பக்கம் எண் :


திருவாரூர்த் திருநகரச் சிறப்பு97

Periya Puranam
     போகமும் பொலிவும் - போகமும் அவற்றாற் புறத்தே தோன்றும்
விளக்கமும். போகம் - இந்திரியங்களால் அனுபவிக்கப்பெறும் அனுபவங்கள்.
ஆதலின் இவை பின்னர் வைக்கப் பெற்றன. போகமும் பொலிவும் -
யாகங்களாலும் யோகங்களாலும் முறையே பயனாய்ப்பெற்ற போகங்களும்
அவற்றின் பொலிவும். பொலிவு - விளக்கம்.

     யோகமும் தவமும் - மேற்கூறிய யாகங்களேயன்றி, யோக
முயற்சிகளும் பிற தவங்களும். இவையும் யாகங்களைப் போலவே
இல்வாழ்வாராற் செய்யப் பெறுவன. யோகத்தினியல்பும் பயனும் ஒளவைப்
பிராட்டியார் அருளிய விநாயகரகவலிலும், திருவாதவூரர் புராணம் உபதேசப்
பகுதியிலும், பிற நூல்களிலும் காண்க. தவம் - மனம் புலன்வழி
போகாதிருத்தற் பொருட்டு, உண்டி சுருக்கல் முதலியவற்றால் தம்முயிர்க்கு
வரும் துன்பங்களைப் பொறுத்தலும், பிறவுயிர்களுக்குத் துன்பஞ்
செய்யாமையுமாம். யோகமாவது கரணங்களை அடக்கி மனத்தை ஒரு
குறியினிறுத்துதல்; “உற்றநோய் நோன்ற லுயிர்க்குறுகண் செய்யாமை, யற்றே
தவத்திற்குரு” (குறள்)

     ஊசலும் மறுகும் - (ஆடவர்கள் தவமும்யோகமும் பயில, அவரது)
பெண்கள் பயிலும் ஊசல்களும் அவை பயிலிடமாகிய மறுகும் என்க.

     புண்ணிய முனிவர் - மேற் சொல்லிய வேதம் - யாகம் - யோகம் -
தவம் - முதலியவற்றால் போகம் பெற்றுச் சிவ புண்ணியம் செய்யும் முனிவர்.
இல்வாழ்வாராயினும் போகங்களிலேயே மூழ்கிவிடாது தனி நிற்பார் என்பார்
முனிவர் என்றார். “இயற்பகை முனிவா வோலம்” முதலிய திருவாக்குக்கள்
காண்க.

     மேற்பாட்டிலே வினைகள் - கம்பலைகள் - வதனங்கள் - முதலிய
ஒவ்வோர் பொருள்களாகக் குறித்தார். இப்பாட்டிலே இடத்தாற் பொருத்தமுற்ற
- மேகமுங்களிறும் - என்றும், பொருளாற் பொருத்தம் பெற்றுத் தொடர்பு
கொண்டு ஒரே பொருளின் தன்மையுடைய - வேதமும் கிடையும் - யாகமும்
சடங்கும் - என்றும், இவ்விரண்டாய்ச் சேர்த்துக் குறித்தார். அவற்றின்
தொடர்புகள் கண்டு கொள்க.

     வேதமும் கிடையும் - வேதமும் அவற்றை ஓதுகின்ற கிடையும் -
எனப் பிரித்துக் கூறியதாம்.

     புண்ணியங்கள் “செய்வோரின்றிச் செய்வினை யின்மையின்”
என்பவாகலின், அவற்றைச் செய்வோரிடத்தன்றித் தனித்து நில்லாமையால்
மேலே சேர்த்துக் கூறியவற்றைப்போலப் புண்ணியமும் முனிவரும் என்னாது
புண்ணிய முனிவர் எனப் புண்ணியத்தை முனிவருக்கு அடைமொழியாக்கிக்
கூறினார்.

     இதுவரை கூறியவை பொருளைப்பற்றி அணி செய்தனவாம்.    31

82. பண்டரு விபஞ்சி யெங்கும் பாதசெம் பஞ்சி
                                யெங்கும்
 
  வண்டறை குழல்க ளெங்கும் வளரிசைக் குழல்க
                                ளெங்கும்
தொண்டர்த மிருக்கை யெங்கும் சொல்லுவ
                        திருக்கை யெங்கும்
தண்டலை பலவு மெங்குந் தாதகி பலவு மெங்கும்.
32

     இதுமுதல் மூன்று பாட்டுக்களிற் நாடடிற்குச் சொல்லும் அணியைச்
சொல் அணியினும் வைத்துக்காட்டுகின்றார் ஆசிரியர்.

     (இ-ள்.) (அந்நாட்டில் எங்கும்) பண்தரு விபஞ்சி - பாத செம்பஞ்சி
- திணைக்கு ஏற்ற பண்களைத் தருகின்ற வீணைகளும், பெண்களின்
பாதங்களில் ஊட்டிய செம்பஞ்சிக் குழம்பும் உள்ளன; வண்டு அறை
குழல்கள் - வளர் இசைக் குழல்கள் - வண்டுகள் சத்திக்கும் கூந்தல்களும்,
வளர்கின்ற இசை முழக்கும் வேய்ங்குழல்களும் எங்கும் உள்ளன;
தொண்டர்தம் இருக்கை - எங்கும் தொண்டர்களுடைய இருப்பிடங்கள்
உள்ளன; எங்கும் சொல்வது வடமொழி தென்