பக்கம் எண் :


மானக்கஞ்சாறநாயனார்புராணம்1145

 

பை - நஞ்சுப்பை. படம் என்றும் கூறுவர். "பைவாய்ப் பாம்பரை யார்த்த
பரமன்", "பையஞ் சுடர்விடு நாகப் பள்ளி" என்பனவாதி திருவாக்குக்கள்
காண்க. பைவனப்பேர் என்பது பாடமாயின் வன்னம் வனம் என
நின்றதெனக்கொண்டு, பையின் உருவத்தைத் தலையிற் கொண்ட பெரிய
என்றுரைத்துக்கொள்க. பையின் வனப்பு ஆகிய ஏர் (அமைப்பு) கொண்ட
என்றலுமாம். பட்டிகை - யோகபட்டம்.

     கேச வடப் பூணுநூல் - மயிர்க்கயிற்றாலாகிய பூணுநூல்.

     இதனைப் பஞ்சவடி என்பர். 894 பார்க்க. மயிர்க்கயிறுபூண்பது
மாவிரதச் சைவர்க்குச் சிறப்பாயுரியது. இவர்களது வடிவத்தைச் "சவந்தாங்கு
மயானத்துச் சாம்ப லென்பு தலையோடு மயிர்க்கயிறு தரித்தான் றன்னைப்,
பவந்தாங்கு பாசுபத வேடத் தானை" என்ற திருத்தாண்டகத்தாலும்
பிறவாற்றாலுமறிக. "சைவர் பாசுபதர்கள் வணங்குஞ் சண்பை நகராரே" (ஆளு
- பிள் - தேவாரம்) "பம்புசடைத் திருமுனிவர் கபாலக் கையர், பலவேடச்
சைவர்" (திருஞான - புராண. 1018) முதலியனவும் பிறவும் இவ்வகை
அகப்புறச்சமய வேடங்களை உணர்த்துதல் காண்க. இவர்கள் சிவபெருமானை
எலும்பணிந்தமூர்த்தியாக வழிபடுவர்.

     செம்மை மன அன்பர் - என மாற்றுக. அன்பர் பவம் மாற்றும்
திருநீறு
- திரு நீறு யாவர்க்கும் ஒன்று போலவே பவம்போக்கி முத்திதரும்
மருந்தாயினும், செம்மை மனத்தினை உடைய அன்பர்க்கே சிறப்பாயும்
விரைவாயும் அது பவம், மாற்றும் என்பதாம். ஒரே மருந்து
உடற்பக்குவமுடையார்க்கு விரைவிலும், அஃதில்லாதார்க்கு நாட்சென்று
நலந்தருமாறு காண்க. பவம் - பிறப்பு.

     பைவளர்பேர் - பூணநூலும் - என்பனவும் பாடங்கள். 23

     889. (வி-ரை.) ஒருமுன்கை.....சூத்திரமும் - முன்கைகளிரண்டில்
ஒன்றினில் நூலில் ஒருமணி கோத்தணிந்திருந்தனர்; அது எலும்புமணி;
அந்நூல் விளங்கித் தோன்றிற்று என்க.

     மறைநூற் கோவணம் - மாமறைக்கோவணம் (509), ஓங்குகோவணம்
(515) என்ற விடங்களிலுரைத்தவை பார்க்க. மறைகளும் அவற்றின்
அங்ககளாகிய நூல்களும் என்றிவற்றானாகிய கோவணம். "கான்மறைப்
பொருணூல்களாற் சமைத்த, சிவன் விரும்பிய கோவணம்" (540) என்றது
காண்க. சிவரகசியத்தைத் தன்னகத்துக் கொண்டு மறைத்துக்
கொண்டிருத்தலால் மறையினைக் கோவணம் என்றுபசரித்துக் கூறுதல் மரபு.

     அசையும் திருவுடை - மாவிரதிகள் கோவணம் விளங்கப்பூண்பதுவும்,
அதன் மேல் வரிந்து கட்டியதுபோல இருநுனியும் அசைந்துகாட்டும் சிற்றுடை
உடுப்பதுவும் மரபு.

     இருநிலத்தின்.....திருவடியும் - உம்பர்கள் கால்நிலந்தோயார் என்பர்.
இவர் உம்பர்பிரான் (886) ஆதலின் கொண்ட வேடத்திற்கேற்ப
நிலத்தின்மிசைத் தோய்ந்த திருவடியுடன் வந்தனர் என்றார். இவர் எல்லாப்
பொருள்களுள்ளும் நிறைந்து பதிந்து கிடப்பதன்றிச் கால்நிலந்தோய
வெளிப்பட்டு நடப்பரல்லாரயினும் அவ்வாறு வந்ததுபற்றி அருமைப்பட
இருநிலத்தின் மிசைத் தோய்ந்த என்று பாராட்டினார். இவர்
உத்தராபதியாராய் வந்தவிடத்திலும் "பயன்றவத்தாற் பெரும்புவியும்
பாததாமரைசூட" (சிறுத் - புரா. 34) என்று இவ்வாறே பாராட்டிக் கூறுதல்
காண்க.

     எழுதரிய திருவடி - படி எழுதலாகாத அழகுடைய திருவடி.
"கோவணமுடுத்த வாறுங் கோளர வசைத்த வாறுந், தீவணச் சாம்பற் பூசித்
திருவுரு விருந்தவாறும், பூவணக் கிழவ னாரைப் புலியுரி யரைய னாரை,
யேவணச் சிலையினாரை யாவரே எழுதுவாரே" தனித்திருநேரிசை (2),
"இப்படிய னிந்நிறத்த னிவ்வண்ணத்த னிவனிறைவனென் றெழுதிக் காட்டொ
ணாதே" (வினாவிடைத் திருத்தாண்டகம் 10) முதலிய திருவாக்குக்கள் காண்க.
அருள்நிறைவு - சிவசத்தி -