கண்ணப்பர்
காளத்தியப்பரின் வலத்தில் என்றும் நிற்றல்
வலக்கண்ணிற்
கண்ணப்பிய வள்ளலாராகிய கண்ணப்பதேவரின்
நலத்தினைப் பின்னுங் காட்டுதற்காகக் காளத்திநாதர் தமது இடக்கண்ணில்
உதிரம் பாயக் கண்டனர். அதனைக் கண்ணப்பர் கண்டனர். "ஒ! கெட்டேன்!
எனது நாயகரது ஒரு கண் குருதி நிற்க, மற்றைக் கண் குருதி மண்டிப்
பொங்கியது. இதற்கு அஞ்சேன்; மருந்து கை கண்டேன். எனக்கு இன்னும்
ஒரு கண் உண்டு. அதனைத் தோண்டி அப்பி இப்புண்ணை ஒழிப்பேன்"
என்று துணிந்தார். கண்ணுதல் கண்ணில் தமது கண்ணை அவ்வாறு
அப்பும்போது நேர்பாடு காணும் பொருட்டு அவரது கண்ணில் தமது இடது
காலை ஊன்றிக்கொண்டார். உண்ணிறைந்த விருப்பத்தோடும் ஒப்பற்ற
தனிப்பகழி கொண்டு தமது இடது கண்ணில் ஊன்றினார். தேவதேவர்
தரித்திலர். அவரது திருமேனியில் முளைத்தெழுந்த கை கண்ணப்பனாரது
திருக்கையினை அம்புடன் பிடித்துக்கொண்டது. அதற்கு முன் அவரது
அமுதவாக்கினின்றும் "நில்லு கண்ணப்ப! நில்லு கண்ணப்ப! என் அன்புடைத்
தோன்றல் நில்லு கண்ணப்ப!" என்று மும்முறை எழுந்து தடுத்தது. இவை
முழுதும் ஞானப் பெரு முனிவர் கண்டார். வேதங்கள் முழங்கப் பிரமன்
முதலிய தேவர்கள் கற்பகப் புதுப்பூமழை பொழிந்தனர். கையைப்
பிடித்துக்கொண்ட இறைவர் கண்ணப்பரை "மாறில்லாய்! என் வலத்தில் நிற்க"
என்றே நிலைபெற்ற பேரருள் புரிந்தனர்.
தலவிசேடம்
:- (1) திருக்காளத்தி ..
இத்தலம் சீகாளத்தி எனவும்
வழங்கப்பெறும். இது திருத்தொண்டை நன்னாட்டிற் பாடல் பெற்ற 32
தலங்களுன் 19-வது தலம். பொன்முகலி யாற்றின்
கீழக்கரையிலுள்ளது.
ஐம்பூதப் பெருந்தலங்களுள் வாயுத்தலமாம். வாயுவின் இயக்கம் இறைவனின்
பக்கத்தில் உள்ள திருவிளக்குச் சுடரின் அசைவினால் இன்றும்
காணத்தக்கது. இது தென்கயிலாயம் எனப்படும்.
இம்மலையிற் றரிசித்த
குறிப்பினால் திருக்கயிலாயத்தினை நினைந்து திருஞானசம்பந்த சுவாமிகளும்
சுந்தரமூர்த்திகளும் இங்கிருந்தபடி வடக்கே நோக்கித் துதித்துத்
திருப்பதிகங்கள் கட்டளையிட்டருளினர். அப்பர் சுவாமிகள் "தாணுவினை
யம்மலைமேற் றாள்பணிந்த குறிப்பினால், பேணுதிருக் கயிலைமலை
வீற்றிருந்த பெருங்கோலங், காணுமது காதலித்துக், ‘கயிலாயத் துச்சியுள்னான்
காளத்தியான'் என்று நாதனையென் கண்ணுளான்" என்று துதித்துத்
திருக்கயிலாய யாத்திரையில் வழிபட்டனர். இக்குறிப்புப்பற்றியே நக்கீரர்
கயிலைபாதி காளத்திபாதி யந்தாதி பாடினர். ஆறாதாரத் தலங்களுள்
விசுத்தித் தானத்தலம் என்ப. இது மகாபுராணங்களாலும் போற்றப்பட்ட
பெருந்தலம். விட்டுணுமூர்த்தி, பிரமதேவர், இலக்குமி, சரசுவதி,
திக்குப்பாலகர் முதலிய தேவர்களும். சனகாதி முனிவர்கள், அகத்தியர்,
வசிட்டர், உரோமசர் முதலிய பெருமுனிவர்களும் சுவேதாசுவதராகிய
நூற்றுப்பன்னிரு தேவ இருடிகளும், யோகினிகளும். அக்கினிப் பிரபன
முதலிய அசுரர்களும், ஆதிசேடன் முதலிய நாகர்களும், மணிமான் முதலிய
இயக்கர்களும், முசுகுந்தர் முதலிய பேரரசர்களும், நக்கீரர் இருகன்னியர்
முதலிய அளவிறந்த பெரியோர்களும் பூசித்துப் பேறுபெற்ற தலம். சீ
(சிலந்தி), காளம் (பாம்பு), அத்தி
(யானை), என்ற மூன்றும் பூசித்துக்
கதியடைந்த சிறப்பினைச் சீகாளத்தி என்ற
தனது பெயராலே விளக்கி
நிற்கும் தலம். (புள்ளிருக்கு வேளூர் - திருவாவினன்குடி என்பனபோல)
இத்தலத்து இறைவனது சிவலிங்கத் திருமேனி இரண்டு நீண்ட
யானைக்கொம்புகள் கூடியன போன்றுள்ளது. அதன் உச்சியில் "ஐந்து
கொலாமவ ராடர வின்படம்" என்றபடி ஐந்தலைப் பாம்பின் படமும்,
அடியிற் சிலந்தியுருவமும் இன்றும் காணப்பட்டுத் தலப்பேர் போலவே,
நாதரும் சீகாளத்தியாய் விளங்குகின்ற பெருமையுடையது. அன்பே
உருவமாய் நின்ற கண்ணப்பர் பூசித்து ஆறு நாளிற் பெரும்பேறு பெற்ற
பெருஞ்சிறப்பு வாய்ந்ததனை உலகமறியும். கண்ணப்பரது
|