பக்கம் எண் :


மானக்கஞ்சாறநாயனார்புராணம்1149

 

     தேன் நக்க மலர் - தேன் - வண்டு. நறவு என்றலுமாம். நக்க -
புதிதாக அலர்தல் குறித்தது. "நகைக்கும் பதத்தி னுடன்பறித்த" (முருகர் -
புரா - 7), " அலரும்வேலை" (559) முதலியவை பார்க்க.

     திருமகள் - திருமகட்கு மேல்விளங்கும் (881) என்றவிடத்துரைத்தவை
பார்க்க. நாயனாருக்குப் பிழைக்குநெறி உதவி (876) இறைவனது அருளாகிய
திருவைத் தேடித்தரும் மகள் என்ற குறிப்புமாம்.

     பானல் கந்தரம் மறைத்து வரும் அவர் - பானல் - நீலமலர்.
பானற்கந்தரம் - நீல மலர்போன்ற நிறமுடைய திருநீலகண்டம். தமது
திருநீலகண்டத்தை மறைத்து மாவிரதராகிய வேடம் பூண்டு வந்தவர் என்க.

     பணிவித்தார் - பணியச்செய்தனர். பணியுமாறு பணித்தனர். மகளார்
தாமே அடியார்களைப் பணியும் நியதியுடையா ராயினும், இங்கு
மணப்பெண்ணாகியதற் கேற்பப் பெரியோர் பணித்தபடி செய்யும் நிலை
குறிக்கப் பிறவினையாற் கூறினார். வரும்பாட்டில் இதுபற்றியே "தாழ்ந்தெழுந்த
மடக்கொடி" என்றதும் காண்க.

894. தஞ்சரணத் திடைப்பணிந்து தாழ்ந்தெழுந்த மடக்கொடிதன்
மஞ்சுதழைத் தெனவளர்ந்த மலர்க்கூந்தற் புறநோக்கி,
யஞ்சலிமெய்த் தொண்டரைப்பார்த், "தணங்கிவடன்
                                    மயிர்நமக்குப்
பஞ்சவடிக் கா" மென்றார் பரவவடித் தலங்கொடுப்பார்.
26

     (இ-ள்.) பரவ.....கொடுப்பார் - தம்மைத் துதிப்பவர்களுக்குத் தமது
திருவடித்தலம் கொடுப்பவராகிய சிவபெருமான்; தம் சரணத்திடை...நோக்கி -
தமது திருவடிகளில் வீழ்ந்து வணங்கி எழுந்து நின்ற மடமையுடைய
கொடிபோல்வாரது மேகம் தழைத்ததுபோலத் தழைத்து வளர்ந்த மலரணிந்த
கூந்தலின் புறத்தை நோக்கி; அஞ்சலி...பார்த்து - கும்பிட்டு நின்ற உண்மைத்
தொண்டனாரைப் பார்த்து; "அணங்கு....ஆம்" என்றார் - "அணங்குபோலவா
ளாகிய இவளது மயிர் நமக்குப் பஞ்சவடிக்கு ஆகும்" என்று சொன்னார்.

     (வி-ரை.) மஞ்சு....கூந்தல் - மஞ்சு - மேகம். தழைத்தல் -
தாவரவுயிர்கட்குரிய தளிர்த்து வளர்தலாகிய செயலை மேகத்திற்கேற்றி,
மேகம் தாவர வகையுட்பட்டதுபோல உவமித்தார். மேகத்தின்
நீர்ச்செறிவினாலாகிய கருமையும், விரிவும், அசையும் கூடிய தோற்றம்
தழைத்த மரம்போன்றிருத்தலின் இவ்வாறு கூறினார். தழைத்தாலென
எனற்பாலது தழைத்தென என நின்றது. தழைத்தாற் போல வளர்ந்த
என்க. பயனும் மெய்யும் உருவும்பற்றி வந்த இல்பொருள் உவமை. வளர்ந்த
- செறிந்து வளர்ந்த. மேகம் கூடிச்செறிந்தால் உலகுதழைக்கச் செய்யும்;
இங்கு இக்கூந்தல் வளர்ந்ததனால் அருண்மழை பெய்தற்குக் காரணமாயிற்று;
நாயனார் உய்ந்தனர்; அது கண்டு "செழும்புவனங்கள்" உய்ந்தன எனப்பயனும்
மெய்யும் பற்றிய உவமையாதல் கண்டுகொள்க. "பிழைக்குநெறி தமக்குதவ"
(876), "இந்தச் செழும் புவனங்களில் ஏறச்செய்தோம்" (897) என்றதனாற்
பயன் போந்தமையும், "இருள்செய்த கருங்கூந்தல்" (895) என்றமையால்
உருவுவமையாதலும் காண்க.

     கூந்தற் புறம் நோக்கி - கூந்தலினது நீளம், செறிவு, கருமை முதலிய
புறத்தோற்றம் பற்றியே " இது பஞ்சவடிக்கு ஆம்" என்கின்றாராதலின் அது
குறிக்கக் கூந்தல் நோக்கி என்னாது கூந்தற் புற நோக்கி என்றார்.
நோக்குதல் - ஊன்றிப் பார்த்தல். இங்கு ஊன்றிய நோக்கத்தினை
வெளிப்படுத்தாது, வெளிப்பார்வைத் தொழில் மட்டும் காட்டப்பட்டமை
குறிக்கவும் புறநோக்கி என்றார். மானக்கஞ் சாறரது அன்பை உலகுக்கு
அறிவித்து உய்வித்தல் (897) அவரது அகநோக்கம் என்பது பின்னர்க்
காண்க. "கழன்மனத்துக், கொண்ட கருத்தி னகநோக்கும்.