நெல் முதலிய மூன்று பொருள்களும்
அவ்வவற்றின் தகுதிக் கேற்ப விரும்பும் விலை பெறுவன; அவ்வாறு
விரும்பப்பெறாத இதனை அவற்றினின்றும் பிரிக்குமாறு, கடைசியிற்
கூறுவதுடன், இழிவெற்பு என்று நயம்பெறவும் கூறுதல் காண்க.      23

74. சாலியின் கற்றை துற்ற தடவரை முகடு சாய்த்துக்  
  காலிரும் பகடு போக்குங் கடம்பெரும் பாண்டி
                                  லீட்டம்
ஆலிய முகிலின் கூட்ட மருவரைச் சிமயச் சாரன்
மேல்வலங் கொண்டு சூழுங் காட்சியின் மிக்க
                                  தன்றே.
24

     (இ-ள்.) சாலியின்....சாய்த்து - நெற்கற்றைகள் சூடு குவிந்த பெருமலை
போன்ற போரினை மேலிருந்து அளவாய்ச் சாயச் செய்த; காலிரும்.....ஈட்டம்
- தோற்றுவிக்கும் பெரிய ஏர்களைச் செலுத்தும் கரிய பெரிய எருமைக்
கூட்டங்கள் (மிதித்துச் சூழும் காட்சியானது); ஆலிய.....காட்சியின் - நீர்த்துளி
நிறைந்த கருமேகங்கள் பெரிய பொன்மலையின் சாரலின்மேல் வலம்வந்து
சுற்றும் காட்சிபோல; மிக்கது அன்றே - விளக்கம் மிக்கு இருந்தது; சூடு
மிதிக்கும் அந்நாளிலே.

     (வி-ரை.) நெற்கதிர்ச்சூட்டுப் போர் பொன்மலைக்கும், அதனைச்
சாய்த்து மிதித்துச் சுற்றி வரும் கரிய எருமைக் கூட்டம் பொன்மலைச்
சாரலின்மேற் சூழும் கரிய முகிற் கூட்டத்திற்கும் உவமம்.

     கற்றை - பல கதிர்கள் சேர்த்துக் கட்டிய கட்டு. துற்ற தடவரை -
துறுத்தல் - சேர்த்தல்; துறுத்தலினால் ஆகிய பெரிய மலைபோன்ற தொகுதி.
விரிந்த பலவற்றைச் சுருங்க ஓரிடத்திற் சேர்ப்பது துறுத்தல் என்ப. “எல்லாந்
துறுத்தும் பேழைப் பெருவயிறு” - பதினோராந்திருமுறை, மூத்த நாயனார்
திருவிரட்டை மணிமாலை. (4)