தமது கண்ணினால் மாற்றும்
பேறுபெற்ற தலைவராகிய கண்ணப்ப நாயனார்
திருத்தாள்கனை எனது தலையின் மேலே அணிந்துகொண்டே, கங்கை
வாழும் சடையினையுடைய சிவபெருமான் எழுந்தருளிய திருக்கடவூரில்
கலயனாராகிய மிகுந்த புகழினால் மேம்பட்டவரது திருத்தொண்டினை இனிச்
சொல்லத் தொடங்குகின்றேன். 181
(வி-ரை)
மங்குல்வாழ் - ஆகாயத்தில் மேக மண்டலங்கள்
உள்ள
அளவும் உயர்ந்திருத்தலின் மேகம் எப்போதும் வாழ்ந்திருக்கின்றது என்பது.
வாழ்திருக்காளத்தி - முக்கால வினைத்தொகை.
எப்போதும் பனியால்
மூடப்பெற்ற இமயம் என்னும் திருக்கயிலை போல்வது திருக்காளத்தி யென்ற
குறிப்புப்பெற இவ்வாறு கூறினார். இத்திருமலையிற் றவழ்ந்திருத்தலின் மேகம்
தான் வாழ் வடைந்தது என்ற குறிப்புமாம். "வானின் றுலகம் வழங்கி
வருதலால்" (குறள்) என்றபடி ஏனை இடங்களில் உள்ள மேகம் உலகை
வாழவைக்கும். ஆனால் இங்குத் தவழும் மேகம்தான் வாழ்வை யடைந்தது
என்றவாறாம். சேணுயர் திருக்காளத்தி (745), மாகமார் திருக்காளத்தி (754)
முதலியவை காண்க. இனி, "கருவரை காளமேக மேந்திய தென்ன" (664)
என்றபடி அன்பு மழை பொழிகின்ற மேகம் போன்ற கண்ணப்பர் நிலைத்து
வாழ்கின்ற என்றுரைத்தலுமாம்.
மாற்றப்
பெற்ற - மாற்றும் பேறுபெற்ற. பெற்ற என்பதற்குச் செயப்படு
பொருள் வருவிக்க. இவ்வாறன்றி இதனை ஒரு சொல்லெனக் கொண்டு
மாற்றிய எனக் கொள்வோருமுண்டு. எல்லா ஆன்மாக்களது எல்லா நோயும்
தீர்க்கும் வைத்திய நாதராகிய இறைவரது புண்ணீரைத் தமது கண்ணே
மருந்தாகக் கொண்டு தீர்த்த முறையின் அருமை பற்றி மாற்றப்பெற்ற
என்று விதந் தோதினார். தலைவர் - நாயனார். அன்பினிற் றலைவர்.
ஆன்மாக்களை அன்பு நெறி காட்டி வழிப்படுத்தலால் அவைகட்கெல்லாந்
தலைவர் என்றலுமாம்.
தாள்
தலைமேற் கொண்டே - தாள்களைத் தலையின்மேல்
தலைக்கணியாகச் சூடிக்கொண்டு. தாள் + தலை = தாடலை என்ற தொடர்
சிவனோடத்துவித முத்திக் கலப்பினைக் குறிக்கச் சைவ மரபில்
வழங்குவதாம். "பொல்லா ரிணைமலர் புனைவரே" என்ற சிவஞானபோத
மங்கல வாழ்த்திற்குத் தாடலைபோல் அடங்கி நிற்பர் என்றுரைத்ததும்,
"தாடலைபோற்கூடி" (இன்புறு - 4) என்ற திருவருட் பயனும் காண்க.
கொண்டே - கொண்டு அந்தத் துணையினாலே புகலலுற்றேன் என்பது
கருத்து.
கங்கைவாழ்
சடையார் - சிவபெருமான். 831 பார்க்க.
கடவூரில்...மிக்கார்
- மேல்வருஞ் சரிதமுடையாரின் ஊரும் பேரும்,
தன்மையும், சரிதக் குறிப்பும் உணர்த்தித் தோற்றுவாய் செய்தபடியாம்.
பொங்கிய புகழின் மிக்கார் - செல்வம்
மிகப் பெற்றதும், திருப்பனந்தாள்
இறைவரை நேர் காணப்பெற்றதும், ஆளுடையபிள்ளையார் ஆளுடைய அரசு
என்ற இவ்விரு பெருமக்களையும் நேரே தமது திருமனையில் வைத்துப்
பூசித்து உபசரிக்கும் பேறு பெற்றதும் என இவ்வாறு மேன்மேல் உயரும்
அழியாப் புகழ்பெற்ற சிறப்பு நோக்கி இவ்வாறு கூறினார். பொங்கிய
என்றதனாற் செல்வம் பொங்கப் பெற்றதும், புகழ் என்றதனால் அரசர்
யானை சேனைகளாற் காணமுடியாத, சிவனிலைத்த காட்சிகண்டதும்,
மிக்கார் என்றதனால் சைவசமய பரமாசாரிய முர்த்திகளை நேரே பூசித்து
அமுதூட்டிய சிறப்பும் குறித்தார்.
திருக்தொண்டு
- திருத்தொண்டுகள். சாதியொருமை.
திருத்தொண்டின் திறம் கூறும் சரிதம் என்றலுமாம்.
இது
கவிக்கூற்று. ஆசிரியர் தாம் கையாண்ட முறைப்படி இதனால்
இது வரை கூறிவந்த இச்சரிதத்தை உபசங்காரம் செய்து முடித்துக்காட்டி,
மேல் வரும் புராணத்திற்குத் தோற்றுவாய் செய்தனர். இதனுள் இவ்விரண்டு
சரிதங்களும் சுருங்க விளக்கப்படுதல் காண்க. 181
|