பக்கம் எண் :


94 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

Periya Puranam
     நரந்தம் - நாரத்தை. இதன் பூக்களின் மணம் மிகுதி பற்றி நறுமலர்
என்றார்.

     கோளி - அரசு; சாலம் - கடம்பு. மரா என்றும் ஆச்சா என்றும்
கூறினும் ஆம்; தமாலம் - பச்சிலை மரம். “சம்பக மாதவி தமாலங் கருமுகை”
என்ற சிலப்பதிகாரம் காண்க.

     குளிர் மலர்க் குரவம் - குளிர்ச்சி தரும் மலர்களையுடைய குராமரம்.
இது சிவபெருமானுக் குகந்தமலர் என்பது “குராமலரோ டராமதியம் சடைமேற்
கொண்டார்” என்ற திருத்தாண்டகத்தால் விளங்கும்.

     தாள் இரும் போந்து - வலிய பெரிய அடிப்பாகத்தையுடைய பனை.
தாள்இரும் - இருந்தாள் என மாற்றுக. பனையின் அடிப்பாகம் பெருத்தும்
வலிமை பெற்றும் உள்ள தென்பது. தாள் - அடிப்பக்கம் - “பனந்தாள்”,
பனையின் அடியில் இறைவன் வீற்றிருத்தலால் வந்த தலப்பெயரும் காண்க.

     சந்து - சந்தனமரம்; நாகம் - குங்குமமரம்; நீள் இலை வஞ்சி -
நீண்ட இலைகளையுடைய வஞ்சிமரம்; காஞ்சி - காஞ்சிமரம்; நிறைமலர்க்
கோங்கம
- பூக்கும் காலத்தில் நிறையப் பூக்களையே கொடுக்கும்
இயல்புடைய கோங்கமரங்கள். “கோங்கமே குரவமே” என்ற தேவாரமும்
காண்க. நறுமலர் - குளிர்மலர் - தண்மலர் - நிறைமலர் - என்று
அவ்வம் மரங்கள் மலராகிய பயன் தருவன என்பதும், மலர்களின் இயல்பு
இத்தன்மையன என்பதும், சுருங்கச் சொல்லி விளங்க வைத்திருத்தல் காண்க.

     தாளிரும்போந்து...நீளிலை வஞ்சி - இந்த அடைமொழிகள்
இப்பொருள்களின் சிறப்பியல்பை உணர்த்தியவாறு. இதிலும், அடுத்த
பாட்டிலும் சோலைகளையே கூறினாரேனும் இப்பாட்டிற் கூறியவை
பெரும்பான்மை மனிதரின் முயற்சியின்றித் தாமே நீர்ப் பெருக்கு மிக்குள்ள
இடங்களில் முளைத்து வளர்ந்து செறிந்து காணப்படுவனவும் ஏகதேசத்தில்
பயன் தருவனவுமாம். வரும் பாட்டிற் காண்பன இத்தனை செறிவில்லாதனவும்,
மனிதர் முயன்று பயிர்செய்து ஆக்குவனவும், ஒவ்வோரிடங்களில் பிரிந்து
பிரிந்து காணப் பெறுவனவும், இவற்றினும் மேலாய் அதிக பலன் தருவனவும்
ஆம். ஆதலின் அவற்றை வேறுபிரித்து அடுத்த பாட்டிற் கூறியதுமன்றி,
இப்பாட்டிற் பல மரத்தொகுதி சேர்த்துக் கூறியதுபோலக் கூறாது ஒர்
அடியிலே மரங்களையும் செடிகளையும் இவ்விரண்டு முறை “எங்கும்” என்ற
சொல்லாற் பிரித்தும் காட்டினார்.                               28

79. சூதபா டலங்க ளெங்குஞ் சூழ்வழை ஞாழ
                               லெங்கும்
 
  சாதிமா லதிக ளெங்குந் தண்டளிர் நறவ மெங்கும்
மாதவி சரள மெங்கும் வகுளசண் பகங்க
                               ளெங்கும்
போதவிழ் கைதை யெங்கும் பூகபுன் னாக
                               மெங்கும்.
29

     (இ-ள்.) வெளிப்படை.

     (வி-ரை.) சூத பாடலங்கள் - சூதங்களும் பாடலங்களும்; உம்மைத்
தொகை. சூதம் - மா; பாடலம் - பாதிரிமரம். சூழ்வழை - கொத்திலே
மலர்கள் மொய்த்து நிறையப் பூக்கும் சுரபுன்னை. சூழ் - கொத்தில் மலர்கள்
நிறைந்து சூழும் இயல்புடைய என்க. ஞாழல் - குங்குமப்பூ மரங்கள்;
புலிநகக்கொன்றை என்றலுமாம். சாதி - சாதிப்பூ; நொடிப்பூ வகை. இதனைப்
பிச்சி என்றும் கூறுவர். மாலதி - முல்லை; மல்லிகையுமாம்.

     தண்தளிர் நறவம்
- அனிச்சம். (இது கோட்டுப்பூ வகை); மிக
மெல்லிய இதழ்களையுடைமையால் தண் தளிர் என்றார். “மோப்பக் குழையும்
அனிச்சம்” என்பது குறள்.

     மாதவி - குருக்கத்தி. சரளம் - ஒருவகைத் தேவதாரு; நீண்ட
இலையுடையது. “நாக சூத வகுளம் சரளம்” என்று பின்னர் வருதலும் காண்க.
(தடுத் - புரா - 93).