மானக்கஞ்சாறர்
- கஞ்சாறு என்ற தலத்தில் அவதரித்து வாழ்ந்த
பெரியார் ஆதலினால் இப்பெயர் பெற்றார். இளையான்குடிமாறர் என்ற பெயர்
காண்க. மானம் - பெருமை.
மிக்கவண்புகழ்
- வண்மை - கொடை - வள்ளற்றன்மை.
மிக்க
கொடையினாற்போந்த புகழ். இங்கு வண்மை -
அடியார்கள் விரும்பியது
கொடுத்தலின்மே னின்றது. இஃது இவர் சரித உள்ளுறையாம். இவ்வாறு
குறிப்பினால் சரித உள்ளுறை கூறித் தொடங்கிக் காட்டிய ஆசிரியர்
இதனையே "ஒரு மகள் கூந்தல் தன்னை வதுவைநா ளொருவர்க் கீந்த,
பெருமையார்" (902) என்று இவ்வண்மையாவது
இது என்று இப்புராண
முடிவில் முடித்துக்காட்டியதிறமும் காண்க.
புகழ்
வழுத்தல் உற்றேன் - சரிதமுற்றும் சொல்லவல்லேனல்லேன்;
அவரது வள்ளன்மையாற் பேரந்த திருத்தொண்டினைத் துதிக்கின்ற மட்டில்
அமைவேன் என்றதாம். புகழ் - அதனையுடைய
தொண்டற்காயிற்று.
ஆகுபெயர்.
இப்பாட்டு
கவிக்கூற்று. "தாலி மாறிக் குங்குலி யங்கொண்டு" "உய்த்த"
என்றவற்றால் இதுவரை கூறிவந்த இச்சரித முழுதும் வடித்து முடித்துக்காட்டி,
இனி வரும் சரிதத்துக்கு "வண்புகழ்" என்று தோற்றுவாய் செய்தனர். இது
ஆசிரியர் மரபு. 35
சரிதச்
சுருக்கம் :- காவிரிபாயும் சோழவளநாட்டில்
திருக்கடவூர்
என்ற தொரு தலமுண்டு. அது இறைவன் வீரஞ்செய்த எட்டுத்தலங்களில்
ஒன்றாதலின் கடவூர் வீரட்டானம் என்று பெயர்பெறும்.
காலனை உதைத்த
வீரம் இங்கு நிகழ்ந்ததாம். இத்தலத்தில் மறையவர்கள் சிறந்து வாழ்வார்கள்.
அவர்களுள் கலயனார் என்ற பெரியார் ஒருவர்
இருந்தனர். அவர்
சிவனடிபேணும் சிறந்த அன்புடையவர்; நல்லொழுக்கத்திற் சிறந்தவர்.
அத்தலத்தே எழுந்தருளிய அமிர்தகடேசருக்கு விதிப்படி தூபம் இடும்
திருப்பணியை நியதியாகச் செய்து வந்தார்.
அந்நாளில்
திருவருளாலே அவருக்கு வறுமைவந்தது. அதன் பின்னரும்
அத்திருப்பணியை வழுவாது செய்து வந்தனர். வறுமை மிகவே தமது நல்ல
நிலமுழுமையையும் அடிமைகளையும் விற்றும் பணிசெய்தனர். வறுமை மேலும்
முடுகியதனாற் தாமும் மனைவிமக்களும் சுற்றமும் உணவுக்கான
சாதனமொன்றுமின்றி இரண்டுநாள் உணவின்றி வருந்தினார்கள். இது கண்ட
மனைவியார் கணவனார் கையில் குற்றமற்ற தமது மங்கல நாணில் அணிந்த
தாலியை எடுத்துக்கொடுத்து "இதற்கு நெற்கொள்ளும்" என்றனர். அதனைக்
கொண்டு அவர்நெற்கொள்ளச் சென்றபோது எதிரில் ஒரு வணிகன்
ஒப்பில்லாத குங்குலியப் பொதி கொண்டு வந்தான். அதனை அறிந்த
கலயனார் "இறைவனுக் கேற்ற மணமுடைய குங்குலியம் இதுவாயின், இன்று
நல்ல பேறு பெற்றேன். பெரும் பேறாக இதனைப் பெற்றுவைத்தும் வேறு
கொள்ளத்தக்கது என்ன உள்ளது?" என்று துணிந்து, பொன்பெற்றுக்கொண்டு
அதனைத் தருமாறு வணிகனைக் கேட்கவே, அவனும் மகிழ்ந்து அவர்தந்த
தாலியை ஏற்றுக்கொண்டு குங்குலியப் பொதியினைக் கொடுத்துச் சென்றான்.
கலயனார் சிந்தை மகிழ்வுடன் விரைந்து சென்று திருவீரட்டானத்திற் சேர்ந்து,
இறைவரது பண்டாரத்தில் (சேமம்) அப்பொதியின் குஞ்குலியத்தை எல்லாம்
சேமித்துத் திருப்பணிசெய்து சிவசிந்தையுடன் அங்கே தங்கினர்.
அன்றிரவு
மனைவியாரும் மக்களும் பசியால் மிகவருந்தி அயர்ந்து
தூங்கினர். அப்போது இறைவருடைய திருவருளினாலே குபேரன் தனது
செல்வத்தைப் பூமியில் கொண்டுவந்து நிறைத்துக் கலயனாரது மனைமுழுதும்
பொற்குவையும் நெற்குவையும் அரிசி முதலிய பிற எல்லாவளங்களுமாக
ஆக்கிவைத்தனன். இதனை இறைவர் அம்மையாருக்குக் கனவில் உணர்த்த,
அவர் உணர்ந்தெழுந்து செல்வங்களை நோக்கினர்; அவற்றை இறைவரருள்
என்று கண்டு தொழுதனர்;
|