தமது கணவனார்க்குத்
திருவமுது சமைக்கலாயினர். அங்குத் திருக்கோயிலில்
கலயனார்க்கு "நீ மிகப் பசித்தனை! உன்மனையிற்சென்று பாலினின் அடிசில்
உண்டு துன்ப நீங்குக" என்று இறைவர் கட்டளையிட்டருளினார்.
அத்திருவருளை மறுத்திருப்பதற் கஞ்சிக் கலயனார் மனையில் வந்தனர்.
செல்வமெல்லாங் கண்டனர்; திருமனையாரை நோக்கி "இவ்விளைவெல்லாம்
என்கொல்?" என்றுகேட்க, அவர் "திருநீலகண்டராகிய எம்மானது அருள்"
என்றார். கலயனார் கைகூப்பிவணங்கி "என்னையும் ஆட்கொள்ள
எம்பெருமான் திருவருள் இருந்தபடி இதுவோ?" என்று துதித்தனர்.
மனைவியார் பரிகலந்திருத்திக் கணவனாரைச் சிவனடியார்களோடு இருத்தித்
தூபதீபம் ஏந்திப் பூசித்து இன்னமுதூட்டினார். அது நுகர்ந்து கலயனார்
இன்பமார்ந்தார். இவ்வாறு இறைவரருளால் உலகில் நிறைந்த
செல்வமுடையராகி அடியவர்களுக்கெல்லாம் நல்ல இனிய அமுதூட்டியும்
உதவியும் வாழ்ந்திருந்தனர்.
இந்நாளில்
திருப்பனந்தாளில் இறைவர் திருமேனி, தாடகை
என்ற
அசுரமாதுக் கருளும் பொருட்டுச் சாய்ந்தது அவ்வாறே இருந்தது. அதனை
நேர்நிற்கக் கண்டு கும்பிடவேண்டுமென்று ஆசை கொண்ட சோழமன்னன்
யானைகளையும் சேனைகளையும் பூட்டித் திருமேனியினை நிமிரப் பண்ண
முயன்றனன். இறைவர் நேர்நிற்கவில்லை. யானை சேனைகள் இளைத்து
வீழ்ந்தன. அரசன் புடைபடக்கவன்றிருந்தனன். இதனைக் கேட்டனர்
கலயனார். நாதனை நேர்காணும் பணியில்நின்ற அரசனை விரும்பித்
திருக்கடவூரினின்றுபோந்து திருப்பனந்தாளிற் சேர்ந்தனர். யானைசேனைகள்
இளைத்து வீழ்ந்து எழமாட்டாத நிலைகண்டு மனம் வருந்தினார்.
"இவ்விளைப்பினை நானும் கூறுகொண்டு அவ்வளவிற்கு இவற்றின்
வருத்தத்தைக் குறைக்க முயல்வேன்" என்று துணிந்தார் இறைவரது
திருமேனிப் பூங்கச்சிற் கட்டிய பெரிய வலிய கயிற்றினைத் தம் கழுத்திற்பூட்டி
இழுத்து வருந்தலுற்றார். இவர் இவ்வாறு செய்து இளைத்த பின் இறைவர்
திறம்பி நிற்க ஒண்ணுமோ? இவர் தமது அன்பின் ஒருமைப் பாட்டினைக்
கண்டபோதே அண்ணலார் நேரே நின்றார். தேவர்கள் விண்ணில் ஆர்த்துப்
பூமாரி பெய்தனர். வாடிய சோலை மேகம்பெற்றுக் களிப்பதுபோல
யானைசேனைகள் களித்தன. சோழமன்னன் கலயனாரது பாதங்களில் வீழ்ந்து
வணங்கி, "மேருவைவில்லாக வளைத்துப் புரமெரித்த கடவுளின் செந்நிலை
காணச்செய்தீர்! திருமாலுங் காணாத மலரடியிணைகளை அன்புடையடியாரே
யல்லால் நேர்காண வல்லார்யாவர்?" என்று துதித்தான். பின்னர் அரசன்
இறைவர்க்குப் பிறபணிகள் பலவுஞ்செய்து தனது நகரத்துக்குச் சென்றான்.
அரசன் போயின பின்னரும் கலயனார் சிலநாள் இறைவனைப் பிரியலாற்றாது
அங்குத் தங்கி வழிபட்டுப் பின் திருக்கடவூர் சேர்ந்தனர்.
சிலநாள்களின்
பின்னர் ஆளுடையபிள்ளையாரும் ஆளுடைய
அரசுகளும் கூடித் திருக்கடவூருக்கு எழுந்தருளினார்கள். மிக்க மகிழ்ச்சி
பொங்கக் கலயனார் அவர்களை எதிர்கொண்டு அழைத்துத் தமது
திருமனையில் அவர்களது பெருமைக் கேற்றவாறு இன்னமுது அளித்து
வழிபட்டு அவர்களதருளேயன்றி இறைவரது அருளும் பெற்றார்.
இவ்வாறு
கலயனார் அரனுக்கு அடியவர்க்கும் ஏற்றனவாய்த் தமக்கு
நேர்ந்த பணிகள் பலவும் செய்து வாழ்ந்திருந்து சிவபெருமானது திருவடி
நீழலிற் சேர்ந்தனர்.
தலவிசேடம்
:- (1) திருக்கடவூர் - இது
சோழநாட்டில்
தேவாரப்பாடல் பெற்றனவாகிக் காவிரிக்குத் தென்கரையிலுள்ள தலங்களுள்
47-வது திருத்தலம். சிவபெருமான் வீரங்கள்செய்த "அட்ட வீரட்டம்"
என்னும் எட்டுத்தலங்களுள் மார்க்கண்டேயருக்காகக் காலனை
உதைத்துருட்டிய காலசங்கார வீரம் நிகழ்ந்ததலம். இச்சரிதத்தைப் பலபடத்
துதித்துக் "கூற்றர்பதைப்ப உதைத்துங்களே, யுருட்டிய சேவடியான்கட வூருறை
யுத்தமனே", "காலனைக் காய்ந்த பிரான்"
|