பக்கம் எண் :


கண்ணப்பநாயனார்புராணம்1025

 

சுப்பராயச் செட்டியார். "கருவரை காளமேக மேந்திய தென்ன" (664) என்ற
தொடக்கத்திற் கூறினர்.

     நின்ற கண்படாவில்லியார் - "அல்லுறங்கார்" (800) என்றபடி முன்
ஐந்து நாட்களிலும் இரவிற் றுயில்கொள்ளாமல் வில் ஏந்திக் காவல் புரிந்தது
குறிக்க இவ்வாறு கூறினார். "திருக்கையிற் சிலையுந் தாங்கி, மைவரை யென்ன
வையர் மருங்குநின் றகலா நின்றார்" (776), "நேர் பெறநோக்கி நின்றார்"
(777) என முன்னரும் கூறினார்.

     வரும் முறை ஆறாம் நாளில் - திண்ணனார் திருக்காளத்தியப்பரைக்
கண்டு அவரருணோக்கால் சிவத்தன்மை பெற்றுப் பூசித்து வரும்
அம்முறையில் ஆறாவது நாளின்கண். ஆறாநாளாகிய இந்நாளே திண்ணனார்
சிவப்பேறடைந்த திருநாள் என்பது குறிப்பார் ஐந்தா நாளிர வென்னாது
இவ்வாறு கூறினார். வருமுறை - என்பதற்கு முறையாய் - கிரமப்படி - வரும்
எனவும், நாடோறும் நடந்து வரும் முறைப்படி எனவும், திருவருள்
வெளிப்பாடு வரும் எனவும் பலவாறு உரை கூறுவாருமுண்டு.

     நாளில் - நாளிற் காலை என்று கூட்டுக. வரும் - மாறிமாறி வரும்.
"இரவு போம் பகல் வருமாகில்" - திருவிசைப்பா. ஆறாம்நாளில் - ஆறு
நாளிற் கண்ணப்பர் பேறடைந்தனர் என்பது "நாளாறிற் கண்ணிடந் தப்பவல்
லேனல்லன்" என்ற பட்டினத்தடிகள் திருவாக்கானு முணரப்படும்.

     இரவு ஒழிந்த காலை - இராப்போது கழிய மேல்வரும் வைகறை -
விடியற்காலம் குறித்தது.

     அருமறை என்றும், அருமுனிவர் என்றும் கூட்டியுரைக்க நின்றது.
முன்னை நாட்களில் உண்மை விளங்காது மறைக்கப்பட்டு அன்று மறை நீங்கி
விளக்கம் பெற நின்றவர் என்ற குறிப்பால் இங்கு மறைமுனிவர் என்றார்.
திண்ணனாரது அன்புநிலை யின்னதென்று கூறாது "நாளைக்குக் காட்டுவோம்
காண்பாய்" என்று மறை மொழியால் இறைவர் அருளினாராதலின் அம்மறை
மொழிகளையே போற்றிய மனன சீலர் என்று இங்கு விசேடவுரை
காண்பாருமுண்டு.

     அணைவதன் முன்னம் போகி - இங்குத் திண்ணனாரது செயல்களை
யெல்லாம் ஒரேதொடர்பாய்க்கூறி முடித்துக்காட்டவேண்டுமென்னுங்
கருத்தால், ஆசிரியர், முனிவனாரது செயல்களைக் கனாவுணர்ச்சி முதல்
பின்பாக ஒளித்திருந்துகாண அமைந்ததுவரை ஒரு சேரத் தொடர்ந்து மேல்
உரைத்து முடித்துக்கொண்டனர். ஆதலின் அதற்கிடையில் திண்ணனார்
வைகறையில், உருமிகத் தெரியாப்போதில், வேட்டைக்குச் செல்லும் செயல்
நிகழ்ந்த அதனைச் சரிதத்தின் கால நிகழ்ச்சி முறையில் ஆங்குக் கூறாது
இங்கு வேறாகத் தொடங்கிக் கொண்டனர். திண்ணனாரது அந்நாட்
செயல்களையும் இடைப்பிறவரலின்றித் தொடர்ந்து கூறுதலும் ஆசிரியர்
கருத்தாம்.

     தருமுறை முன்புபோல - முன்பு தருமுறைபோல என்க. ஊனமுதைத்
தரும் எனச் செயப்படுபொருள் வருவிக்க.

     முறை - இம்முறைகள், வில்லும் தெரிந்து கொண்ட அம்பும் கொண்டு
போதல், வைகறையிற் போதுதல் தொழுது போதல் முதலாக 782ல்
கூறியனவும், வேட்டை செய்வினைமுறையாக 792 - 793 - ல் கூறியனவும்
ஆம். முனிவனார் "முன்னைநாள் போல்வந்து ... முன்புபோற் பூசித்தார்"
என்றவாறே, திண்ணனாரும் முன்புபோல் வேட்டையாடினார் என்ற நயமும்
காண்க.

     தனிப்பெரு வேட்டை - ஒப்பற்ற பெரிய வேட்டைவினை.
கான்வேட்டை தனியாடி (790), தனிவேட்டைவினை (792) என முன்னர்க
கூறிய ஆசிரியர் இங்குத் தனிப்பெரு வேட்டை என்றது, இவ்வேட்டை
முந்திய நான்கு நாட்களின் வேட்டைபோலப் பூசைக்கு வேண்டும் ஊன்
அமுதம் உதவுதலின்றித் திருவருள் வெளிப்பாட்டுக் குதவினதாய் முடியும்
நிலைபற்றியாழ். அவை சாதனமும், இது அச்சாதனங்களால் அடையப்படும்
சாத்தியமும் (பயனும்) ஆகிமுடித்தலின்