குலைந்து அலைந்து சோரவும்
இவ்வாறாக நிலத்தில் மனமழிந்து பதைத்து
விழுந்தார்.
(வி-ரை.)
வந்தவர்- மார்பர் - கண்டார்; மயங்கினார் ; வீழ்ந்தார் என
முடிக்க. வந்தவராகிய மார்பர். வந்தவர் -
வினையாலணையும்பெயர்.
குருதி
கண்டார் - தேவர் குருதிபாய இருந்தனர்; அதனைத்
தூரத்தேகண்டு ஓடி வந்தவர் முதலில் தேற்றமாக அக்குருதியினையே
கண்டனர். இறைவனது திருமேனி யிற்கண்ட பிறதோற்றங்களினும் குருதியே
அவர் காட்சிக்கு முன்னே புலப்பட்டது. சகுனங்கள் உதிரங்காட்டும் எனக்
கவலைப்பட்டு வந்தபடி தூரத்தே குருதியைக் கண்டு ஓடிவந்தனர். அஃது
ஐயக் காட்சி வந்து தேற்றம் பெற அக்குருதியினையே கண்டார்.இது
தெளிவுக்காட்சி.ஆதலின் கூறியது கூறலாகாமையுணர்க. இக்கருத்துப்பற்றியே
பின்னரும் குருதி நின்றது கண்டார் என்னாது "நின்ற செங்குருதி கண்டார்"
(823) என்றதுங் காண்க.
கண்டார்
- மயங்கினார் - கண்டார் ஆதலின் மயங்கினார்.
கண்டதும் அக்காட்சியே மயக்கத்தை விளைத்தது என்க. ஆயின்கோழை
மனமுடையார் பலரும் குருதிகண்டு மயங்குவாராதலின் அதுபோலன்று எனக்
குறிக்க அலங்கல் மார்பர் என்று இவரது மார்பின்
வலியவீரத்தைக்
குறித்தனர். "மண்டமர் கடந்தநின் வென்றா டகலம்" (திருமுருகாற்றுப்படை)
என்றபடி மார்பின் வன்மையே வீரங்குறிப்பதாம். வேட்டையிலும்
குருதிப்பெருக்கிலுமே வீரத் தொழில் செய்யும் அவர் மயங்கியது
அன்புபற்றியே யாயிற்று என்பது குறிப்பு. மயங்குதல்
- அறிவு பிறழ்தல்.
குருதி கண்ட காட்சி மயக்கத்தை விளைக்க, அதனால் உடலைத்
தாங்கிநிற்கும் கன்மேந்திரியங்களும் அவற்றை நேர்நிற்கச் செய்து
தொழிற்படுத்தும் அசைவுநரம்புகளும் நிலைதவிரவே, உடல்பதைத்துக்
கீழேவிழும். ஆதலின் கண்டார் - மயங்கினார் -
பதைத்து விழுந்தார்
எனத் தொடர்புபடக் கூறினார்.
நன்னீர்சிந்திட
- சிலையுடன் ஊன் வீழ - பள்ளித்தாமம்
சோர - தேவர்க்கென மிக்க அன்புடன் அரிதின் முயன்று அமைத்து,
இத்தனைபொழுது தாழ்த்தே னென்றிரங்கிப் பரிவுடன்வந்தவர்,
இப்பொருள்களைத் தம் உயிரினும் பெரிதுகாப்பார்; இங்கு அவற்றையும்
காக்க இயலாமல் முற்றும் சோர்ந்தனர் எனச் சோர்வின் மிகுதி குறித்தது.
எனவே இவை அவர் எண்ணியபடி அன்றைப் பூசைக்கு உதவாது போயின.
முன்னை நாளிரவில் முன்பே இவற்றை இறைவன் உகந்துகொண்ட னராதலின்
இவை நின்மாலியமாயின; ஆதலின் பூசைக் குதவா ஆயின என்ற
குறிப்புமாம். கண்ணைத் தோண்டி அப்பித் தேவரது வலப்பக்கத்தில்
நிலைத்து நிற்கப்பெற்ற பேறுடன் அன்றை நாட் பூசையும் சரிதமும்
முற்றுப்பெறுதல் காண்க. 811 - ல் உரைத்தவை பார்க்க.
கையில்
ஊனும் சிலையுடன் சிதறிவீழ - கையில் -
கைகளினின்றும். ஐந்தனுருபு தொக்கது. இரண்டு கைகளையும்
ஓருறுப்பாகவைத்து ஓதியதனால் கையில் என ஒருமைபடக் கூறினார்.
வலதுகையில் ஏந்திய ஊன்கல்லையும் இடதுகையிற் பிடித்த சிலையும் என்க.
சிலை பகலில் ஊன்பெறவும் இரவிற் காவல்புரியவும்
துணை யாதலால்
தேவரது திருப்பணிக்கு ஊனைவிட இன்றியமையாத சிறப்புடையதென்பார்
ஒருங்குசேர்த்துக் கூறியதோடு, உடனிகழ்ச்சிப் பொருளில் வந்த
மூன்றனுருபைச் சிலையுடன் புணர்த்தி ஓதினார். இருகைகளும் வசமிழக்க
அவற்றிற்றாங்கிய ஊனும் சிலையும் ஒருங்கு வீழ்ந்தன என்க.
நீர்சிந்திட - ஊன் சிதறிவீழ
- பள்ளித்தாமம் சோர - அவ்வப்
பொருளுக்கேற்ற செயல்குறிக்க வெவ்வேறு வினையெச்சங்களாற் கூறினார்.
வாயினின்றும் நீர் சிறிது சிறிதாகச் சிந்தியது. கல்லையிற்கொண்ட பற்பல
வகைப்பட்ட ஊன்துண்டங்கள், கல்லைவீழவே பலபலவாகப் பல இடங்களிற்
சிதறின; அவ்வாறன்றிப் பள்ளித்தாமம்
இலகுவான பூவும்
இலையுமாயினமையின் ஒருங்கு வீழாமல் அவிழ்ந்தகுடுமியிற் சிலவும் நிலத்திற்
சிலவுமாகச் சோர்ந்தன என்றபடி.
|