பக்கம் எண் :


கண்ணப்பநாயனார்புராணம்1059

 

     யாம் ! அவனது நிலையிது. நாளைக்கு நீ நம்பக்கல் ஒளிந்திருந்தால்
நம்மிடத்து அவனுக்கிருக்கும் பரிவின் தன்மையெல்லாம் காண்கின்றாய்.
மனக்கவலை ஒழிக!" என்றருளிச்செய்து போயினர்.

       ஆறாநாள் முனிவர் பூசை திண்ணனார் கண்ணப்பராதல்

     முனிவர் கனவுநீங்கி விழித்தெழுந்து விடியுமளவும் துயிலாதவராகி,
அற்புதமும் பயமுமடைந்து, அருணோதய நேரத்தில் எழுந்து
முன்னாளிற்போலவந்து திருமுகலியில் மூழ்கினர். பலமுறையும் தமது
பெருமானது அருளிப்பாட்டை நினைந்தபடியே திருக்காளத்திமலையேறி
இறைவனைப் பூசித்து பின்பாக ஒளித்திருந்தனர். திண்ணனார் ஆறாவதுநாள்
அதிகாலையில் முனிவனார் வருவதன்முன் போய் முன்பு போலத் தனிப்பெரு
வேட்டையாடினர். ஒப்பற்ற ஊனமுதமும், திருமுடியில் ஏறும் புதுமலரும்,
நல்ல திருமஞ்சனமும், வெவ்வேறியல்பினில் அமைத்துக்கொண்டு,
இத்தனைநேரம் தாழ்த்தேன் என்று. மிக விரைவாகத் திருக்காளத்தியப்பரிடம்
வந்தணையாநின்றார். அவர்முன் கூடிய பல சகுனங்களும் தீங்கு குறித்துக்
காட்டின. "இத்தீயபுட்கள் உதிரங் காட்டுகின்றனவே! ஒ கெட்டேன்! என்
அத்தனுக்கு என்ன நேர்ந்ததோ?" என்று திண்ணனார் அணையும்போதில்,
அவரது அன்பை முனிவர்க்குக் காட்டும்பொருட்டுத் திருக்காளத்தியப்பர்
தமது சிவலிங்கத் திருமேனியில் முகமும் அதில் மூன்று கண்களுமாகக்
காட்டி, அக்கண்களுள் வலத்திருக்கண்ணில் துண்ணென உதிரம் பாயக்
காட்டி யிருந்தனர். இதனைத் தூரத்திற் கண்ட திண்ணனார் வல்
விரைந்தோடி வந்தார்; குருதியைக் கண்டார்; வாயிலிருந்த நன்னீர் சிந்திற்று:
கல்லையுடன் ஊனமுதம் கையிலிருந்து வீழ்ந்து சிதறிற்று: மற்றைக்
கையிலிருந்த வில்லும் வீழ்ந்தது; குஞ்சியினின்றும் புதுமலர்கள் அலைந்து
சோர்ந்தன. திண்ணனார் நிலத்திற் பதைத்து வீழ்ந்தார்; பின் எழுந்தார்;
சென்று இரத்தத்தைத் துடைத்தார்; இரத்தம் வீழ்வது நிற்கவில்லை.
மனமழிந்து பின்னும் வீழ்ந்தார். சிறிது தேறி "இதனை யாவர் செய்தவர்"
என்று வில்லும் எடுத்து அம்புகளையும் தெரிந்துகொண்டு, "எனக்குப்
பகையாய் இம்மலையிற் கொடிய வேடுவர் செய்தாருளர்கொலே? சிங்கம்
முதலிய கொடுவிலங்குகள் செய்தனவோ? கண்டறிந்து ஒறுப்பேன்" என்று
அக்குன்றச் சாரலில் நெடுந்தூரம் பக்கத்திலும் வேறெங்கும் தேடிச் சென்றார்.
வேடர்களையும் விலங்குகளையும் காணவில்லை. மீண்டும் திருக்காளத்தி
நாதரிடம் வந்து அவரது பாதங்களைத் தழுவிக்கொண்டு, "பாவியேன் கண்ட
வண்ணம் இப்பரமனார்க்கு என்னோ அடுத்தது? உயிரினும் இனிய
இவ்வத்தனுக்கு என்னோ அடுத்தது? செய்யலாவதொன்று மறியகில்லேனே!"
என்று கண்ணீர்வாரக் கதறினார். பின், "என்னசெய்தால் இது தீருமோ?
இத்தீங்கு செய்தாரைக் காணேனே! வேடர்களது அம்புப் புண்களை
நிச்சயமாகத் தீர்க்கும் மூலிகைகளை இம்மலையிற் பொன்செய்யும்
தாழ்வரையிற்றேடிக் கொண்டு வருவேன்" என்று போனார். இனத்தினிற்
பிரிந்த ஏறுபோல வெருக்கொண்டு, வேறு வேறு வனங்களெங்கும் நினைத்து
அம்மூலிகைகளைப் பறித்துக்கொண்டு நாதரிடம் வைத்த தமது
மனவேகத்தினும் கடிது திரும்பினார். அந்த மருந்துகளைப் பிழிந்து தேவரது
கண்ணில் வார்த்தார். குருதி நிற்கவில்லை. இன்று இதற்கு இனிச்
செய்வதென்னே என்று எண்ணிப்பார்த்தார். "ஊனுக்கு ஊனே" உற்றநோய்
தீர்ப்பது என்ற பழமொழி அவரது நினைவுக்கு வந்தது, வரவே, இனி என்
கண்ணைத் தோண்டி அப்பினால் புண்ணீர் நிற்கவுங் கூடும் என்று, உடனே
மகிழ்ச்சியுடன் திருமுன்பு இருந்து தமது வலக்கண்ணைக் கூரிய
அம்பினாற்றோண்டி முதல்வர் கண்ணில் அப்பினார்.
குருதி வராமல்
நின்றது கண்டார்; குதித்தார்; தோள் கொட்டினார்; கூத்தாடினார்; "நான்
செய்த இந்த மதி மிகநன்று" என்று நகைத்தார்; உன்மைத்தர்போ லாயினார்.