பக்கம் எண் :


1146 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

 

     என்பதனைத் திருவடியாக உபசரிப்பர். ஒரு பொருளை எப்போதும்
கண்டு கொண்டிருக்க விரும்புவோர் அதனை ஓவியமாக எழுதி முன்வைத்துக்
கொள்ளுதல் உலக வழக்கு. இதுபற்றியே உலகர் பல உருவப்படங்களை
மனைகளில் அணி பெற வைப்பர். இறைவனது திருவடியை நேர்காண
வல்லார் உள்ளே காணுவதன்றி (860) எழுதவைத்துக்கொள்ளுதல் இயலாது
என்பதாம். "காணாதார் மலர்த்தாள் பூண்டு வந்திறைஞ்சுங் காலமிது" (ஏயர் -
புரா - 334) முதலியவை பார்க்க. எழுதும் ஓவியம் படிச்சந்தம் எனப்படும்.
"படிச்சந்தமாவது ஒன்றன் வடிவுடைத்தாய் அது வென்றே கருதப்படு
மியல்பையுடையது" என்பர் (திருக்கோவை - 78) பேராசிரியர். மொழிநடை
யெழுத லரிதென விலக்கல், அவயவமெழுத லரிதென விலக்கல் என்ற
அகப்பொருட்டுறைகளின் கருத்துக்களையும் இங்கு வைத்துக் காண்க.
இக்கருத்தினை உட்கொண்டு, "ஓவியத் தெழுத வொண்ணா வுருவத்தாய்"
என்றது கம்பர் பாட்டு. திருவடியை உட்கொண்டிருத்தலிற்போலும் மறையும்
எழுதரியதென்பது.

     திருஅடியில் திருப்பஞ்ச முத்திரை - முத்திரை - கை - கால்
முதலிய அங்கங்களில், சில குறித்தபொருள்களின் வடிவமா யமையும்
வரைக்கீற்றுக்களின் கூட்டத்தை முத்திரை என்பது உடற்கூற்று நூல் மரபு.
பஞ்சமுத்திரை - இவை பதுமம், சங்கம், மகரம், சக்கரம், தண்டம் என்பன.
பஞ்சாயுதம் என்னும் தண்டு, வாள், சங்கு, சக்கரம், வில் என்றும் கூறுப.
இவை காலில் விளங்கப் பெறுவது யோகிகள், ஞானிகள் முதலிய
பெரியோர்களது உடலிலக்கணங்களில் ஒன்றென்பர்.

     அசைந்த - திருவுடை - திருவடிவில் - என்பனவும் பாடங்கள். 24

     890. (வி-ரை.) தழல் முடு பொடி என்ன என்று பொருளுக்
கேற்பமாற்றுக. தழல் - இறைவனது திருமேனிப் பொலிவுக்கும், அதனை
உட்பொதிந்து மேல் மூடும் சாம்பற்பொடி - அவரணிந்த திருநீற்றுப்
பரப்புக்கும் உருவம்பற்றி வந்த உவமை. "இவ்வண்ண மிருக்கு மெங்க
ளிறைவண்ண வடிவு மந்தச், செவ்வண்ணமேனி பூத்த திருவெண்ணீறதுவும்”
(மண் - பட - 108) என்ற திருவிளையாடற் புராணத்தினுள் இக்கருத்து
விரிக்கப்பட்டமை காண்க. நீறுபூத்த நெருப்பு என்னும் வழக்கும், "நீறாகி
நீறுமிழு நெருப்புமாகி" (திருமாற்பேறு - 5) என்ற திருத்தாண்டகமும் காண்க.

     திருநீற்றின்..பான்மையராய் - பரப்பாய்த்திருநீற்றை அணிந்த
பான்மை என்று கூட்டி உரைக்க. நீற்றினை மேனி முழுதும் பரக்கப் பூசுதல்
மாவிரதர் மரபு.

     பொலிந்த - தேற்றமாய் விளங்கிய. "சேலுங் கயலுந் தினைக்குங்
கண்ணாரிளங் கொங்கையிற் செங்குங்குமம், போலும் பொடியணி
மார்பிலங்குமென்று புண்ணியர் போற்றிசைப்ப" (திருப்பல்லாண்டு - 8)
என்றபடி தம்மாற் காதலிக்கப்பட்ட இளமகளிர் மேனியிற் கண்ட பூச்சுக்,
காமுகரை வசமாக்குதல்போல, இத்திருநீற்றின் பரப்பு நாயனாரை வசீகரித்தது
என்க. அவ்வாறு அதன் வயப்பட்ட "மனச்செவ்வன்பர், பவமாற்றுந்
திருநீற்றுப் பொக்கணமும்" கண்டார்; தொண்டர்க்கே ஏவல்செயும் தொழிலின
(873) ராகிய அவர் இவற்றில் ஈடுபட்டாராய் உய்ந்தொழிந்தேன் (891)என
விரதியாரது குறிப்பறிந்து அவர் வேண்டுமதனைக் கொடுக்க முற்பட்டனர்
என்பதாம்.

     படிநீடுதல் - என்றும் அழியாதிருத்தல். தன்மை ஓங்குதல்
என்றுரைப்பாருமுண்டு.

     கொடி நீடு மறுகு - கொடி - வெண்கொடி. கேதனம் (83),
வெண்கொடி (243), கொடியும், (323), சோதிவெண்கொடிகள் (474)
என்றவிடங்களிலுரைத்தவை பார்க்க.

     குளிர்கமலத்து அடி - நீரிலும் சேற்றிலுமே நின்று வளர்வதனால்
தாமரைக்குக் குளிர்ச்சி உரிய பண்பாதலின் குளிர்கமலம் என்றார். குளிர் -
குளிர்விக்கும் எனப் பிறவினையாகப் பொருள்கொண்டு, குளிரடி என்று
கூட்டித் தன்னை அடைந்தார்க்குப் பிறவி வெயிலின் வெப்பம் போக்கி
நிழல்தந்து குளிர்விக்கும் திருவடி என்றலுமாம்.