பக்கம் எண் :


குங்குலியக்கலயநாயனார்புராணம்1109

 

     பங்குனி மாதத்து அசுவினி நாளில் அமிர்தகடேசர் இதில் தீர்த்தங்
கொடுப்பது பெருஞ்சிறப்பாம். அந்நாளில் மட்டும் அன்பர்கள் யாவரும்
இதில் முழுகலாம். அத்திருநாளில் இதினின்றும் எடுத்துவைத்த தீர்த்தம்
கெடாதிருத்தல் இன்றும் வெளிப்படை மார்க்கண்டேயர் தவஞ் செய்து
கங்கை கொண்டு வந்து பூசித்த பிலத்துவார வழி இன்றும் காணத்தக்கதாய்த்
திருமூலத்தானத்தையடுத்த வடக்குச் சுற்றில் பிட்சாடனமூர்த்தி
வைக்கப்பட்டிருக்கும் அறையில் ஆதி வில்வாரண்யேசுவரர் ஆலயத்துள்
தென்பாலுள்ளது. அவர் தம்முடன் பூசைக்காகக் கொணர்ந்த பிச்சி என்னும்
சாதிக்கொடி வழிவழியாய்த் தழைத்து ஒங்கித் திருமூலத்தானத்துத்
தென்சுற்றில் நின்று புஷ்பித்துவருவது இன்றும் காணத்தக்கதாம். இம்மலர்
சுவாமி அம்மையார் உபயோகத்திற்கு மட்டுமே யுரியது. இக்காரணத்தால்
இத்தலம் பிஞ்சிலாரண்யம் எனவும் வழங்கப்பெறும். இத்தல அம்பிகையாகிய
அபிராமி அம்மையார் - அமிர்தகடேசுவரர் ஆலயத்திற்கு அடுத்த
வெளிச்சுற்றில் தென்மேற்கில் கிழக்குநோக்கிய தனியாலயத்தினுள் விசேட
வெளிப்படாகிய அருட்பெருஞ் சிறப்புடன் எழுந்தருளியுள்ளார். இத்தலத்தே
அவதரித்து அம்மையாரிடம் பேரன்பு பூண்டு வழிபட்ட அபிராமிப்பட்டரின்
பொருட்டு அமாவாசையன்று பூர்ணசந்திரனைத் தோற்றுவித்த அம்மையாரது
பேரருட்சரிதம் பெருஞ் சிறப்பாக அறியப்படுகின்றது. அம்மையாரை அதன்
பொருட்டுத் துதித்து "உதிக்கின்ற செஞ்சுடர்" என்று தொடங்கிப் பாடிய
அபிராமியந்தாதியை இன்றும் பல அன்பர்கள் படித்துப் பயன்
பெறுகின்றனர். இவர் சந்ததி பாரதிவம்சமென இன்றுமுள்ளது.

     அமிர்த புஷ்கரணித் தீர்த்தம் - கிழக்குக் கோபுரத்தின் மேற்கிலும்
- அமிர்தகடேசர் கோயிலின் கிழக்கிலும், காலதீர்த்தம் - ஆலயத்திற்கு
மேற்கில் 50 கஜ அளவு தூரத்திலும் உள்ளன. இது ஆனைக்குளம் என்றும்
வழங்குகிறது. இத்தீர்த்தக்கரையில் எதிர்காலேஸ்வரர் அமர்ந்திருக்கும் ஒரு
ஆலயம் இருக்கிறது. தேவர்கள் கொணர்ந்த அமிர்தகுடத்தை எடுத்து
மறைத்துப் பின்னர் அவர்கள் வேண்டத் தந்தமையால் கள்ளவாரணப்
பிள்ளையார்
என இத்தலவிநாயகர் அழைக்கப்பெறுவர். இத்தலம் மேற்கு
நோக்கிய சன்னிதி. காலசங்கார உற்சவம் சித்திரை மாத பூரணை
தீர்த்தத்துடன் முடிவதான இரதோற்சவத்தில் 6-ம் திருநாளில்
கொண்டாடப்பெறும். இத்திருத்தலத்தில் பிரதிவருடம் கார்த்திகை
சோமவாரங்களில் மாலைக்காலங்களில் 1008 சங்காபிடேகம் வலம்புரிச்
சங்குகளுடன் ஆகமமுறைப்படி நடந்து வருவது அன்பர்கள் தரிசனம் செய்ய
வேண்டியதாகும். மிருத்யுஞ்சய ஓமம் - ஜபம் - சாந்தி முதலியன செய்ய
வேண்டிய உத்தம க்ஷேத்திரம் இதுவே. பக்தர்கள் செய்து சித்திபெற்று
வருகின்றார்கள்1.

     சைவசித்தாந்த சாத்திரங்கள் பதினான்கில் முதலாக வைத்தெண்ணப்
பட்ட திருவுந்தியாரருளிய திருவியலூர் உய்யவந்ததேவநாயனாரது
அருள்பெற்ற ளுடைய தேவநாயனாரின் மாணவராயும், அவரது ஆசிரியன்
பெயரையே தமக்குத் தீட்சா நாமமாகச் சூட்டப்பெற்றவராயும்,
அத்திருவுந்தியாரின் கருத்துக்களை அதன்வழி விளக்குவதாய்ச் சைவசித்தாந்த
சாத்திரங்களுள் இரண்டாவதாக வைத்தெண்ணப்படும் திருக்களிற்றுப்
படியாரை
யருளியவராயும் உள்ள (திருக்கடவூர்) உய்யவந்ததேவ நாயனார்
இத்தலத்திலே அவதரித்தவராவர்.

     இதற்கு மூவர் முதலிகளும் அருளிய தேவாரங்களுண்டு. பதிகங்கள்
ஐந்து. அன்பரொருவரியற்றிய உலா ஒன்றும் உண்டு. தென்னிந்திய
இருப்புப்பாதையில் மாயவரம் தரங்கம்பாடிக் கிளையில் திருக்கடையூர் என்ற
நிலையத்தினின்று


     1இத்தல விசேடக் குறிப்புக்கள் பலவும் தந்துதவியவர்கள்
திருத்தருமபுரவாதீனம் திருக்கடவூர்க்கட்டளை ஸ்ரீமத்இராமலிங்கத்
தம்பிரான்சுவாமிகளாவர்.