பக்கம் எண் :


திருவாரூர்த் திருநகரச் சிறப்பு91

Periya Puranam
     (இ-ள்.) அரசுகொள்...ஆற்றி - (முன் கூறியவாறு ஆக்கியநெற்
குவைகளில்) அரசர்க்குச் செலுத்தவேண்டிய ஆறில் ஒருபங்கு கடமையைச்
செலுத்திய பின்; மிகுதி...தாங்கி - (எஞ்சிய விளைவைக் கொண்டு) ஆங்கு
முதலிற் செய்யக் கடவனவாகிய தருமங்களை விரும்பிச் செய்து. பரவுதற்குரிய
அரிய கடவுட் பூசையைப் பாராட்டிச் செய்து, தென் புலத்தார்களையும்
விருந்தினரையும் ஒழுக்கமுடைய சுற்றத்தாரையும் ஓம்பி, அதனால்; விளங்கிய
குடிகள் ஓங்கி - விளக்கம் பெறும் குடிகளால் செழித்து; வரை...எங்கும் -
மலைபோன்ற மாடங்கள் அந்நாட்டுப் பதிகள் எங்கணும் நீடியுள்ளன.

     (வி-ரை.) விளங்கிய குடிகள் ஓங்கி - குடிகள் விளங்குதற்கும்,
மேலும் பெருகி ஓங்குதற்கும், காரணம், ஆற்றுதல் - பேணுதல் - போற்றுதல்
- தாங்குதலாகிய நற்செய்கைகளேயாகும் என்பது குறிப்பு. முன்னர்
விளங்கியதற்கும், பின்னரும் ஓங்கி வளர்தற்கும் இவையே காரணம் என்பார்
குடிகள் என்பதனை இடையில் வைத்தார்.

     அரசுகொள் கடன்கள் ஆற்றுதல் அரசுக்குச் சேரவேண்டிய
பகுதியாகிய ஆறில் ஒரு பங்கு இறைப்பொருளின் கடமையைச் செலுத்துதலாம்.
இறைப் பொருளை முறையாகச் செலுத்துதல் குடிமக்களின் கடமையாதலின்
கடன் என்றும், அவை காலத்தாலும் இடத்தாலும் மற்றும் பலவற்றாலும் (வேறு
வரி வகைகளும் கூட்டி) மேலும் பலவாய்ப் பின்னரும் அதிகரிப்பனவாதலின்
கடன்கள் என்றும் கூறினார். இது குடிகளின் கடமைகளில் முதற் கடமையாம்
என்பார் தெய்வத்தின் முன்னரும் வைத்து முதலிற் கூறினார். வரிகொடா
இயக்கம் முதலிய இக்காலத் தோற்றங்கள் அந்நாள் தமிழ்மக்களுக்கு
உடன்பாடன்றாம் என்பது இதனால் விளங்கும்.

“தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்
கைம்புலத்தா றோம்பல் தலை”

என்ற நாயானார் நியதிப்படி ஒழுகுவோர் இந்நாட்டுமக்கள் என்பதை
இப்பாட்டினாற் குறித்தனர்.

     “இவ்வைந்திற்கும் ஐந்து கூறு வேண்டுதலின் அரசற் கிறைப்பொருள்
ஆறில் ஒன்றாயிற்று” என்ற உரையாசிரியர் கூற்றும் காண்க. குடிமக்கள்
இக்கடன்களைக் கொடாக்கால் அரசு தாமே கொள்வதற் குரியதாம் - என்ற
குறிப்புத் தோன்ற கொள்கடன்கள் என்றார். இறைப்பகுதி அரச
அங்கத்தையும் உள்ளிட்டதாதலின் அரசர் என்னாது அரசு என்றதாம்.

     அரச இறையை வெள்ளி முதலிய நாணயத்தால் நிச்சயித்து
விளைவுகளை வெள்ளி முதலிய நாணயங்களாக மாற்றி அரச இறை
செலுத்துதல் இந்நாள் ஆங்கில ஆட்சியின் பிற்கால முறை. முன் நாளிலே
விளைவுகளில் ஆறில் ஒருபங்கே அரசுகொண்டது. ஆதலின் நெல்விளைவு
கூறிய உடன் அரசிறை செலுத்தல் கூறினார். இதுவே முறையாம் என்பது
அந்நாள் அரசாங்க அமைச்சராகிய ஆசிரியர் கருத்துமாம். பண்டமாற்றிற்கு
உதவுதற்காகச் சங்கேதமாய் மனிதர் தரும் சத்தியைப் பெற்றதாய்க்,
கொள்வோரும் தருவோரும் என்ற இருவர்களின் இடையும், பண்டங்களி
னிடையிலும் இடைப் புகுதலேயன்றி வேறு தனக்கென்று பொருளும்
நாணயமும் மதிப்பும் அற்றதாய் உள்ள, பொன், வெள்ளி, ஈயம், காகிதம்
முதலிய நாணயமென்ற பேர்கொண்ட பொருள்களை இங்கு ஆசிரியர்
அரசுக்கும் குடிகளுக்கும் இடையிட்டுக் கூறினாரில்லை. அக்காலத்துப்
பண்டமாற்று முறையும் இவ்வாறேயாம்.. இதனைத் திருக்குறிப்புத் தொண்ட
நாயனார் புராணம் முதலியவற்றுட் காண்க. விளைபொருளின் ஒரு
பகுதியளவே கொள்ளப்பெறாமல் நாணய மாற்றுக்கொண்டு அரசிறை
நியமனம் பெற்ற அன்றைக்கே உழவர்களின் சங்கடங்கள் தொடங்கின என்று
பொருள் நூலார் காணும் துணிபும் இங்கே வைத்து உணர்தற்பாலதாம்.