இரண்டாம்
நாள் திண்ணனார் பூசை
இப்பால்,
திண்ணனார், பெருமலைச்சரிவில் புனமேய்ந்து வரும்
பெரும் பன்றிகளைத் துணிபடுத்தியும், மானினங்கள் ஒருவழிச் சென்று ஏறும்
துறையில் ஒளி நின்று கொன்றருளியும், பயிலோசையாற் கலைகளை
அழைத்து அம்பு எய்தும், மறையினங்களைத் துயிலும் கிடையில் எய்தும்,
கடமைகளைத் தொடர்ந்து எய்தும் இவ்வாறு உச்சி வேளை வெயில் முதிர
வேட்டை முடித்தனர். இப்படிக் கொன்ற விலங்குகளை ஒரு சூழலிற்
சேர்த்தனர். அருகே தீக்கடைகோல் வெட்டினர். கோற்றேன்களையும்
வேண்டுமளவும் மிக முறித்தனர். வட்டமாக உள்ளிடம் அகலமாகப்
பெருங்கல்லைகளைத் தேக்கிலையாற் கோலிக்கொண்டனர். விறகுகளை
முறித்து அடுக்கித் தீ உண்டாக்கி வளர்த்தனர். மிருகங்களை அம்பினாற்
கொத்திக் குட்டமிட்டு, இறைச்சிகளில் வதக்குவனவற்றை வதக்கிக், கூரிய
அம்பினாற் கீறிவகுத்து ஒரு கல்லையிலிட்டுப், பின்பு கோலிற் கோத்துக்
கனலிற் பதம் பொருந்தக் காய்ச்சினர். எண்ணில்லாத தேவர்களுக்கு இடும்
அவியுணவைத் தீக்கடவுளின் வாயில் வைத்ததுபோலக் காளத்திநாதருக்கு
ஆகும் பரிசு சோதித்துச் சுவைகண்டு அமுது அமைப்பதற்குத் திண்ணனார்
தமது திருவாயில் ஊனமுது அமைத்தனர். இவ்வாறு சுவைபார்த்த நல்ல
இறைச்சிப் பகுதிகளை ஒரு கல்லையிற் படைத்து அதில் தேன் பிழிந்து
கலந்தனர். திருப்பள்ளித்தாமமும் தூய திருமஞ்சனமும் முன்புபோலக்
கொண்டு விரைவில் வந்தனர். திருக்காளத்தி யப்பரை அடைந்து முனிவர்
பூசை நின்மாலியங்களை முன்புபோல நீக்கி முன்னாட்போலவே பூசையினை
முடிப்பாராய், ஊனமுதத்தைக் கல்லையுடன் திருமுன்பு வைத்து, "இது
நேற்றுக் கொண்ட ஊனமுதைவிட நன்று; ஏனத்தினோடு மான், கலை, மரை,
கடமை இவைகளின் ஆகிய இறைச்சி; அடியேனும் சுமை கண்டேன்; தேனும்
உடன் கலந்துள்ளது; தித்திக்கும்" என மொழிந்து அன்போடு தேவரை
அமுது செய்வித்தனர்.
மூன்றாவது
நான்காவது நாட்களில் இருவர் பூசை
திண்ணனார்
இவ்வாறு தமது ஒப்புயர்வற்ற பூசைசெய்து அந்நெறியி
லொழுகுவாராகிக் காளத்தியப்பர் திருமுன்பு இரவில் உறங்கா தவரும்
பகலில் வேட்டையாடுவாரு மாயினர். பெருமுனிவரும் நாள்தோறும் வந்து
வேடர் பூசைக்காக மனந்தளர்ந்து அதனைத் தீமை என்றுகொண்டு, நீக்கித்,
தூய்மைசெய்து ஆகமங்களின்விதித்தபடி அருச்சித்து அந்நெறியில்
ஒழுகுவாராயினர்.
நாகன்
வந்து கண்டு திண்ணனாரைக் கைவிட் டகலுதல்
நாணனொடு
காடனும்போய் நிகழ்ந்தவற்றையெல்லாம் நாகனிடம்
சொல்ல, அவன், உணவும் உறக்கமுமில்லாதவனாய்த் தேவராட்டியையும்
கூட்டிக்கொண்டு மகனார்பால் வந்தான். அவர்கள் தாங்க ளறிந்தபடி
யெல்லாம் பேதித்தும் அவர் தமது குறியில் வாராமைகண்டு
கைவிட்டகன்றனர். வேதகத்தினால் இரும்பு பொன்னாகியதுபோல முன்பு
திருக்காளத்தி முதல்வனாரது அருட்டிரு நோக்கத்தால் யாக்கைப்
பரிசும்
இருவினையும் மலமூன்றும் அற அன்பு பிழம்பாகித் திரிவாராகிய
திண்ணனார் அவர்களுடைய கருத்தின் அளவில் அமைவரோ? அமையார்.
ஐந்தாநாள்முனிவர்
பூசையும் திண்ணனார் பூசையும்
அந்நிலையிலே
திண்ணனார் அறிந்தவாறு பூசித்தனர். முனிவர்
ஆகமப்படி பூசித்து "என்னுடைய நாயகனே! இதுசெய்தாரைக் காணேன்,
இத்தீமையை உனது திருவருளால் ஒழித்தருளவேண்டும்" என்று
பிரார்த்தித்துப் போயினர். அன்று இரவு முனிவரது கனவில் இறைவர்
எழுந்தருளி "அவனை வேடுவனென்று நீ நினையாதே! அவன் செயல்களை
நாம் உரைக்கக் கேள். அவன் வடிவமெல்லாம் நம்மிடத்துக்கொண்ட
அன்பேயாம்! அவன் அறிவு முழுமையும் நம்மையறியும் அறிவேயாம்!
அவனது செயல்கள் எல்லாம் நமக்கு இனியனவே
|