"காலனை அன்றடர்த்து"
என்பன முதலிய அப்பர் சுவாமிகளது இத்தலத்
திருவிருத்தங்களிலும், மற்றெல்லாத் திருமுறைகளிலும் வரும் எண்ணிறந்த
திருவாக்குக்களும் காண்க. பதுமகற்பத்தில் பிரமதேவர் சிவஞானம்பெறத்
தவஞ்செய்து சிவபெருமானருளிய சிவஞான விதையிட்டு உண்டாக்கிய
வில்வமரத்தையுடைய காரணத்தால் இது வில்வாரண்ய மெனப்படும்.
இந்த
மூர்த்தி ‘ஆதிவில்வாரண்யேசுவரர்' என்ற நாமத்துடன் கர்ப்பக்கிருகத்தின்
வடசுற்றில் வடதிருமாளிகைப்பத்திக் கீழ்கோடியில் குகைக்கு
வடகீழ்ப்பாகத்தில் அமர்ந்திருக்கிறார். இராதந்திர கற்பத்தில் தூய்மையுடைய
இடமாகிய இத்தலத்தில் வைத்து உண்ணும் பொருட்டு விட்டுணு முதலிய
தேவர்கள் அமிர்தத்தைக் குடத்திலிட்டு இங்குக் கொண்டுவந்து வைத்தனர்.
அதுவே அமிர்தலிங்கமாக உருப்பட்டு ஊன்றிக்கொண்டது.
ஆதலின்
இத்தலம் கடவூர் - கடபுரி - எனப்படும்;
சுவாமி அமிர்தகடேசுவரர் என
வழங்கப்பெறுவர்.
அகஸ்தியர்
பூசித்த பாப விமோசனலிங்கம் திருவாலயத்தினுள்
காலசங்காரமூர்த்தி எழுந்தருளியுள்ள மண்டபத்திலும், புலஸ்தியர் பூசித்த
புண்ணியவர்த்தனலிங்கம் திருமூலத்தானத்தினை
அடுத்த சுற்றில் வடக்கில்
தனியாலத்திலும் தேற்றமாக உள்ளன. காலனை உதைத்த திருக்கோலமாக
வெளிப்பட்ட சிறப்புடன் காலசங்காரமூர்த்தி ஆலயத்தினுட்புறம்
தனி
மண்டபத்தில் தெற்குநோக்கி எழுந்தருளியுள்ளார்.
"பத்தியாய்
நினையே ரருளைவாய் மடுத்துப் பருகுதோ றமுதமொத்
தவர்க்கே
தித்தியா விருக்குந் தேவர்கா ளிவர்தந் திருவுரு விருந்தவா
பாரீர்!"
என்று பூந்துருத்தி நம்பிகாட
நம்பிகள் திருவிசைப்பாவிற் கூறியபடி இவரது
அருமைத் திருக்கோலம் கண்டு தரிசிக்கத் தக்கதாம். சிறிதே உயரத் தூக்கிய
இனித்தமுடைய இடது பொற்பாதமும், நீவிர் அடையத்தக்கது இதுவே என
அத்திருவடியை இடது திருக்கரத்தாற் சுட்டிக் காட்டிய திருவிரலும்,
கொவ்வைச் செவ்வாயிற் பொலியும் குமிண் சிரிப்பின் அருளும்,
கீழ்நோக்கியூன்றிய திரிசூலப்படையும், திருவடியின்கீழ் உதையுண்டு வீழ்ந்து
குண்டோதரனால் காலைக் கயிற்றாற்கட்டி யீர்க்கப்பட்டுக் கிடக்கும் காலனும்,
அவனது பாசத்தினின்றும் காக்கப்பட்டுத் துதித்துநிற்கும் மார்க்கண்டேயரும்,
இடது பக்கத்தில் இத்திருவருட் கூத்தை உயிர்களின் பொருட்டுச் சாட்சியாகக்
கண்டு காட்சி கொடுத்து நின்றருளும் பாலாம்பிகையம்மையாரும்,
இனிமை
பொருந்தக் கண்டுய்யத்தக்க திருவுருவங்களாம். இவர் சன்னிதியின்
நேரெதிரே அறுபத்துமூவர் மண்டபத்தில், திருவருளால் மீள உயிர்பெற்றுச்
சிவனடியாரிடத்துப் புடையிலும் போகாத ஆணையும் வரமும் பெற்றுத் தனது
எருமையூர்தியுடன் துதித்து நிற்கின்ற காலனையும் காணலாம். இத்தலத்தில்
அவதரித்து வாழ்ந்து சிவபத்தி அடியார் பத்திகளிற் சிறந்து முத்தியடைந்த
குங்குலியக் கலயநாயனார் சரிதம் மேலே அவர்
புராணத்துட் பரக்கக்
காண்க. இவரது திருமனை இருந்த இடம் ஆலயத்தின் வடக்கு மடவளாகம்,
(அதாவது வடக்கு உள்வீதி) கீழ்க்கோடியில் உள்ளதென்று வழங்குகின்றனர்.
காரி நாயனாரும் இத்தலத்தில் அவதரித்துச்
சொல்விளங்கப் பொருள்
மறையக் கவிபாடி அரசர்களிடம் பெற்ற பொருள் கொண்டு பலதிருப்பணிகள்
செய்து முத்தியடைந்தனர். ஏழு கன்னியர் - வாசுகி - துர்க்கை முதலியோர்
இங்கு வழிபட்டுப் பேறுபெற்றனர். மார்க்கண்டேயர் பூசைக்காகக்
காசியிலிருந்து இங்கு கங்கை வந்ததென்றும், அதுவே இத்தலத்தினின்றும் ஒரு
நாழிகையளவில் உள்ள திருக்கடவூர் மயான ஆலயத்தின் தென்பாகத்தில்
மண்சாலையில் இப்போது கிணறாக உள்ளதென்றும் அறியப்படுகிறது.
இத்தீர்த்தமே அமிர்த கடேசருக்கு நித்தியப்படி திருமஞ்சனமாம். இத்தீர்த்தம்
தினந்தோறும் சகடத்திற் கொணர்ந்து சுவாமி அம்பாளுக்கு அபிஷேகமாகி
வருகிறது. இதர தீர்த்தங்கள் - காசி கங்கையுட்பட - இங்கு அபிடேகம்
செய்யப்படுவதில்லை.
|